Monday, December 30, 2013

எது புத்தாண்டு?

புத்தாண்டு என்பதை இரண்டு விதமாக நாம் வரையறுக்கலாம்.

ஒன்று : ஒரு நாள்காட்டியின் படி ஒரு புதிய ஆண்டின் தொடக்கம்.

இரண்டு : ஒரு புதிய தொடக்கத்தின் அல்லது மலர்ச்சியின் காலகட்டத்தை கொண்டாடுவது.

இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது நான் முன்னதாக சொன்ன புத்தாண்டை. நாம் பயன்படுத்தும் நாள்காட்டியின் படி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொண்டு அதை புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இது சரியா என்பது தான் என்னுடைய கேள்வி.

 ஒரு விவாதத்துக்காக இந்த காலகட்டத்தின் பருவ நிலையையே எடுத்துக் கொள்வோம், இப்போது குளிர் காலம். இந்த காலகட்டத்தில் எல்லாமே சற்று உற்சாகம் குறைந்து தான் காணப்படும். மரம், செடி, கொடிகளிலிருந்து அத்தனை உயிரினங்களுமே தங்கள் இருப்பிடத்தை விட்டு வராமல் அல்லது மிகக் குறைவாகவே வெளிவரும். ஏனெனில் இந்த பருவத்தில் இந்த உலகிற்கு ஆதார சக்தியாக உள்ள சூரிய ஒளி மிகவும் குறைவான நேரமே கிடைக்கும். 


குளிர் காலம்
பகல் குறைந்து இரவு அதிகமாக இருக்கும். மரம், செடி போன்ற தாவரங்கள் இலைகளை உதிர்த்து மொட்டையாக நிற்கும். புல் போன்ற வகைகள் மொத்தமாக கருகி மண்ணிற்கு அடியில் விதைகளை விட்டு விட்டு போய்விடும். இப்படி குளிர்காலம் என்பது ஒரு மந்தமான, வளர்ச்சி இல்லாத நிலையை சுட்டுவதாகவே இருக்கின்றது. திரைபடங்களில் சோகமான அல்லது அமானுஷ்யமான நிலையை எடுத்துக் காட்ட பனி நிறைந்த, இருள் அடர்ந்த ஒரு சித்திரத்தையே காட்டுவார்கள். 

மாறாக வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் எடுத்துக் காட்டாக சூரிய ஒளியின் வரவையும், அதை பார்த்து பறக்கும் பறவைகள், இலை துளிர்த்து பசுமையை பறைசாற்றும் மரங்கள், வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் செடிகள். அதை சுற்றி வரும் பட்டாம்பூச்சிகள். அவற்றின் குறுங்கால்களால் மெல்லிய தென்றலில் பரவும் மலர்களின் மகரந்த வாசம். பூலோக சொர்க்கமாக மாற்றும் வசந்த காலத்தின் சித்திரம். 
வசந்த காலம்

இப்படி பருவ நிலையே நேர்மறையான (பாஸிடிவ்) எண்ணங்களைத் தரும். இதை விடுத்து மந்தமான கதியில் இருக்கும் காலக் கட்டத்தை, வெறும் ஒரு நாள் காட்டியின் படி ஆண்டின் தொடக்கமாக கொள்வது என்ன விதமான அறிவியல் என எனக்கு புரியவில்லை. 

நான் ஏதோ தமிழ் புத்தாண்டை முன்வைத்து இதை சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். மிகப் பழங்காலத்திலிருந்தே உலகில் எல்லா நாடுகளைச் சேர்ந்தோரும் தத்தம் பகுதியில் வசந்த காலத்தையோ அல்லது முதுவெணிற்காலத்தின் முற்பகுதியையோ தான் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி இருக்கின்றனர்.

முட்டாள்கள் தினம் வந்த கதையைப் பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ள இயலும். நாம் இன்று பின்பற்றும் ஆங்கில நாள்காட்டி முறையை பிரான்சில் அமல்படுத்தியபோது ஜனவரி ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்கமாக அறிவித்தார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் சிலர், பழைய முறைப்படி ஏப்ரல் மாத்திலேயே கொண்டாடினர். அவர்களை தூற்றவும், அவ்வாறு செய்வதை கேலி செய்யும் நோக்கத்திலும் ஆரம்பித்தது தான் முட்டாள்கள் தினம். ஆனால், எனக்கென்னவோ உலகமே முட்டாளாக்கப் பட்டதைத் தான் சூசகமாக முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது.

அடுத்து, இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

1. இரவு 12 மணிக்கு கொண்டாட்டங்களை ஆரம்பித்து உறங்காமல் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இரவு முழுக்க உறங்காததால் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லிக் கொள்வதை உறங்கியே கழிக்கிறார்கள். 

2. மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு மது அருந்துகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவார்கள் என்பது வேதனைக்குறிய உண்மை.

வளர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டிய புத்தாண்டை போதையின் பாதையில் ஆரம்பிக்கின்றனர். இது சரியா?

நமது பண்பாட்டின்படி ஆண்டு தொடக்கத்தை (சித்திரை 1 அல்லது யுகாதி) எப்படிக் கொண்டாடுகிறோம்?

1. அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து இறைவனை வணங்குகிறோம் அல்லது கோவிலுக்கு செல்கிறோம். 

2. அந்த ஆண்டை சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பெரியோர்கள் ஆசி கோருவோம்.

3. கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு வகை பிரசாத்தை உண்போம் - வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் வரலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும் என்பதற்காக தான் ஆண்டின் தொடக்க தினமான அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுகிறோம்.

இப்படி அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உள்ள நமது புத்தாண்டை விடுத்து வெறும் நாட்காட்டியின் அடிப்படையில் உள்ள ஒரு தினத்தை புத்தாண்டாக கொண்டாடுவது அறிவீனம் ஆகும். 

Wednesday, December 25, 2013

அடல் என்னும் ஆளுமை

11 மே 1998, அன்றைய தினசரி நாளிதழைக் கண்ட அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் கண்கள் சிவந்தன.

அடல் பிஹாரி வாஜ்பாய்
எத்தனை உளவு செயற்கைகோள்கள், சி.ஐ.ஏ அமைப்பு, அதன் துண்டு எலும்புக்கு வாலாட்டும் ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பல உலக நாடுகளின் கொள்ளிக் கண்களையும் மீறி பாரதம் தன்னுடைய அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக முடித்து, தன்னுடைய ஆளுமையையும், தன்னை முழுமையான அணு ஆயுதம் கொண்ட தேசமாகவும் தலை நிமிர்ந்து உரைத்தது.

