Wednesday, July 22, 2020

மகாபாரதம் பகுதி 23

திருதிராஷ்டிரன் - பாண்டு - விதுரன் பிறப்பு


பராசரரும், யமுனையின் மறு கரையில் இறங்கி என்னை ஆசிர்வதித்துச் சென்றார். இப்போதோ எனது அந்த மகன் வியாசரை அழைக்க நினைக்கிறேன். அன்று நான் பராசரரின் தவத்தின் ஒளியால் எப்படி வியாசனை ஈன்றேனோ. அதே போல, எனது மருமகள்கள் வியாசன் இது வரையில் செய்த தவத்தின் பயனாய் மாவீரர்களை பிள்ளைகளாகப் பெறட்டும்" என்றாள் சத்தியவதி.

தாய் சத்தியவதியின் வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர் மிகவும் மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியுடனேயே ராஜ மாதா சத்தியவதியிடம்," தாயே! அப்படியே செய்யுங்கள்" என்றார். 

அக்கணம் தனது மகன் வியாசரை நினைத்தாள் சத்தியவதி. வியாசரும் தனது தாயின் சித்தப்படி சத்தியவதி நினைத்த மாத்திரத்தில் அங்கு வந்தார். அப்போது சத்தியவதி வியாசரிடம் கண்ணீர் மல்க மகனே," நீ இது வரையில் செய்த தவத்தின் பயனை எல்லாம் ஒன்று திரட்டி, எனது மருமகள்களுக்கு உனது திவ்விய திருஷ்டியால் ஒரு மகனைத் தா!" என்று வேண்டினாள்.

வியாசர் முதலில் தனது தாயான சத்தியவதியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். பிறகு சத்தியவதியின் கண்ணீரால் மனம் உருகி அவர் இறுதியில் அவள் வார்த்தைக்குக் கட்டுப் பட்டார்.  

உடனே சத்தியவதி தனது இரண்டு மருமகள்களையும் அழைத்தாள். தனது எண்ணத்தை சொல்லி அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தாள். அவர்களும் ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்.

நீண்ட தாடி மீசையுடன் அருவருப்பாகக் காட்சி அளித்தார் வியாசர். முதலில், தனி அறையில் வியாசரைக் காணச் சென்ற அம்பிகா தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள். அதனால், வியாசரின் பார்வையில் இருந்து வெளிப்பட்ட திவ்வியக் கதிர்கள் அம்பிகாவின் இரு கண்களைத் தவிர, அவளது உடல் முழுவதும் பரவிது. அடுத்து அம்பிகாவை தொடர்ந்து அம்பாலிகா வியாசரைக் காண அந்தத் தனி அறைக்குள் சென்றாள். 

தாடியும், மீசையும், ஜடாமுடியுமாக தோற்றமளித்த வியாசரைக் கண்ட மாத்திரத்தில் அம்பாலிகா அருவருத்துத் தனது உடலை புடவையால் மூடியபடி நடுங்கி இருந்தாள். அதனால், வியாசரின் கண்களில் இருந்து வெளிப்பட்ட திவ்வியக் கதிர்கள் அம்பாலிகாவின் உடல் முழுதும் பரவாமல் போனது. 

இவ்வாறாக இச்சம்பவத்திற்குப் பிறகு தனது தாய் சத்தியவதியை காண வந்தார் வியாசர். அப்போது சத்தியவதி வியாசரிடம், "மூன்று காலங்களையும் நன்கு உணர்ந்தவன் நீ. சத்தியத்தை சொல் மகனே எனது பேரன்கள் எப்படி இருப்பார்கள்" என்று கேட்டாள். 

அதற்கு வியாசர் மறுமொழியாக தாய் சத்தியவதியிடம், "தாயே! எதிர் காலத்தைப் பற்றி இப்போதே ஏன் அறியத் துடிக்கின்றீர்கள்? இப்போதைக்குத்தாங்கள் நிகழ் காலத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள், எதிர் காலம் தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்" என்றார். 

