சந்தணுவின் மகன் தேவவிரதன்
தனது மனைவியான கங்கை, தனது குழந்தையை எடுத்துச் சென்ற நாள் முதல் சந்தனு மிகவும் சோகத்தில் வாழ்ந்தான். எனினும் தனது சோகத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். கங்கை தான் சொல்லியபடி தனது மகனுடன் எப்போது வருவாள் என்ற ஏக்கத்தில் தினமும் கங்கையின் கரையில் சென்று பல மணி நேரங்கள் பித்துப் பிடித்தவன் போல அமர்ந்து இருப்பான்.
அக்கணம் சோகத்தில் அவனையும் அறியாமல் தனது மனைவியையும், குழந்தையையும் நினைத்துத் தாரை, தாரையாகக் கண்ணீர் வடிப்பான். இப்படியே பதினாறு ஆண்டுகள் சந்தனு தனது அன்பு மகனின் வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
ஒரு நாள் காலையில் சந்தனு சந்தியா வந்தனம் செய்வதற்காக கங்கைக் கரையை அடைந்தான். அப்போது கங்கையில் தண்ணீர் வற்றியது போல இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.
"கங்கை எக்காலத்திலும் வற்றாதவள் ஆயிற்றே! இது நடக்குமா?" என்று தன்னையே அவன் கேட்டுக் கொண்டான். அப்போது இடியைப் போன்ற ஒரு பேரொலியைத் தனது காதுகள் கொண்டு கேட்டான். சற்றே சுதாரித்துக் கொண்ட சந்தனு, பிறகே அது இடியின் ஓசை அல்ல, வில்லின் நாணொலி என்பதைப் புரிந்து கொண்டான். அவ்வாறு ஒலி கேட்ட திசையை நோக்கி விரைந்தான்.
அங்கு ஒரு இளைஞன், தனது பாணங்களைக் கொண்டே ஒரு அணையை உருவாக்கி கங்கையின் பிரவாகத்தை தடுத்துக் கொண்டு இருந்தான். பிறகு சற்று நேரம் கழித்து, ஒரே ஒரு பாணம் கொண்டே, மிக எளிதாகத் தான் கட்டிய அந்த பலம் கொண்ட அணையை, பெரும் ஓசை ஏற்பட உடைத்து எறிந்தான். இப்படிப் பல முறை அந்த இளைஞன் விளையாட்டாக செய்து கொண்டு இருப்பதைக் கண்டான் சந்தனு.
அப்போது அந்த இளைஞனின் வில் ஆற்றலைக் கண்டு மிகவும் வியந்தான் சந்தனு. எனினும், ஒரு இளைஞன் தனது மனைவியான கங்கையின் பிரவாகத்தை தடுத்து விளையாடுவதை சந்தனுவால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. உடனே அந்த இளைஞன் மீது கோபம் கொண்டு, அவனைத் தடுக்க அரண்மனைக்கு விரைந்து சென்று தனது பாணங்களையும், வில்லையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவ்வாறே, கண்களில் கோபம் வெளிப்பட அந்த இளைஞன் இருக்கும் இடத்தை அடைந்து, அவனுடன் போர் செய்ய அறைகூவல் விடுத்தான்.
அந்த இளைஞனும், சந்தனுவின் அறைகூவலால் மகிழ்ந்து யுத்தம் செய்யத் தொடங்கினான். அக்கணமே, இருவரது பாணங்களும் காற்றை கிழித்துக் கொண்டு ஆகாயத்தில் மோதிக் கொண்டது. அப்போது, இருவரது வில்லின் நாண் ஒலியும் விண்ணை முட்டியது. அதனால், கங்கைக் கரையின் வனங்களில் இருக்கும் பிராணிகள் எல்லாம், பிரளயம் தான் வந்து விட்டதோ! என நினைத்து கதறிய படி ஓடவும் தொடங்கின. அப்போது அந்தப் பெரும் ஓசையைக் கேட்ட கங்கை அங்கே தோன்றினாள்.
"தயை கூர்ந்து இருவரும் யுத்தத்தை நிறுத்துங்கள்" என்றாள்.
- தொடரும்

No comments:
Post a Comment