சந்தனுக்கு வந்த சங்கடம்
கங்கையின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனு வியப்பும், அதிர்ச்சியும் ஒருங்கே சேரப் பெற்றான். அந்த உணர்வுடனே அவன் கங்கைப் பார்த்து, "நீ கங்கா தேவியா? தேவர்களின் வேண்டுகோளா? ஒன்றும் எனக்குப் புரிய வில்லையே" என்றான். அக்கணம் கங்கை இன்றும் விரிவாக சந்தனுவிடம் விளக்கத்தை அளிக்கத் தொடங்கினான்,
"அரசே! முன்னொரு காலத்தில் பிரமன், இந்திரனுக்கு உதவுவதற்காக எட்டு வசுக்களைப் படைத்தார். அவர்கள் எட்டு பேரும் ஒரு முறை, வான் வழியாகச் சென்று கொண்டு இருக்கும் பொழுது வஷிஸ்டரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கே கேட்டதை எல்லாம் தரும் நந்தினிப் பசுவைக் கண்டார்கள். அந்த நந்தினி வேறு யாரும் அல்ல, அவள் காமதேனுவின் மகள் ஆவாள்.
வசுக்களின் தலைவனான தியூ நந்தினியின் தெய்வத் தன்மையால் கவரப்பட்டு, அதனை அபகரிக்க நினைத்தான். அதன் படியே தன்னுடன் வந்த தனது சகாக்களிடம் 'துறவிக்கு எதற்கு இந்தப் பசு? நாம் இதனை அபகரித்துச் செல்வோம். இது நம்மைப் போன்ற தேவர்களிடம் தான் இருக்க வேண்டும். அதுவே முறை!' என்றான். அது கேட்டு, அவனுடன் இருந்த மற்றவர்களும், தங்கள் தலைவனானான தியூ வின் எண்ணத்தை ஆமோதித்தார்கள். அந்த திட்டத்தை உடனே செயல் படுத்தி மீண்டும் நந்தினியை தேவலோகத்துக்கு இழுத்து வந்தார்கள்.
ஆசிரமம் திரும்பிய வசிஷ்ட மாமுனிவர் தனது ஞானக் கண் கொண்டு நடந்ததை அறிந்தார். அக்கணமே தனது நந்தினிப் பசுவை திருடிய வசுக்களை சபிக்கத் தொடங்கினார். அப்போது வசுக்கள் இருக்கும் திசை நோக்கி அவர் ,"வசுக்களே! நான் உங்கள் எண்மருக்கும் சாபம் தருகிறேன், நீங்கள் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்கக் கடவீர்கள்!" என்றார்.
வசிஷ்டர் தங்களுக்கு சாபம் கொடுத்ததை அறிந்த அந்த எட்டு வசுக்களும் கலங்கித் தவித்தார்கள். அக்கணமே, தங்கள் தவறை உணர்ந்தவர்களாக, வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு விரைந்தார்கள். அவரைக் கண்ட மாத்திரத்தில் அவரது பாதங்களில் விழுந்தார்கள், கதறி அழுதார்கள்.
அப்போது வசிஷ்டரிடம் அவர்கள்," ஐயனே! ரிஷிகளில் சிறந்தவரே! சத்தியத்தின் ஸ்வரூபமே! அறியாமல் நாங்கள் பிழை செய்து விட்டோம். தந்தையைப் போன்றவரே, எங்களை மன்னித்து சாபத்தை நீக்கி அருளக் கூடாதா? சிறியவர்கள் தவறு செய்தால், உம்மைப் போன்ற பெரியவர்கள் அதனை பொறுத்துக் கொள்ளுதல் இயல்புதானே! அப்படி இருக்கத் தாங்கள் எங்களைப் போன்ற சிறியவர்களை சபிப்பது தகுமோ? எங்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள் ஐயனே!" என்று கண்கலங்க வேண்டினார்கள். கண்ணீரால் அப்பெரும் முனிவரின் பாதத்தைக் கழுவினார்கள்.
அக்கணம் வசிஷ்டரின் உள்ளம் மனம் உருகியது. அப்போது அவர்களைப் பார்த்து, 'இந்தக் குற்றத்துக்கு தியூவே பொறுப்பு. மற்றவர்கள் அவனுக்குத் துணையாக இருந்தீர்கள். அதனால் தியூ மட்டும் நீண்ட காலம் மனிதனாக வாழ்வான். அங்கே அவன் உலகம் போற்ற வாழ்வான். ஆனால், விதியின் காரணமாக தர்மத்தை அறிந்தும் கூட எப்போதும் அதர்மத்தின் நிழலில் நின்று, இறுதியில் வேதனையான மரணத்தை தழுவுவான். அவன் சாவுக்கு ஒரு திருநங்கை காரணமாக இருப்பாள். தியூவைத் தவிர மற்றவர்களுக்கோ பூவுலகில் பிறந்தவுடன் சாபம் நீங்கும்" என்றார்.
அவ்வாறு சாபம் பெற்ற எட்டு வசுக்களும் தேவர்களின் ஆணைப்படி என்னிடம் வந்தார்கள்.' பூவுலகில் நானே அவர்களுக்குத் தாயாக இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். சாபத்தை நீக்கவே அவர்கள் பிறந்தவுடன் ஆற்றில் வீசிக் கொன்றேன்.
ஆனால், இப்போதோ வஷிஸ்டரின் சாபம் நிறைவேறும் படியாக, முன்ஜென்மத்தில் வசுக்களின் தலைவனாக இருந்து, இப்போது எனது பிள்ளையாகப் பிறந்து இருக்கும் இக் குழந்தையை தாங்கள் காப்பாற்றி விட்டீர்கள். எனினும், இப்போது இந்தக் குழந்தையை நான் எடுத்துச் செல்கிறேன்.
![]() |
| சந்தனுவை விட்டு சென்ற கங்கை |
- தொடரும்

No comments:
Post a Comment