அது கேட்ட சத்தியவதி, "வியாசன் தன்னிடம் இருந்து எதையோ மறைக்க முயற்சி செய்கிறான்! அதனால் தான் அவன் மழுப்புகிறான்" என்று தனக்குள் சிந்தித்தாள். பிறகு வியாசனிடம்," மகனே! நீ உனது தாயை மதிப்பது உண்மை என்றால், எனது பேரன்கள் பற்றிய சத்தியத்தை இப்போதே என்னிடம் சொல்" என்று கூறி கண்கலங்க வற்புறுத்தினாள். 

அக்கணம் வியாசர் தனது தாயிடம் வேறு வழி இன்றி சத்தியத்தை கூறத் தொடங்கினார்," தாயே! உமது மூத்த மருமகளான அம்பிகா என்னைக் கண்ட மாத்திரத்தில் தனது கண்களை மூடிக் கொண்டாள். அதனால், எனது திவ்விய ஒளி, அவளது கண்களை தவிர உடல் முழுதும் பரவியது. அதன் காரணாமாக அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தை பிறக்கும் போதே கண் பார்வை அற்ற குருடனாகப் பிறப்பான். ஆனால், அவன் லட்சம் யானைகளின் பலத்தைக் கொண்டு இருப்பான். 

மற்றும் உனது இரண்டாவது மருமகளான அம்பாலிகா என்னைக் கண்ட மாத்திரத்தில் அருவருப்புடன் தனது உடலைத், தனது வஸ்திரம் கொண்டு இருக மூடிக் காணப்பட்டாள். அதன் காரணமாக அவளுக்குப் பிறக்கும் குழந்தை கண் பார்வையுடன் இருப்பான், ஆனால் உடல் வெளுத்து, அற்ப ஆயுளைக் கொண்டு இருப்பான். எனினும், அவன் சாஸ்திரங்களை கற்று வாழ்நாளில் சத்தியவானாக இருப்பான்" என்றார்.

சத்தியவதிக்கு தனது மானசிக மைந்தனான வியாசன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில் தலையே சுற்றியது. நடுக்கம் கொண்டாள். புலம்பித் தவித்தாள். அழுது துடித்தாள். எனினும், மீண்டும் நம்பிக்கை கொண்டு முயற்ச்சியில் இறங்கினாள். எனவே, மீண்டும் தனது மருமகள்களில் ஒருத்தியை வியாசனிடம் அனுப்ப பணிப்பெண் ஒருத்தியை பணித்தாள். அந்தப் பணிப்பெண்ணும் சத்தியவதியின் ஆணையை ஏற்று அம்பிகாவையும், அம்பாலிகாவையும் சென்று பார்த்தாள், அவர்களிடம் ராஜமாதா சத்தியவதியின் விருப்பத்தை சொன்னாள். 

அது கேட்டு திடுக்கிட்ட சத்தியவதியின் இரு மருமகள்களும் இம்முறை, வியாசனிடம் செல்ல விரும்பாமல் தனது ஆடைகளையும், நகைகளையும் கழற்றி செய்தி தாங்கி வந்த அப்பணிப் பெண்ணுக்கு அளித்து, அவளையே வியாசரிடம் செல்லுமாறு கூறினார்கள். அதன் படி அப்பணிப் பெண்ணும் அந்த இரு ராணிகளின் ஆணைக்குப் பயந்து, பணிந்து வியாசரை அந்தத் தனி அறைக்குச் சென்று பார்த்தாள். அப்பணிப் பெண் வியாசரைக் கண்ட மாத்திரத்தில் புன்னகை கொண்டு இயல்பாக காணப்பட்டாள். 