இதன் பின்னணியில் இருந்தவர் தான் அடல் பிஹாரி வாஜ்பாய். பாரதத்தின் 10வது பிரதம மந்திரி இருந்து, நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற வித்திட்டவர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பாலும், நேர்மைத் திறத்தாலும் நாட்டின் பிரதம மந்திரியாக உயர்ந்தவர்.

தன்னுடைய வாழ்வை பத்திரிக்கை நிருபராக தொடங்கினார். அப்போது சுதந்திர போராட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்தது. அவர் தீவிரமாக அதில் பங்கெடுத்தார். ராஷ்ட்ரதர்ம, வீர் அர்ஜுன், பாஞ்சஜன்யா மற்றும் ஸ்வதேஷ் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றினார். தன் இளமைக் காலத்திலேயே தன்னுடைய வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணிக்க உறுதி பூண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து பிரசாரகரானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

1942, ஆகஸ்ட் புரட்சியின் போது அவரும் அவருடைய அண்ணன் பிரேமும் சிறையில் அடைக்கப்பட்டனர். அது அவருடைய அரசியல் பயணத்தின் ஆரம்பமாக இருந்தது என்றே சொல்லலாம். பின்னர் சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சியாமா பிரசாத் முகர்ஜி
1951-ல், பாரதீய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டார். அதன் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் தலைமை பண்பாலும், சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய உதவியாளர் ஆனார். 1954-ல் காஷ்மீருக்காக முகர்ஜி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது அவரும் கலந்துக் கொண்டார், இதில் முகர்ஜி சிறையில் மர்மமான முறையில் இறந்தார். அது அவருக்கு பேரதிர்ச்சி அளித்தது. பின்னர், தீனதயாள் உபாத்யாயா ஜன சங்கத்தின் தலைவரானார். 1957ல் வாஜ்பாய் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பேச்சுத் திறத்தினால் வெகு சீக்கிரத்திலேயே ஜன சங்கத்தின் அடையாளமாக மாறினார்.

தீனதயாள் உபாத்யாயா
லோக்சபாவில் அவருடைய பேச்சைக் கேட்ட அப்போதைய பிரதமர் நேரு இவர் ஒரு நாள் பாரத்தின் பிரதமராவார் என்று ஊகித்தாராம். 1968, தீனதயாள் உபாத்யாயாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜன சங்கத்தின் தலைமை இளம் வாஜ்பாயின் தோளில் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரும் அவருடன் நானாஜி தேஷ்முக், லால் கிருஷ்ண அத்வானி, பால்ராஜ் மதோக் ஆகியோர் இணைந்து ஜன சங்கத்தை தேசிய அளவில் முன்னிறுத்தினார்கள்.

1975 ல் அவசரநிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அப்போது பல எதிர்கட்சி தலைவர்களுடன் அடல்ஜியும் கைது செய்யப்பட்டார். 1977ல் அவசர நிலை நீக்கப்பட்ட போது சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த அழைப்பை ஏற்று இந்திராவிற்க்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனதா கட்சி என்ற மாபெரும் கூட்டணி அமைத்தார் அடல்ஜி. 1977 தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிப் பெற்று மொரார்ஜி தெசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அதில் அடல் ஜி மிகச்சிறப்பாக பணியாற்றினார், வெளிஉறவுத்துறை அமைச்சராக பதவியேற்று ஐ.நா சபையில் முதன் முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார். அவருடைய பணிக்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவுகளை காண விளைந்தார்.

மொரார்ஜி தெசாய்
1979ல் உட்கட்சிப் பூசலால் ஜனதா கட்சி சிதைந்து மொரார்ஜி தேசாய் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சியை தன்னுடைய நீண்ட நாள் நண்பர்களான அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத்துடன் இணைந்து 1980ல் ஆரம்பித்து அதன் முதல் தலைவரானார். காங்கிரஸுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவானார்.

1980 முதல் பல தடைகள், அரசியல் போராட்டங்கள், சீக்கியர் கலவரம் போன்ற பல இன்னல்களை எதிர்கொண்டு அடல் ஜி தன்னுடைய தலைமைப் பண்பால் கட்சியை ஒருங்கிணைத்து தேசிய அரசியலில் தன்னை ஒரு மாபெரும் ஆளுமையாக நிலைநிறுத்திக் கொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதும் அருதிப் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் 13 நாள் பிரதமாராக இருந்து விலகினார்.

நானாஜி தேஷ்முக்
 1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி என்ற வலுவான கூட்டணியை அமைத்து அதன் அமைப்பாளராகவும் இருந்தார். அந்த ஆண்டு நடைபெற்றப் பொது தேர்தலில் தே.ஜ.கூ அருதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்தது. பாரத்தின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பதிவியேற்றார். அவர் பதவியில் இருந்த ஆண்டுகள் அவருக்கு முள் படுக்கையாகவே இருந்தன.

பொக்ரான்-2 அனுகுண்டு சொதனையால் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் பாரதம் மீது பொருளாதாரத் தடை விதித்தன, அதை தன்னுடைய வலிமையான பொருளாதாரக் கொள்கைகளாலும், தலைமையாலும் எதிர்த்து நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் அந்த நாடுகள் தாமாகவே நம் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்கின.

அடல் அவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் நம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவே விருப்பப் பட்டார். பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்கப் பல்வேறு வழிகளை முன்வைத்தார், அவை பாகிஸ்தானிடம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியது. 1999ம் ஆண்டு கார்கில் போர் மூண்டது ஆபரேஷன் விஜய் மூலம் அதை வெற்றிகரமாக முறியடித்தார் வாஜ்பாய். போர் நேரத்தில் போர்முனைக்கேச் சென்று நமது ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். இது எந்த ஒரு பிரதமரிடமும் இல்லாத ஒரு குணம். இப்போதைய பிரதமரை நினைக்கும் போது நமக்கு ஏனோ ஒரு நெருடல் ஏற்படுகிறது.

இத்தனை இடர்களையும் மீறி அவருடைய ஆட்சிக் காலத்தில் பல உள்நாட்டு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தார். தகவல் தொழில்நுட்பத் துறையை நம் நாட்டில் ஊக்குவித்து வளர்ச்சி அடைய செய்தார். எனினும் இவை அவருடைய குறிக்கோள் கிராமபுர வளர்ச்சியில் தான் இருந்தன.

