Wednesday, February 19, 2014

சத்ரபதி சிவாஜி

மிக சாதாரண நிலையில் இருந்து தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இந்த உலகை வென்றவர்கள் தான் சரித்திரத்தில் பெயர் பெறுகின்றனர். அப்படிப் பட்ட உன்னத நிலையை எய்தியவர்கள் மிகவும் சிலரே, அந்த சிலரில் குறிப்பிடத் தகுந்தவர் மன்னர் சத்ரபதி சிவாஜி ஆவார்.

சத்ரபதி சிவாஜி மகராஜ்

இரும்பைவிட வலிமையான மன உறுதி, கூர்மையான அறிவுத் திறன், தன்னை போன்றே சிந்திக்கவும், செயலாற்றவும் கூடிய வலிமையான படையை உருவாக்கிய சிந்தனை இவையெல்லாம் தான் சத்ரபதி சிவாஜியை மாபெரும் வெற்றி வீரனாக மாற்றியது.

  1. முதன் முதலில் கெரில்லா போர்முறையை அறிமுகப்படுத்தியவர்.
  2. 16 வது வயதிலேயே தன்னுடைய முதல் கோட்டையைப் பிடித்தவர்.
  3. தான் சந்தித்த எந்த போரிலும் தோற்காதவர்.
  4. அவுரங்கசீப்பினால் கடைசி வரை தோற்கடிக்கப்படாதவர்.
  5. மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை தன்னுடைய மிகச் சிறிய படையை வைத்து சிதறடித்தவர்.
  6. உளவுத் துறையை மிகத் திறமையாகப் பயன்படுத்திவர்.
  7. வலிமையான கப்பல் படையை உருவாக்கக் காரணமாக இருந்தவர்.
  8. ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர், இருந்தும் அனைத்து மதங்களையும் சரி சமமாக மதித்தவர்.
  9. பெண்களைப் பெரிதும் மதித்தவர்.
  10. வாழ்வில் மிக மோசமானத் தருணங்களிலும் துவண்டு போகாமல் அசாதாரணமான துணிச்சலையும், போராட்ட குணத்தையும் காட்டியவர்.


அமெரிக்க - வியட்னாம் போர் முடிந்த பின்பு பாரதம் வந்த அப்பொதைய வியட்னாம் தலைவர், முதலில் பார்க்க விரும்பியது சத்ரபதி சிவாஜியின் சமாதியை தான். அங்கு வந்த அவர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி விட்டு அதற்கான காரணத்தை அவர் சொன்னார்.

வல்லரசான அமெரிக்காவை எதிர்க்கும் துணிச்சலை அவர்கள் (வியட்நாமியர்கள்) பெற்றது சிவாஜியின் மூலம் தான். அவருடைய கெரில்லா போர்முறை, அவர் பயன்படுத்திய சாதுரியமான உத்திகள், சாகசங்கள் அவர்களுக்கு தெம்பும், உற்சாகமும் தந்து அமெரிக்காவை வீழ்த்த பேருதவி செய்தது. அதை நினைவு கூர்ந்தே அவர் பாரதம் வந்ததும் சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று சத்ரபதி சிவாஜியின் 387வது பிறந்த நாள்.

Thursday, February 13, 2014

கொய்யா மரம்

அப்போது ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன் என்று ஞாபகம். பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக குடி வந்தார்கள். அந்த வீட்டுத் தாத்தா மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் வீடு கட்டி குடி வந்த போது அந்த வீட்டு வாசலில் ஒரு கொய்யா மரம் இருந்தது. ஆனால் அது எப்போதும் வாடியே தான் இருக்கும். அந்நியன் படத்தில் கலாபவன் மணி வாடகைக் கேட்டு கொடுமைப்படுத்தும் ஒல்லிக் குச்சி மாமி போல இருக்கும்.

ஆனால் அவர் வந்ததும் அந்த இடத்தை அப்படியே மாற்றிவிட்டார். சீக்கு வந்த மரம் படு ஷொக்காக மாறியது. நல்ல இயற்கை உரமிட்டு அதை தெம்பாக்கி விட்டார். பல பூச்செடிகளை நட்டு வளர்த்தார். கொய்யா பழம் காய்த்த போது அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.


நான் கொய்யா அடிக்க முயற்சி செய்யும் போதெல்லாம், எங்கிருந்து பார்ப்பார் என்று தெரியாது, "ஆருடா அவன் கொய்யா அடிக்கிறது" நான் தான் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திட்டுவதும் அவருக்குத் தெரியாமல் கொய்யா அடித்துத் திண்பதும் ஒரு ஆனந்தம் தான். ஆனால் அவர் மகனுக்கு மரம் வளர்ப்பதில் பெரிய நாட்டம் ஒன்றும் இல்லை.