அப்போது வியாசரின் கண்களில் இருந்து புறப்பட்ட தவ ஒளி, அப்பணிப் பெண்ணின் உடல் முழுதும் தங்கு தடை இன்றிப் பரவியது. அதன் பிறகே, வியாசர் அவளை அடையாளம் கண்டு, "இது நமது தாயின் மருமகள்கள் அல்லவே!" என்று வியப்படைந்தார். அந்த வியப்புடனேயே, அவர் தனது தாயைக் காண மீண்டும் அரண்மனைக்கு வந்தார்.

சத்தியவதியும் வியாசனின் வரவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தாள். அக்கணம் வந்த வியாசர் சத்தியவதியிடம், "தாயே இம்முறையும் உம்மை, உமது விதி முந்திக் கொண்டது. இப்போது என்னைக் காண அந்தத் தனி அறைக்கு வந்தது உமது மருமகள்களுள் ஒருத்தி அல்ல, உமது அரண்மனைப் பணிப் பெண். ஆனால், அவ்வாறு வந்த அப்பணிப் பெண் எந்த ஒரு அருவருப்பும் இன்றி என்னை நோக்கினாள். அதனால், எனது பார்வையில் இருந்து வெளிப்பட்ட திவ்விய ஒளியானது சீராக அவளது உடல் முழுதும் பரவியது. அதனால், அவள் எதிர்காலத்தில் நற்பண்புகளைக் கொண்ட ஒரு அழகான மகனைப் பெறப் போகிறாள். 

இனி மேல் தாயே, என்னை இது போன்ற முயற்ச்சியில் ஈடுபடுத்தாதீர். அத்துடன் தாயே, இது நாள் வரையில் நான் பெற்ற எனது தவ வலிமையையும் உமது பொருட்டு, நீ இட்ட பணியால் இழந்தேன். எனவே மீண்டும் நான் அந்தத் தவ வலிமையை பெற பல வருடங்கள் ஆகும். இப்போது எமக்கு விடை கொடுங்கள், நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வியாசர் சென்றதும், தனது மருமகள்களை அவர்கள் செய்த காரியத்திற்காக கடிந்து கொண்டாள் சத்தியவதி. பிறகு நாட்கள் மெல்ல நகர்ந்தன. அம்பிகாவிற்க்குப் பார்வை அற்ற திருதராஷ்ட்ரன் மகனாகப் பிறந்தான். அம்பாலிகாவிற்குப் பாண்டு பிறந்தான். பணிப் பெண்ணிற்கு விதுரன் மகனாகப் பிறந்தான். 

பீஷ்மரே குருவாக இருந்து அவர்களுக்கு எல்லா விதமான போர்க் கலைகளையும், இராஜநீதியையும் கற்றுக் கொடுத்தார். மூவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள். 

தோள் வலிமை நிறைந்தவனாக திருதராஷ்ட்ரன் விளங்கினான். வில்லாற்றளில் இணையற்ற வீரனாகப் பாண்டு விளங்கினான். நேர்மையானவனாக  அறநெறிகளை நன்கு உணர்ந்தவனாக விதுரன் விளங்கினான். 

அது கண்டு இராஜ மாதா சத்யவதி பெருமை கொண்டாள்.

- தொடரும்

Tuesday, July 21, 2020

மகாபாரதம் பகுதி 22

விசித்ரவீர்யனின் முடிவும் - வியாசரின் பிறப்பும்


முந்தய அதிகாரங்களில் விசித்திர வீரியனுக்கும், காசியின் அரச குமாரிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகாவிற்கும் இடையே நடந்த திருமணத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? 

உண்மையில் அந்தத் திருமணம் நடந்த கையோடு, விசித்திர வீரியன் கல்யாண மண்டபத்திலேயே தனது உடல் உபாதையின் காரணமாக மயங்கி விழுந்தான். உடனே அவனை சேவகர்கள் மருத்துவக் கூடத்திற்கு வழக்கம் போல எடுத்துச் சென்றனர். அங்கு அவன் சில காலத்திலேயே எலும்புருக்கி நோயினால் மாண்டு போனான். 