அவருக்கு பிடித்த திட்டங்களாக இருந்தவை தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி ஊரக வளர்ச்சி திட்டங்களே. அதன் மூலம் கிராம வளர்ச்சியும் நகர வளர்ச்சியும் ஒரு சேர இருக்க வேண்டும் என்பதே அவரது கோட்பாடாக இருந்தது. அவரது அனைவருக்கும் கல்வி திட்டமும் அதன் ஒரு பகுதி என்றே கூறலாம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் அடைந்தது. நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி விகிதம் (GDP) 6-7% வரை உயர்ந்தது. விவசாய வளர்ச்சியும் தொழில் துறை வளர்ச்சியும் நல்ல முறையில் இருந்தன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது அவரின் பொருளாதாரக் கொள்கைகள்.

மதுரை சின்னப்பிள்ளை மற்றும் வாஜ்பாய்
மதுரையில் ஒரு கிராமத்தில் களஞ்சியம் எனும் ஒரு சுய உதவிக்குழுவின் மூலமாக சின்னபிள்ளை என்பவர் பெண்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தினார். அவருக்கு ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் என்ற விருதை வழங்கினார் அடல் ஜி. அப்போது அவரை விட வயதில் குறைந்த சின்னப்பிள்ளை அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். அவருடைய பணிவிற்கு சான்றாக அமைந்தது இந்த நிகழ்வு. மேலும் கிராம முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த பற்றும் இதில் பிரதிபலித்தது.

அவர் சிறந்த கவிஞரும் கூட. தன்னுடைய கவிதைகளைப் பற்றி மிகத் தெளிவாக இப்படிக் குறிப்பிடுகிறார் "என்னுடைய கவிதைகள் ஒரு போருக்கான அறிவிப்பு பொன்றவை, அது தோல்விக்கான முன்னறிவிப்பு அல்ல. அது தொல்வி கண்ட சிப்பாயின் முழக்கம் அல்ல, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட போராளியின் முழக்கம். அது சோர்வடைந்த ஒலம் அல்ல, உள்ளத்தைக் கிளறுகின்ற வெற்றி முழக்கம்"

பத்ம விபூஷன் விருது பெற்றவர். மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர். சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது பெற்றவர்.

இன்று அந்த மாபெரும் ஆளுமையின் 89வது பிறந்த நாள்.


25 டிசம்பர் 1924, அன்று கிருஷ்ண தேவிக்கும், கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்க்கும் மகனாக பிறந்தார். இவருக்கு நமிதா என்ற வளர்ப்பு மகள் உள்ளார். அடல்ஜியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள் என்றே நம்புகிறேன். அன்னாருக்கு என் பணிவாக வணக்கங்கள்.



மேலதிக விவரங்களுக்கு:

Monday, December 23, 2013

கணித மேதை

தானே கற்றுணர்ந்தவன்

பிறப்பும் படிப்பும்
   சாதாரண குமாஸ்தாவாக வாழ்க்கையைத் துவங்கி தன்னுடைய சுய அறிவால் கணிதத்தை கற்று, உலகமே வியக்கும் வண்ணம் பலச் சமன்பாடுகளை இயற்றியவர் ஸ்ரீநிவாச ராமானுஜன்.

Ramanujan
ராமானுஜன், டிசம்பர் 22, 1887 ஈரோட்டில் பிறந்தார். இவர் தந்தை ஸ்ரீநிவாசன், தாய் கோமளத்தம்மாள். கும்பகோனத்திலும், தஞ்சையிலுமாக மாறி மாறி இவருடைய சிறு வயது கழிந்தது.
காங்கேயத்தில் இவர் ஆரம்பக் கல்வி கற்றார். 10 வயதிலேயே ஆரம்ப கல்வியை முடித்தார். எல்லா பாடங்களிலும் முதன்மை பெற்று தேறியிருந்தார், மாவட்டதில் முதல் மதிப்பெண். 1897 ஆரம்பக் கல்வி முடித்த அதே ஆண்டு மேல்நிலை கல்வி கற்க டவுன் பள்ளியில் சேர்ந்தார்.

 கணித அறிமுகம்

   அங்கே தான் அவருக்கு முறையான கணிதம் அறிமுகமானது. இயல்பிலேயே கணிதம் மேல் பற்று கொண்டிருந்த ராமானுஜத்திற்கு அந்த பள்ளிக் கணிதம் சில மாதங்களில் புரிந்து விட்டது, அவருடைய ஆர்வத்தால் அவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் கணிதப் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தார். 11 வயதிற்குள்ளாகவே அந்த கல்லூரி புத்தகங்களை முடித்து அவர்களையே திணரடித்தார்.
   பிறகு அதே மாணவர்களிடம் எஸ்.எல். லோனி (S.L.Loney) என்பவர் எழுதிய அட்வான்ஸ்ட் டிரிக்னாமெட்ரி (Advanced trignometry) என்ற நூலை கடனாக வாங்கிப் படித்தார். முக்கோணத்தின் கொணங்களையும், அதன் அடிப்படையாக வைத்து உருவான sin, cos, tan போன்ற ஃபங்க்ஷங்களையும் (Functions) வைத்து செயல்படுவது திரிகோணமிதி ஆகும். இதையும் அவர் 13 வயதிற்குள்ளாகவே கரைத்து குடித்தார். அதிலேயே இமாஜினரி நம்பர்ஸ், லாகரிதம், எக்ஸ்பொனென்ஷியல் ஃபங்க்ஷன்கள், இன்ஃபைனைட் சீரீஸ் போன்ற பலவும் இருந்தன. இதனால் பள்ளியில் கடினமான கணக்குகளைக் கூட இவரால் சுலபமாக போட முடிந்தது. ஆசிரியர்களே தடுமாறும் கணக்குகளைக் கூட ராமானுஜன் சுலபமாக போட்டான்.
   கணிதத் தேர்வுகளை பாதி நேரத்திலேயே முடித்துவிடுவார் ராமானுஜன். அவருக்கு கன சமன்பாடுகளை (cubic equations) தீர்ப்பது பற்றி சொல்லப்பட்டது. அதை வைத்து தானே இருபடி சமன்பாடுகளைத் தீர்க்க முயன்றார். ஆனால் ராடிகல் (radical) எண்கள் இல்லாமல் அதை தீர்க்க முடியாது என்பதால் அதில் அவர் தோல்வி கண்டார்.