மழை பெய்யும் காலத்தில் கொய்யா நன்றாக விளையும், வெயில் காலத்தை விட மழைக் காலங்களில் விளையும் கொய்யா பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பது என் அனுபவம்.

என்ன தான் திட்டினாலும் நான் கொய்யா பறித்து தின்பதில் அவருக்கு ஒரு திருப்தி தான். தான் வளர்த்த ஒரு மரத்தின் பயனை இவன் ஒருவனாவது பெறுகிறானே என்ற சந்தோஷம். ஒரு பதிவை எழுதிவிட்டு அதை யாராவது படித்தார்கள் என்பதை பார்க்கும் போது ஒரு திருப்தி வரும் பாருங்கள் அது போன்றது. அவர் அந்த கொய்யா மரத்தை மிகவும் நேசித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் விடியர்காலை நேரம் பக்கத்து வீட்டு அழுகையும், ஓலமும் எங்களை எழுப்பி, தாத்தா இறந்த செய்தியையும் சொன்னது. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரை ஏமாற்றி விட்டு கொய்யா பறிக்கும் ஒரு குறும்பும், பெரிதாக ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும் என்னிடம் இருக்கும்.

ஆனால் அவர் இறந்து விட்டார் என்று சொன்ன போது கடைசியாக பார்க்கப் போன போது ஒரு சின்னக் குற்ற உணர்ச்சி இருந்தது. அந்த வயதில் அது என்ன விதமான உணர்ச்சி என்றே தெரியவில்லை. அப்பா அழைத்த போது வரமாட்டேன் என்று கூட மறுத்தேன், கட்டாயப் படுத்து அழைத்துப் போனார். அவர் ஆசைப்பட்ட ஏதோவொறு கொய்யாவை நான் திருடி தின்றுவிட்டேனா என்று கூட எண்ணினேன்.

அவர் இறந்த பிறகு அந்த மரம் மிக மிகச் சொற்பமாக விளைய ஆரம்பித்தது. அடுத்த மழைக்காலத்திற்காக காத்திருந்தேன். இந்த முறை குறைவான மழை தான் பொழிந்தது. அவரில்லாமல் கொய்யா அடிக்கும் சுவாரசியமும் குறைந்தது. அவ்வபோது கொய்யா அடித்து சாப்பிட்ட போது சுவை குறைந்தது போன்ற உணர்வு.

சில மாதங்கள் போன பின்பு அந்த கொய்யா மரம் மீண்டும் தன்னுடைய பழைய சீக்கு வந்த நிலையை அடந்தது. தாத்தாவின் மகனும் ஒரு தோட்டக்காரரை வைத்து உரமெல்லாம் போட்டுப் பார்த்தார். ஆனால் அந்த கோய்யா மரம் நல்ல நிலையை அடையவில்லை.

ஒரு நாள் பள்ளியை விட்டு வந்த போது அந்த மரம் இல்லை.

"தேவையில்லாமல்" இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதாக சொல்லி வெட்டி விட்டார்கள் என்று அப்பா மூலம் தெரிந்துக் கொண்டேன்.

மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டத் தருணம் அது. 

ஒரு நாள் காலை எழுந்து வந்து தூக்கக் கலக்கத்தில் வெளியே வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, என் வீட்டிற்கு வெளியே முற்றத்தில் ஒரு சின்ன கொய்யா மரம் துளிர்த்து என்னைப் பார்த்து சிரித்தது.

Monday, February 10, 2014

கூத்து - 10/2/2014

தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பல்வேறு விதமான காரணங்களால் முடங்கியிருக்கிறது. சாதாரணமாகவே நமது அரசியல்வாதிகள் அங்கே போய் தூங்குவார்கள் அல்லது போகவே மாட்டார்கள். இப்போது அங்கே விவாதத்துக்கே இடம் இல்லாத படி அமளிகளாலும்,  கூச்சல் குழப்பங்களாலும், ஆளும் கட்சியின் மெத்தன போக்காலும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

மகளிர் மசோதா, தெலுங்கானா விவகாரம், வகுப்புவாத மற்றும் வன்முறை தடுப்பு மசோதா- போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை இப்போது (மிக குறுகிய காலமேயுள்ள) நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதை பார்க்கும் போது அதன் அக்கறை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் உள்ளது என்பது தெளிவு. இது போன்ற மசோதாக்களை நிறைவேற்றி அதன் மூலம் ஒரு சில எம்.பி சீட்டுகளை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மூலம் அந்தந்த மசோதாகள் மீது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று அதனுடைய நன்மை- தீமைகள் ஆராயப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குத் தான் நாம் நம்முடைய வரிப் பணத்தையும், அதிகாரங்களையும் தந்து அனுப்பியிருக்கிறோம். 