திருமணம் முடிந்து, எந்த வித இன்பத்தையும் அனுபவிக்காத அம்பிகாவின் வாழ்வும் அம்பாலிகாவின் வாழ்வும் வசித்திர வீரியனின் மரணத்தால் இருண்டு போனது. அதனால், அவர்கள் இருவரும் கதறி அழுதார்கள். 

சத்தியவதியின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருந்தது," அய்யோ! அன்று பீஷ்மனுக்கு எனது தந்தையால் செய்யப் பட்ட அநீதியின் விலைவா இது? எனது இரு மகன்களுமே அற்ப ஆயுளில் எதையுமே அனுபவிக்காமல் போய் விட்டார்களே! இனி எனது குலம் தழைக்க வழி ஏது?" என்று புலம்பித் தவித்தாள் அவள்.

உடனே சத்தியவதி சிந்தித்தாள், தனது தந்தை செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட சித்தம் கொண்டாள். அக்கணமே, பீஷ்மரை அழைத்தாள். 

பீஷ்மனும் ராஜா மாத சத்தியவதியின் முன்பாக வந்து வணங்கி நின்றான். அப்போது பீஷ்மனிடம் சத்தியவதி, "மகனே! நீ அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். திருமணம் செய்து குழந்தையைப் பெற வேண்டும். புகழ் பெற்ற நமது அரச பரம்பரை அழியக் கூடாது. நீ செய்த சபதத்தை பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டு இருக்காதே. உனது தாயே உன்னிடம் வலிய வந்து வேண்டுவதால் நீ சபதத்தை மீறலாம். அது தவறு ஆகாது" என்றாள். 

ஆனால் பீஷ்மரோ தாயின் அந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டு, சத்தியவதியிடம், "தாயே ! நான் சபதம் செய்தது, செய்தது தான்! அதனை ஒரு பொழுதும் நான் மீற மாட்டேன். வேறு ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்" என்றார்.

அப்போது சத்தியவதி ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினாள். அக்கணம் முன்பு தனது இளமைக் காலத்தில் நடந்த ஒரு சம்பவம் அவளது நினைவிற்கு வந்தது. அதனை பீஷ்மனிடம் சொல்லத் தொடங்கினாள், "மகனே பீஷ்மா! முன்பு ஒரு காலத்தில் உனது தந்தையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி நடந்தது. 

அது யாதெனில், நான் யமுனையின் நதிக் கரையில் பரிசலை எப்பொழுதும் போல செலுத்தி வந்தேன். அப்பொழுது ஒரு நாள் முனிவர்களில் சிறந்த பராசரர் எனது ஓடத்தில் ஏறினார். அவர் அவ்வாறு ஓடத்தில் ஏறிய சில கணங்களில், எனது அழகைக் கண்டு அவர் மயங்கினார். அதனால் தனது திவ்விய திருஷ்டியால் என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார். 

அவரது பார்வையில் நான் என்னையே மறந்தேன். அப்போது அக்கணமே ஓடத்தில் தேஜஸ் மிகுந்த ஒரு மகன் எனக்குத் தோன்றினான். அவன் தான் வியாச முனிவன்!"


பராசரரும் சத்தியவதியும்
பிறக்கும் பொழுதே, அவன் ஞானத்துடன் இருந்தான். பிறந்த மாத்திரத்தில் அவன் பேசவும் தொடங்கினான். அப்போது அவன் என்னிடம்," தாயே!  நான் உங்கள் மூலமாகத் தோன்றியதால் தாங்களே எனக்குத் தாய், பராசரர் தான் எனது தந்தை. அதற்காகத் தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் பிறந்ததால் உங்களது கற்புக்கு எந்தவித பங்கமும் வந்து விடவில்லை. காரணம், நான் எல்லாப் பிள்ளைகளைப் போல உமது கருவில் பத்து மாதம் உருவாகிப் பிறக்கவில்லை. பராசரரின் ஞானத்தின் ஒளி உங்களை வந்து சேர, அதில் இருந்து நான் தோன்றி உள்ளேன். 