 வாழ்க்கையை மாற்றிய புத்தகம்

   அவருடைய 15ம் வயதில் ஜி.எஸ்.கார் (G.S.Carr) என்பவர் எழுதிய  A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்ற புத்தகம் கிடைத்தது. இது ஒன்றும் கணித உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்த்திய புத்தகம் ஒன்றும் அல்ல, நம்முடைய BE மாணவர்கள் படிக்கும் local author புத்தகங்கள் என்போமே அது போன்ற புத்தகம், சரியாக சொல்லப் போனால் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபொர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைகழகங்களில் கடினமான டிரைபோஸ் என்ற தேர்வை எழுத வேண்டும். அந்த தேர்வை "மக்கடித்து" வெற்றி பெற எழுதப்பட்டது தான் இந்த புத்தகம்.
   ஆனால் கிட்டத்தட்ட 5000 தேற்றங்களைக் கொண்டது இந்த புத்தகம், நாம் சிறு வயதில் படித்த (a+b)2 முதல் 1875 வரை உயர் கணிதத்தில் இருந்த அத்தனை சூத்திரங்களும், தேற்றங்களும் அதில் இருந்தன. அந்த புத்தகம் அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்றே சொல்லலாம்.
   அந்த புத்தகத்தில் இருந்த பலச் சமன்பாடுகளை தீர்ப்பதிலேயும், விடைகளைத் தருவிப்பதில் அவருடைய இளைய பிராயம் சென்றது. 1904ல் உயர் கல்வியை முதன்மை மதிப்பெண்களோடு முடித்த ராமானுஜன் கல்லூரியில் சேர்ந்தார். 20 ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைத்தும் 32 ரூபார் செமஸ்டர் கட்டணத்தைக் கட்ட முடியாத அளவிற்கு வறுமை அவர் வீட்டில்.

கல்லூரியில் தோல்வி

கணிதத்தில் இருந்த ஆர்வத்தால் மற்ற பாடங்களில் மனம் பதியவில்லை, ஆதலால் தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு, ஆங்கிலத்தில் தோல்வி. கல்வி உதவித் தொகையும் முடிந்து போனது. பிறகு சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார் அங்கும் கணிதம் தவிர மற்ற பாடங்களில் வெற்றி பெற முடியவில்லை. கணிதத்தைத் தவிர வேறெதிலும் ஒன்ற முடியாததால் ராமானுஜத்தின் கல்லூரி வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. இந்த சமயத்தில் அவர் வறுமையின் கோரப்பிடியில் இருந்தார். பல நேரம் உணவின்றி பட்டினிக் கிடந்தார், இருந்தாலும் தன்னுடைய கணித ஆராய்ச்சியைக் கைவிடவில்லை.
தமிழ் சினிமா வழக்கப்படி (ஆடி முடிஞ்சா டாப்பா வருவான்!!) அவருடைய அன்னையின் வற்புறுத்தலால் 10 வயது ஜானகியம்மாளை 1909ல் மணந்தார்.
விதிவசத்தால் 1910ல் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரே தன்னுடைய உடல் நலத்தைக் கண்டு பயந்து, தான் எழுதியிருந்த ஆராய்ச்சி நோட்டை தன் நண்பரான ராதாகிருஷ்ணனிடம் தந்து அதை பச்சையப்பன் கல்லூரி கணித பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் அல்லது சென்னை கிரிஸ்துவ கல்லூரி பிரிட்டிஷ் பேராசிரியர் எட்வர்ட் பி ரோஸிடம் ஒப்படைத்துவிட கூறினார். ஆனால் அவர் நோயிலிருந்து பிழைத்து வந்து மீண்டும் தன் கணித ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
வாழ்வாதாரத்திற்காக சில கல்லூரி மாணவர்களுக்கு ட்யூஷன் கற்றுக்கொடுத்தார். மேலும் ஏதாவது குமாஸ்தா வேலை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடிக்காததால் அவருக்கு வேலை அத்தனை சுலபத்தில் கிடைக்கவில்லை.

புதிய தொடக்கம்

அப்போது இந்திய கணிதக் கழகம் "Indian Mathematical Societyஎன்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்த ராமஸ்வாமி ஐயர் என்பவரை சந்தித்துத் தன்னுடைய ஆராய்ச்சியைக் காண்பித்தார் ராமானுஜன். அத்துடன் தனக்கு ஏதாவது ஒரு குமாஸ்தா வேலை வாங்கி வேண்டினார்.
ராமானுஜத்தின் திறமைகளைப் பார்த்த ராமஸ்வாமி ஐயர், அவருக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்து அனுப்பினார். அதுவும் பெரிய அளவில் உதவவில்லை. அப்போது நெல்லூர் கலெக்டராக இருந்த ராமச்சந்திர ராவின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது, இந்தியக் கணித கழகத்தின் செயலாளராக இருந்தார் அவர். அவர் முதலில் ராமானுஜத்தை ஏமாற்றுக்காரர் என்றே நினைத்தார். ஆனால் அவருடைய சில கணித சமன்பாடுகளைப் புரிந்து கொண்ட பின்னர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
அவருக்கு மாதா மாதம் 25 ரூபாய் உதவித்தொகை அளிப்பதாகவும், சென்னையில் ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார் ராமச்சந்திர ராவ். இதனால் தற்காலிகமாக ராமானுஜத்தின் வாழ்க்கை பிரச்னைக்கு முடிவு கிடைத்தது. பின்னர் ஒரு வருட காலம் அவர் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஜர்னல் ஆஃப் இண்டியன் மேத்தமடிகல் சொசைட்டி என்ற இதழில் பல கட்டுரைகள் எழுதினார்.
1912ல் ராமச்சந்திர ராவின் உதவியால் சென்னை போர்ட் ட்ரஸ்ட்'ல் எழுத்தர் வேலை கிடைத்தது. அப்போது அங்கே அவருடைய மேலதிகாரி நாராயணன் என்பவருக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது அதனால், அலுவலக நேரத்தில் கூட கணித ஆரய்ச்சி செய்ய அனுமதித்துவிடுவார். மற்றும் அப்போது அதன் தலைமை பொறியாளராக இருந்த சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்கும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்.

