பீஷ்மர் செய்த பாவம்
சால்வனின் தோல்வி
காசி ராஜனின் நிலை இப்படி இருக்க, அந்த மூன்று இராஜ குமாரிகளையும் தனது ரதத்தில் ஏற்றியபடி பீஷ்மர் காசியின் எல்லையைக் கடந்து கொண்டு இருந்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு பாணம், நெருப்பை கக்கிக் கொண்டு பீஷ்மரின் ரதத்திற்கு முன்னால் வந்து பூமியில் குத்தி நின்றது.
அக்கணமே, பீஷ்மர் தனக்கு யாரோ ஒரு அரசன் அரை கூவல் விடுத்து உள்ளான் என்பதை உணர்ந்தவராக, அந்த அறைகூவலை நேருக்கு, நேராக சந்திக்கத் தனது ரதத்தை அவ்விடத்திலேயே நிறுத்தினார்.
அப்பொழுது சௌபல நாட்டின் அரசனான சால்வனை போர் கோலத்தில் கண்டார் பீஷ்மர். அவன் கைகளில் வில்லுடன் பீஷ்மனிடம்," ஏ பீஷ்மா! நீ என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்? உன்னை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாயோ? இல்லை, உனது தந்தையிடம் இச்சை மரணம் என்னும் கவசத்தை வரமாகப் பெற்றதன் திமிரா? மரியாதையாக காசியின் இராஜ குமாரிகளை விட்டு, விட்டுச் செல். இல்லை வா என்னுடன் துவந்த யுத்தம் செய்ய!" என்றான்.
சால்வன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் நகைத்தார், பிறகு சால்வனிடம் "சால்வனே! நான் உன்னைக் கண்டு பெருமை கொள்கிறேன். இந்த பாரத வர்ஷத்திலேயே, என்னை எதிர்க்க யாரும் இல்லை என்று நினைத்து இருந்தேன். அதுபோலவே, சுயம்வரத்தில் என்னைக் கண்டு பயந்து அனைத்து அரசர்களும் ஓடி விட்டனர்.
ஆனால், நீ ஒருவனாவது ஆண் மகனாய் என்னை எதிர்க்க வந்தாயே! நீ வீரன் தான். எடு உனது வில்லை. தொடு உனது பாணத்தை. இந்த பீஷ்மனிடம் நீ எவ்வளவு நேரம் யுத்தத்தில் தாக்குப் பிடிக்கிறாய் என்று பார்க்கிறேன்" என்றார்.
அடுத்த கணம் சால்வனும், பீஷ்மரும் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். சால்வனால், பீஷ்மனின் பாணங்களுக்கு முன்னாள் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெறும் ஐந்து பாணங்களைக் கொண்டு பீஷ்மர் சால்வனின் தேர் சாரதியைக் கொன்றார். அவனது இரதத்தையும் நாசம் செய்தார். அத்துடன் அவனையும் சிறை பிடித்து அவமானப் படுத்தினார்.
![]() |
| அம்பை |
- தொடரும்

No comments:
Post a Comment