சந்தனுவின் கதை
குரு அரசனுக்கு பிரதீபனும், பிரதீபனிடம் இருந்து பிறந்த தேவாபி, பால்ஹிகர், சந்தனு என்ற மூன்று மக்களில் மூத்தவனான தேவாபி தோல் நோயின் காரணமாக ஆட்சி உரிமை மறுக்கப்பட்டு காட்டில் தவம் செய்யச் சென்றான். தன் மூத்தோனுக்கு இல்லாத உரிமை தனக்கும் வேண்டாமெனக் கூறி பால்ஹிகரும் அவர் கூடவே சென்றார்.
(பால்ஹிகர் குருக்ஷெத்ர போரில் துரியோதனனுக்காக போரிட்டார் என்பதை நாம் பின்னாளில் பார்க்கப் போகிறோம்)
அதன் காரணமாக இளையவன் சந்தனு அரசாளும் உரிமையைப் பெற்றான்.
![]() |
| தேவாபி வானப்ரஸ்தம் சென்றார் |
இப்படியாக அரசாட்சியைப் பெற்ற அந்தச் சந்தனு ஒரு நகரத்தை ஆளுதல் போல பெரும்பாலான பாரத தேசம் முழுவதையும் குறை இல்லாமல் கட்டி ஆண்டான். அவன் கைகளில் வில் ஏந்தினால் பகை அரசர்கள் அவனது காலில் வந்து விழுவார்கள். யுத்தகளத்தில் என்றுமே வெற்றியை மட்டுமே பெற்றவன் அவன்.
| சந்தனு |
அத்தனை சிறந்த ஒரு வீரனாகத் திகழ்ந்தான். அவன் வீரனாக மட்டும் அல்ல, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நல்ல அரசனாகவும் திகழ்ந்தான். கவிஞர்கள் போற்றிப் பாடும் முழு மதியிடமும் குறை உண்டு. ஆனால், சந்தனுவிடம் எக்குறையும் இல்லை. அவன் நேர்மையாகவும், சத்திய வழியிலும் எப்போதும் நடந்தான். அதனால், அனைவராலும் அவன் புகழப் பெற்றான்.
உலகம் முழுவதற்கும் சூரியன் ஒருவன் தான். அதே போல் பாரத தேசத்தில் அப்போது சந்தனு ஒருவன் தான் பேரரசனாகத் திகழ்ந்தான். எண்ணற்ற தேசங்களை எல்லாம் வெற்றி கொண்டான். வாழ்க்கையின் பெரும் பகுதியை யுத்த களத்திலேயே கழித்தவன் அவன். எனினும் தனது நாட்டு மக்களை குறை இல்லாமல் பார்த்துக் கொண்ட அவனுக்கு உள்ளே ஒரு பெரும் குறை இருந்தது.
அது யாதெனில், வாழ்வின் பெரும் பகுதியை சந்தனு யுத்த களத்திலேயே கழித்ததால், அவன் திருமண வயதைக் கடந்தும், திருமணம் செய்யாமல் இருந்தான். அதனால், வாரிசு இன்றித் தவித்தான். "தான் கட்டிக் காத்த பாரத தேசத்தை இனி யார் தனக்குப் பின் ஆளப்போகிறான்?" என்ற கேள்வி அவன் முன் நின்று அவனை தினமும் துளைத்தது.
அதனால், நிம்மதி இழந்தான். அவன், அந்நிலையிலேயே வருத்தத்துடன் இருக்க நாட்கள் மெல்ல நகர்ந்தன.
- தொடரும்

No comments:
Post a Comment