ஹார்டியின் அறிமுகம்

இப்போது அவருக்கு நிலையான வேலை, குடும்பம், ஆதரவான மேலதிகாரிகள் என்று தன்னுடைய ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்தும் இருந்தது. அவருக்கு தன்னுடைய கணித ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் வேண்டும் என்று எண்ணத் துவங்கினார்.
Infinite series
ஹார்டியை தடுமாறவைத்த சூத்திரம்
ஆனால் அது இங்கு கிடைக்காது என்பதை அறிந்தார், அதனால் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கணிதப் பேராசிரியர்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். அதில் ஹார்டி என்பவர் ராமானுஜத்தின் கடித்தில் இருந்த சமன்பாடுகளைப் பார்த்து பிரமித்தார், அவரும் அவருடைய நண்பர் லிட்டில்வுட்டும் இணைந்து ராமானுஜனின் சமன்பாடுகளை புரிந்து கொள்ள முயன்றனர். மிகுந்த பிரயாசைப்பட்டு அவர் அனுப்பிருந்த சமன்பாடுகள் தவறு என்று நிரூபித்தாலும் ராமானுஜனிடம் திறமை இருக்கிறது என்று அறிந்தனர். அவரை இங்கிலாந்துக்கு வரவழைக்க முயற்சி செய்தனர்.
Impressed formula
ஹார்டி தான் எழுதிய Orders of Infinity என்ற புத்தகத்தில் பகா எண்களைக் கொடுக்கக் கூடிய சூத்திரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று எழுதியிருந்தார், அதை மறுத்து தான் அந்த சூத்திரத்தை கண்பிடித்துவிட்டதாக தான் ராமானுஜன் அந்த கடித்ததை எழுதியிருந்தார்.

வறுமை

ராமானுஜன் எழுதியிருந்த பல சமன்பாடுகள் அவர்களுக்கு புரியவில்லை என்றாலும் அவற்றை ஆராய்ந்து பார்த்த போது, அவர் உலகின் பல கணித மேதைகள் கண்டுபிடித்த தரவுகள், சூத்திரங்கள் மற்றும் தேற்றங்களை தான் உருவாக்கிக்கொண்ட பாணியில் சொல்லியிருந்தார். இது அவர்களை மேலும் திணறடித்தது. அவர்கள் ராமானுஜனை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் அவருடைய வழிமுறைகள், அதற்கான நிரூபணங்கள் ஆகியவற்றைக் கேட்டனர். அதற்கு அவர் கூறிய பதில் அவர் அளித்த பதில் இங்கே பதிவு செய்யப் படவேண்டியதாகிறது.
"உங்களிடம், என்மீது கருணை வைத்திருக்கும் ஒரு நண்பரைக் கண்டுபிடித்துள்ளேன். என்னுடைய உடனடித் தேவை, எனது மூளையை பாதுகாக்க கொஞ்சம் உணவு. உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் கிடைத்தால், மெட்ராஸ் பல்கலைகழகத்திலிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ எனக்கு உதவித்தொகை கிடைக்கலாம்"
இது அவரின் வறுமையையும், அவர் ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த பற்றையும் ஒருசேர விளக்கும். இதே ராமானுஜன் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் இந்நேரம் Fellow of Royal Society மதிப்பு பெற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்திருந்திருக்கலாம்.
இதன் பின் அவருக்கு சென்னை பல்கலைகழகம் மூலமாக அவருக்கு உதவி கிடைத்தது. போர்ட் டிரஸ்டில் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிபந்தனையோடு நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டது. தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல கடிதங்களை அனுப்பினார், அதிலும் வெறும் சமன்பாடுகள் தான் இருந்தன. இதனால் ஹார்டி ராமானுஜனிடம் வழிமுறைகளைக் கேட்டு மீண்டும் கடிதம் அனுப்பினார், அதற்கு அவர் கூறிய பதில் "என்னுடைய வழிமுறைகள் முற்றிலும் புதியவை. இதுவரை யாருமே செய்திராதவை. நானே எனக்காக உருவாக்கிக் கொண்டவை. யாரேனும் கேலி செய்வார்களோ என்ற பயத்தால் அதை விளக்கிச் சொல்ல எனக்கு தயக்கமாக இருக்கிறது" என்றார்.

மாபெரும் திருப்பம்

அந்த சமயம் ஹார்டி ஒரு முடிவெடுத்தார், அது ராமானுஜனை எப்படியாவது இங்கிலாந்துக்கு அழைத்து வரவேண்டும் என்பது தான் அது. அதற்காக இங்கிலாந்து அரசை வளைத்து "நீங்க வந்தா மட்டும் போதும்" என்கிற ரீதியில் அவருக்கான உதவித் தொகை, தங்கும் ஏற்பாடு கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சேருவதற்கான அனுமதி என அனைத்தும் செய்யப்பட்டன.
டிரினிடி கல்லூரியில் ராமானுஜன்
டிரினிடி கல்லூரியில் ராமானுஜன்
மார்ச் 17, 1914 அன்று நெவாசா என்ற கப்பலில் மதராஸ் பட்டணத்தின் கணித மேதை இங்கிலாந்து நோக்கி சென்றார். ஏப்ரல் 18 அன்று கேம்ப்ரிட்ஜின் டிரினிடி கல்லூரியில் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். அவருக்கு பார்ன்ஸ் என்ற ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் வந்தது ஆராய்ச்சிகாக என்றாலும் சில வகுப்புகளில் அவர் கலந்து கொண்டார். ஒருமுறை பெர்ரி என்ற ஆசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் எழுத ஆரம்பித்த கணக்கைப் பார்த்து ராமானுஜன் புன்னகைத்தார். அதைப் பார்த்த பெர்ரி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டார். ராமானுஜன் நேராக சென்று அவரிடம் சாக்கை வாங்கி எழுத ஆரம்பித்தார். பெர்ரி எதை நிரூபிக்க நினைத்தாரோ அதே பதில்.
சில மாதங்களிலேயே ராமானுஜனின் புகழ் கேம்ப்ரிட்ஜில் பரவ ஆரம்பித்தது. ஹார்டியும், லிட்டில்வுட்டும் ராமானுஜனை சந்தித்தார்கள் அவர்களிடம் அவருடைய நோட்டு புத்தகங்களைக் காண்பித்தார். அவர்களும் தாங்கள் ஆவலாக காத்திருந்த வழிமுறைகளைக் கண்டார்கள். அவற்றில் சில தவறானவை, சில முன்பே கண்டுபிடிக்கப் பட்டவை.
ஆனால் அதற்கும் மேலாக பல விஷயங்கள் அதில் இருந்தன. அற்புதமான சமன்பாடுகள், முக்கியமாக தொடர் பின்னங்கள் (Series fractions), முடிவில்லா தொடர்கள் (Infinite series) இவை இரண்டுக்கும் இடையே பலத் தொடர்புகளைக் கண்டுபிடித்திருந்தார்.