அப்படி செய்ய ஆளும் கட்சி அதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். எதிர்கட்சிகளும் அதற்கு துணை புரிய வேண்டும். அது தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வரும். 

*****************************************************
இந்தியாவில் விற்கும் குறைந்த விலை கார்களின் பாதுகாப்பு தன்மைப் பற்றி ஒரு நிறுவனம் ஆராய்ந்து தன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

எந்தவொரு நிறுவனமும் இந்த சிறிய வகை கார்களில் சரியான பாதுகாப்பு முறைகளை அளிக்கவில்லை. ஒவ்வொரு கார்களிலும் காற்று பை (Air bag) எனப்படும் விபத்து பாதுகாப்புக் கருவி இருக்க வேண்டும். விபத்தின் போது அந்த காற்றுப் பை விரிந்து உயிர் சேதாரத்தை தவிர்க்க உதவும். அந்த பாதுகாப்புக் கருவியை எந்த நிறுவனமும் தருவதில்லை. இதே நிறுவனங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது இந்த பாதுகாப்புக் கருவி இல்லாமல் விற்பனை செய்வதில்லை.

மேலும் அவற்றின் பாகங்களும், வண்டியின் கட்டுமானத்திற்கு பயன்படும் உலோகம் லேசானதாக இருக்கிறது. இதனால் ஒரு விபத்தின் போது அவை அப்பளமாக நொறுங்கி பயனாளர்களுக்கு அதிகமான சேதாரம் தருகிறது.

இந்தியர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இதே வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் விதிகளை கடைப் பிடிக்கும் நிறுவனங்கள் இங்கே அவற்றை வசதியாக மறந்துவிடுகின்றன.

நமது மக்களுக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை அதிகம். ஆனால் அது தான் இப்போது உள்ள பல பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. எந்த ஒரு விதியையும் சரியாக பின்பற்றுவதில்லை. இது போக்குவரத்து சிக்னலில் இருந்து நாடாளுமன்ற விவகாரம் வரை பொருந்தும்.

இந்த "Careless" தன்மை நமது சாபக்கேடு. ஒருவர் அரசு அதிகாரிக்கு லஞ்சம் தறுவதை "பாவம் அவர் நமக்கு தானே உதவி பன்றார் அதுக்கு நாம நன்றி செலுத்துறோம்" என்று நியாயப் படுத்துகின்றார். அதிகாரியோ அவருடைய "நன்றி"யை அனைவரிடமும் எதிர்ப்பார்க்கின்றார். இதுவே மிகப்பெரிய ஊழலுக்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.

இதையெல்லாம் சாதகமாக வைத்துத் தான் எல்லா அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், சந்தர்ப்பவாதிகளும் பிழைக்கின்றனர். விதிகளை பின்பற்றுவதை மிகத் தீவிரமாக நாம் செய்ய வேண்டும் அப்படி இல்லையென்றால் அது நமக்கு தான் நஷ்டம். 

*****************************************************
ஜி.யு போப் என்பவர் இங்கிலாந்தில் இருந்து பாரத நாட்டிற்கு வந்து மதப் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். இங்கே வந்த அவர் தமிழைப் பற்றி தெரிந்துக் கொண்டு அதன் மீது பற்று கொண்டு தமிழ் படித்தார், தமிழறிஞரானார்,

திருவாசத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற சொல்லுக்கு ஏற்ப திருவாசகம் படித்து அதன் சிறப்பை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதைக் கண்டு சிலர், வந்த வேலையை விட்டுவிட்டு மாற்று  மத நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதனை விசாரிக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.யு போப் மொழிபெயர்த்த நூலை படித்தால் தான் இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்று அவரிடம் அந்த நூலை வாங்கிப் படித்தார்.

வழக்கு மறுபடியும் நீதிமன்றத்தில் வந்தது. அந்த நீதிபதி சொன்னாராம். "நான் இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். படித்தப் பின்பு தான் நான் உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன்" என்றார். ஜி.யு போப் அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு நீதிபது தொடர்ந்தார்- "இந்த புத்தகத்தை படித்து முடித்த பின்னும் நீ அந்த மதத்திற்கு மாறாமல் உன் மதத்தைப் பிரசாரம் செய்துக் கொண்டிருக்கிறாயே? அது தவறு தான்" என்றாராம் அவர்.

- மெகா டி.வியில் தெளிதமிழர் பேரவை சார்பில் நடந்த பட்டிமன்றத்தில் கேட்டது.

*****************************************************

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர் வங்கி அறிவித்துள்ளது.


2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய் நோட்டுக்களை வருகிற மார்ச் மாதத்திற்கு பின்னர் பொது பரிவர்த்தனைக்கு, அதாவது கடைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஆனால் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

இந்த அறிவிப்பினால் 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பொதுமக்கள், அது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை, வருகின்ற மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*****************************************************