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கேம்ப்ரிட்ஜில் தங்கியிருந்த போது அவர் ஒரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் வெளியிட்டார் அது "Modular equations and Approximations of Pi" . பையின் மதிப்பை 3.14 என்று குத்துமதிப்பாக தான் எழுத முடியும். பிற்காலத்தில் கணிணிகளைக் கண்டுபிடித்த போது, ராமானுஜனின் ஃபார்முலாவை வைத்துதான் 'பை'யின் பதிப்பை கணகிட்டார்கள். அது தான் சீக்கிரமாக விடையை தந்தது.
அவர் மூன்று கட்டுரைகளை எழுதி முடித்து அவை கேம்ப்ரிட்ஜ் ஜர்னலில் அக்டோபரில் வரும் என்று காத்திருந்தார், அதற்குள்ளாக முதல் உலகப்போர் வந்து ஒரே அக்கப்போராகிவிட்டது. அவருடைய ஆராய்ச்சியில் ஒரு தடைக்கல்லாக வந்தது. இருந்தாலும் ஹார்டியும், ராமானுஜனும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1915ல் ராமானுஜன் ஒன்பது கட்டுரைகளை மிக முக்கியமான இதழ்களில் வெளியிட்டார். அதில் 'அதி பகு எண்கள்' (High composite numbers) என்ற கட்டுரை அதி முக்கியமானது. அந்த கட்டுரையையே ஆராய்ச்சி தீசிஸாக எடுத்துக் கொண்டு ராமானுஜனுக்கு டிகிரி வழங்குவது என்று டிரினிடி கல்லூரி முடிவெடுத்தது. இதன் மூலம் தான் இரண்டுமுறை தோற்ற கல்லூரி பட்ட படிப்பை அவர் பெற்றார். மார்ச் 1916ல் ராமானுஜனுக்கு B.A பட்டம் வழங்கியது.
மேலும் தன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு ஏதோ வியாதி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் அல்சர் இருக்குலாம் என்று சந்தேகித்தார்கள், கடைசியாக காசநோய் (TB) என்று முடிவுக்கு வந்தார்கள். அவருடைய நோய் முற்றி இருந்த நேரத்தில் அவருக்கு ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைட்டி மே 1918ல் தரப்பட்டது. இந்த விஷயம் பாரத்ததிற்கு தெரிய வந்ததும் அனைவரும் சந்தொஷத்தில் மிதந்தனர். பின்னர் அவர் டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாக அறிவிக்கப்பட்டார்.

கணக்கு முடிந்தது

ஆனால் ராமானுஜனின் உடல் நிலை மோசமானது, அவரை பாரதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்கள். அவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்யலாம். ஏப்ரல் 1919ல் சென்னை வந்து சேர்ந்தார்.
1920ல் சென்னை சேத்துபட்டில் தங்கினார். அவருடைய கடைசிக் காலம் அது. படுக்கையிலேயே அவர் கணித ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. அவருடைய ஆராய்ச்சியின் மூலமாக பல கட்டுரைகள் வெளியாயின. 1920 ஏப்ரல் 26 அன்று தன்னுடைய 33ம் வயதில், ராமானுஜனின் உயிர் தீராத நோய் மூலமாக பிரிந்தது. இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால் கூட எதையோ எழுதிக் கொண்டிருந்தாராம் அவர்.
இன்றும் நம்மில் பலர் ராமானுஜனைப் போன்று பலத் திறமைகள் இருந்தும் சரியான சூழ்நிலைகள் இல்லாமல் தமது கனவுகளை மறந்து, தங்களுடைய திறமைகளை கண்டுகொள்ள முடியாமல், வெளிப்படுத்த முடியாமல் இருக்கின்றனர். இளைஞர்கள் கணிதத்தில் ஈடுபாடு கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும்.

அவர் பிறந்த தினத்தை நாம் தேசிய கணித நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த பதிவு 22/12/2013 அன்றே பதிவிட்டிருக்கப்பட வேண்டியது. சூழ்நிலைக் காரணமாக இரண்டு நாள் தாமதமாக வெளியிட்டிருக்கிறேன்.
ராமானுஜன் பெயரில் பரிசு
ராமானுஜன் பெயரில் பரிசு
தபால் தலை
தபால் தலை




மேலதிக விவரங்களுக்கு :

Friday, December 20, 2013

மந்திர புன்னகை

புன்னகை

   மனிதன் கண்டுபிடித்த பலவற்றுள் நான் சிறந்த கண்டுபிடிப்பு எனக் கருதுவது புன்னகையை தான். புன்னகை தான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மனிதனை தவிர எந்த "விலங்கு"களாலும் சிரிக்க முடியாது.

   புன்னகை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு இன்றியமையாத ஊடகம். புதிய அறிமுகத்திற்கு ஒரு கடவு சீட்டாக (Ticket) உள்ளது. இருக்கமான சூழ்நிலையை இளக வைக்க ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. சமயத்தில் "காக்காய்" பிடிக்கவும், சிலரிடம் நமக்கான வேலையை செய்து முடிக்கவும் உதவுகிறது. வாழ்வின் உன்னதமான தருணங்களை நினைத்து பார்க்கும் போது ஏற்படும் பெருமிதத்தின் வெளிப்பாடு.

    ஒவ்வொருவரும் மற்றவரை பார்க்கும் போது ஏற்படும் சினேக புன்னகை. நெடுநாள் கழித்து சந்திக்கும் நண்பர்களிடம் பெருகிவரும் புன்னகை. ஒரு அருமையான இயற்கை காட்சியைப் பார்க்கும் போது அதன் பிரமாண்டத்தை நினைத்து வரும் ஆச்சர்ய புன்னகை. 

   அலுவல் ரீதியான புன்னகை!! அதிலும் பல வகைகள் உண்டு!
நமக்கு மேலே இருக்கும் "பெருந்தலைகளை" பார்க்கும் போது வருவது மரியாதையான புன்னகை, நமக்கு கீழே வேலை பார்க்கும் அலுவலர்களை பார்க்கும்  வருவது பெருமிதம் கலந்த புன்னகை. நம்மை விட அதிகம் சம்பாதிக்கும் சக பணியாளர்களை பார்க்கும் போது வருவது ஏக்கப் புன்னகை.

   "காதல் இல்லாத நகரம், அது காற்று இல்லாத நரகம்""   எனப் பாடுகிறார் ஒரு கவிஞர். புன்னகை இல்லாத காதலா?! பேசாக் காதல், பார்க்காத காதல் என்று பலவகையான காதல்களை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் எப்படிப்பட்ட காதலர்களானாலும் தன்னிலை மறந்து சிரிப்பதையோ, தமக்குள் தாமே பேசிச் சிரிப்பதையோ பார்க்காமல் இருக்க முடியாது. 

   சுவையான பேச்சை ரசிக்கும் போதும், நல்ல நகைச்சுவையை உணரும் போதும் வெளிப்படுவது வெடிச்சிரிப்பு. கேலி செய்யும் போது வருவது நமுட்டுச் சிரிப்பு. 

   இப்படி மனித வாழ்வில் பல்வேறு சமயங்களில், பல்வேறு பரிமானங்களைப் பெறுகிறது புன்னகை. சிறுவயதில் கள்ளமில்லாமல் சிரிக்கும் தன்மை நாம் வளரும் போது குறைந்து, குறைந்து ஒரு கட்டத்தில் சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுவதும், ஆத்திரப்படுவதுமாக அழிந்து போகிறது. அதனால் தானோ என்னவோ இப்போதெல்லாம் நகைச்சுவையை பிரதானமாக வைத்து வரும் திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெறுகின்றன. மனிதன் மகிழ்ச்சிக்கான தெடலை இது போன்ற திரைபடங்கள் சிறிது தணிக்கின்றன. 

   ஆனால் அதைவிட, நம் குடும்பத்தினரிடம், நண்பர்களிடம் மற்றும் நாம் வாழும் சமூகத்திடமும் நாம் அன்பாக இருப்பதுதான் நமக்கு மீண்டும் அந்த கள்ளமில்லா சிரிப்பு கிடைக்க ஒரே வழி. அப்படி ஏதாவதொரு தருணத்தில் நம் முகத்தில் அரும்பும் புன்னகைக்கு இந்த உலகமே ஈடாகாது. அதை அறியாமல் நாம் வெளியே தேடுவது அறியாமை.

Monday, December 16, 2013

டிசம்பர் 16 - வெற்றித் திருநாள்

டிசம்பர் - 16 1971.


நம் நாடு ஒரு மகத்தான, தீர்மானமான!!! வெற்றியை அடைந்த நாள்.

உலகம் காணாத அதிசயமாக தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு அரசு அதன் இனவெறி காரணமாக கொன்றொழிக்க முற்பட்டது. ஆம், பாகிஸ்தான் பாரதத்திலிருந்து பிரிந்த போது, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என பிரிந்தது. 

மதத்தால் இசுலாமியராயினும், இனத்தால் வங்காளிகளாக இருந்தனர் கிழக்கு பாகிஸ்தானிய (இன்றைய பங்களாதேஷ்) மக்கள், அவர்கள் தாங்கள் மேற்கு பாகிஸ்தானால் வஞ்சிக்கப்படுகிறோம் என்று எண்ண துவங்கினர். 

வங்காள மொழி தேசிய மொழி ஆக்கப்படாதது, மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சரியான நிதி ஒதுக்காதது, சரியான உள்கட்டமைப்பு செய்யாதது போன்ற காரணங்களால் கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் மேற்கு பாகிஸ்தானிடம் வெறுப்படைந்திருந்தனர்.

அப்போது நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான  அவாமி லீக் 167 இடங்களில் (167/331 ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை) வெற்றி பெற்று அரசமைக்க பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கானிடம் உரிமை கோரியது. ஆனால் அவரோ கிழக்கு பாகிஸ்தான் மேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். முஜிபுரை மேற்கு பாகிஸ்தானுக்கு கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். அவாமி லீக் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். மேற்கு பாகிஸ்தான் மக்கள் கிழக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். பலரும் அகதிகளாக பாரத நாட்டிற்கு புகலிடம் தேடி வந்தனர். இதனால் கோபமுற்ற மேற்கு பாகிஸ்தான், பாரதத்தின் மேல் பாகிஸ்தானிய விமான படை மூலமாக தாக்குதல் நடத்தி போரை தவிர்க்க முடியாததாக்கியது. டிசம்பர் 3ம் தேதி மேற்கு பாகிஸ்தான் மீதான போரை பாரதம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இது முன்கதை சுருக்கம்.

இதன் பின் நடந்தது வரலாறு. உலகில் உள்ள எந்த நாட்டின் ராணுவத்தாலும் செய்ய முடியாத ஒரு மகத்தான வெற்றியை நம் ராணுவம் எய்தியது. தரை, வான் மற்றும் கடல் படைகள் மேற்கு பாகிஸ்தானின் மேல் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டின. அப்போது நம் ராணுவத்தினர் செய்த சில சாகசங்களை பட்டியலிடுகிறேன்.

1. வான் வழி (Indian Air force)

Sq ldr Bali
டிசம்பர் 5 : ஸ்குவாட்ரன் லீடர் பாலி தலைமையில் அன்று முழுவதும் நம் நாட்டின் விமானப் படை அடுத்தடுத்த தாக்குதல் மூலமாக எதிரி நிலைகளை கடும் சேதாரத்திற்கு உள்ளாக்கி அவர்களின் போர் வியூகத்தை உடைத்தது. அதில் பாகிஸ்தானின் 54 T-59 மற்றும் ஷெர்மன் டாங்குகளில் 40 முற்றிலும் அழிக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன. 138 மற்ற வாகனங்களும், 5 பீல்டு கன்களும் மற்றும் 3 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் அழிக்கப்பட்டன. 

தாக்குதலின் போது
சண்டை நடைபெற்ற லோங்கேவாலா பாலைவன பகுதி இரும்பு சுடுகாடு போல காட்சியளித்தது. அங்கே இருந்த எதிரி டாங்குகள் பாலை மணலில் கிறுக்கு பிடித்தவைபோல சுற்றி சுற்றி மணலை கிளப்பி விட்டு தங்களை காத்துக் கொள்ளப் பார்த்தன. எனினும் அவை தப்பிக்க முடியவில்லை.

டாங்கு தடங்கள்
மேலே காணப்படும் படம் விங் கமாண்டர் RS பெனெகல் என்பவரால் பிடிக்கப்பட்டது. இன்று இது வாயு பவனின் (விமானப்படை தலைமையகம்) நுழைவு வாயிலை அலங்கரிக்கின்றது.

அப்பொது பாகிஸ்தானிய படை அனுப்பிய செய்தியை ராணுவம் இடைமறித்து கேட்டது, கீழே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

"The enemy air force has been creating havoc - One aircraft leaves and another comes and stays overhead for twenty minutes. 40% troops and tanks have been destroyed, injured or damaged. Further advance has become very difficult. Send air force for help as soon as possible otherwise even a safe withdrawal would be difficult."

இதன் பிறகு நம்முடைய தரைப்படை எளிதாக டாக்காவைக் கைப்பற்றி பாகிஸ்தானிய ராணுவம் முன்னேறாமல் தடுத்தது.

2. கப்பல் படை (Indian Navy)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமேரிக்கா தனது மாபெரும் போர்க்கப்பலான USS Enterprise ஐ வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது. 

USS Enterprise - The Big 'E'
அதன் பிரமாண்டத்தின் காரணமாக அது The Big 'E' என்று அழைக்கப்பட்டது. 90 போர் விமானங்கள், 3000 வீரர்கள், 1800 போர் விமானிகள் மற்றும் பல வகையான ஆயுதங்கள் கொண்டு ஒரு மிதக்கும் ராணுவமாக இருந்தது. அதை எதிர்கொண்ட நமது நாட்டின் கப்பல் படை தளபதி எதிர்கொண்ட விதம் நமக்கு நிச்சயம் வியப்பளிக்கும்.

அதை அவரே விவரித்திருக்கிறார் :

"டிசம்பர் 15 அன்று INS Vikrant தனது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. எனக்கு BBC மூலமாக Big E வங்காள விரிகுடா நோக்கி வருவது பற்றி தெரிந்தது. தலைமையகத்திலிருந்து குறிப்பு வருமென்று காத்திருந்தேன், ஆனால் எதுவும் வரவில்லை. அன்றிரவு நானே முடிவெடுத்து Big E போர் களத்திற்கு வருமுன்னரே தடுத்து நிறுத்த புறப்பட்டேன். அப்போது ஒரு ஊழியர் என்னிடம் கேள்வி கேட்க அனுமதி கேட்டார், நானும் அனுமதித்தேன். அவர் ஐயா! Big 'E' ஐ பார்த்ததும் என்ன செய்வீர்கள்? 

இதே கேள்வி தான் என் மூளையையும் குடைந்து கொண்டிருந்தது, இருந்தும் நான் தயங்காமல் கூறினேன் "கவலைபடாதே இளைஞனே! அமேரிக்கா ஒரு நட்பான நாடு, அதனால் வரவேற்பு கூறி தங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்பேன்" என்றேன்.

அதற்கும் அந்த ஊழியர் திருப்தி அடையாமல் "அது நம் மீது தாக்குதலை ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று கேட்டார். 

எனக்கு கப்பற்படை கல்லூரியில் பயின்றிருக்கிறேன் மற்றும் எனக்கு அமெரிக்கர்களின் உளவியலும் தெரியும். ஒருவேளை Big 'E' நம்மை தாக்கினால், ஆபிரகால் லிங்கன் தன் கல்லறையிலிருந்து எழுந்து பார்ப்பார் (Improbable)"

என்ன ஒரு துணிச்சல் இருந்தால் இப்படி ஒருவரால் கூற முடியும். INS  Vikrant மற்றும் Big 'E' பற்றிய ஒப்புமை காண இந்த சுட்டியை பார்க்கவும், ஒரு மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் தெரியும்.

3. காலாட்படை (Indian  Army)

டிசம்பர் 16 அன்று லெப்டினன்ட் கலனல் ஹனூத் சிங் கௌர் தலைமையில் 47 பேர் கொண்ட படை பிரிவு பசந்தார் ஆற்றுக்கு இடையே பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் தரைபடை எளிதாக உள்ளே சென்று எதிரிகளை தாக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் இருந்தது. எதிரிகளின் கவச வியூகத்தை (armour attack) தகர்த்து தனியொரு ஆளாக தீரத்துடன் செயற்பட்டு தன் படைக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தார். 

இதனால் எழுச்சி பெற்ற வீரர்கள் பாகிஸ்தானின் 48 டாங்குகளை தகர்த்தெறிந்தனர். இவரை பசண்டார் போரின் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இது போன்ற எண்ணற்ற வீரர்களின் சாகசங்களால், மேற்கு பாகிஸ்தானின் ராணுவ தளபதி நியாசி போர் நிறுத்தத்தை அறிவித்தார். ஆனால் நம் நாட்டின் ராணுவ தளபதி போர் நிறுத்தத்தை ஏற்காமல் முழுவதுமாக சரணடைய கேடு விதித்தார். இது ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த முடிவாக கருதப்படுகிறது. 

அதனால் 90,368 பேர் சரணடைந்தார்கள். அது வரை எந்த நாட்டின் ராணுவ வரலாற்றிலும் இடம் பெறாத அதிசய உண்மை. 13 நாளில் போர் முடிவுக்கு வந்தது.

Deadline for Pakistan
நிபந்தனையற்ற முழு சரண் 
 சரணடைந்தவர்கள் எண்ணிக்கை:

Branch captured Pakistani POWs
Army 54,154
Navy 1,381
Air Force 833
Paramilitary including police 22,000
Civilian personnel 12,000
Total: 90,368

பாரதம் 1971 பாகிஸ்தானுக்கு எதிரான போரில் புகழ் வாய்ந்த ஒரு வெற்றியை பெற்றது. இதுவே நூற்றாண்டுகளில், ஒரு பெரிய போரின், மிக தீர்க்கமாக பெறப்பட்ட வெற்றியாகும். பாரதம் தனியொரு நாடாக இருந்து, ஐ.நா சபை உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஒரு வல்லரசையும் மீறி அடைந்த வெற்றி. இது பாரத வரலாற்றில், ஒவ்வொரு தேசப்பக்தனும் பெருமை கொள்ளக் கூடிய மின்னும் அத்தியாயமாகும். 

கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற நாடாக உருவானது. இதன் மூலமாக சுதந்திரமடைந்தது அதன் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வழி உண்டானது,

கொசுறு :

பாகிஸ்தான் தான் செய்த தவறை மறைத்து,  தான் தோற்றதையே ஒரு தபால் தலையாக வெளியிட்டு தன் தலையில் தானே மண் வாரி இறைத்துக் கொண்ட 'துன்பியல்' சிரிப்பும் நடைபெற்றது. இதில் இடம்பெற்றுள்ள வாசங்கங்களை படித்துப் பார்த்தால் மேற்கு பாகிஸ்தானால் கொல்லப்பட்ட 3 லட்சம் பங்களாதேஷ் மக்களின் ஆன்மா சும்மா விடுமா.