அத்துடன் நான் இப்போதே வனத்துக்கு சென்று, தவங்கள் செய்ய சித்தம் கொண்டு உள்ளேன். நீங்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் உங்கள் முன்னால் தோன்றுவேன்" என்று கூறி விடை பெற்றுச் சென்றான்.

- தொடரும்

Monday, July 20, 2020

மகாபாரதம் பகுதி 21

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்ம - பரசுராம யுத்தம்


    இப்படியே இருபத்தி மூன்று நாட்கள் அந்த யுத்தம் குருக்ஷேத்திரத்தில் இவ்விருவருக்கும் இடையில் நடந்தது. இவ்வாறு, எதிர் காலத்தில் நடக்க விருக்கும் ஒரு மாபெரும் யுத்தத்திற்கு அவர்களது யுத்தம் அங்கு ஒரு முன்னோடியாக இருந்தது எனலாம். 

இவ்விருவரில் வெற்றி, தோல்வி யார் பக்கம் என்று தேவர்களாலும் கணித்துச் சொல்ல முடியாத நிலை அப்போது ஏற்பட்டது. இருவரது மார்புகளிலும் அம்புகள் பட்டு இரத்தம் ஆறாக பெருக்கெடுத்தது. அப்போர் காட்சியை தூரத்தில் இருந்து கண்ட அம்பா செய்வதறியாது  திகைத்து நின்றாள்.

இவ்வாறு சாதாரண பாணங்களை முதலில் தொடுத்து ஆரம்பிக்கப்பட்ட பீஷ்ம - பரசுராம யுத்தம், மந்திர பாணங்களை தாண்டி, இப்போது திவ்விய அஸ்த்திரங்களை ஒருவர் மேல், ஒருவர் தொடுத்துக் கொள்ள வகை செய்தது.

அக்கணம் பீஷ்மர், கட்க அஸ்தம் என்னும் பாணத்தை தனது வில்லில் ஆவாகனம் செய்தார். அது கண்ட முனிவர்கள்," இந்த அஸ்திரம் பிரம்மாஸ்த்திரத்தைக் காட்டிலும் சக்தி பெற்ற அஸ்திரம் ஆயிற்றே! என்று அச்சம் கொண்டு இருக்க மறுமுனையில் பரசுராமர் தனது பாசுபதாஸ்திரத்தை பிரயோகித்தார் இரண்டு திவ்ய அஸ்த்திரங்களும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் சந்தித்து மோதினால் பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்படும் என்று தேவர்களும் அஞ்சினர்.

பிரபஞ்சத்தை காக்க சிவன் அவர்கள் இருவர் முன் தோன்றி இரண்டு அஸ்திரத்தை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டார் இதன் மூலம் இரண்டு அஸ்திரங்களின் மோதிக்கொள்ளும் நிகழ்வு தடுக்கப்பட்டது யுத்தத்தின் முடிவு தெரியாததால் சினம் கொண்ட அம்பை சிவனை வணங்கி முறையிட்டாள்.

ஆகையால் சிவன் அவளுக்கு ஒரு வரம் அருளினார் பீஷ்மனை உன்னால் இப்பிறவியில் அளிக்க இயலாது அடுத்த பிறவியில் உனது எண்ணம்  கட்டாயம் ஈடேறும் என்றார் மேலும் பீஷ்மரும் தனது பங்கிற்கு ஒரு வாக்கினை நல்கினார். 

அவ்வாறு அடுத்த பிறவியில் என்னை கொல்லும் நோக்குடன் நீ என் முன் போர்க்களத்தில் தோன்றும் வேளையில் சிவனின் வாக்கை காப்பாற்றுவதற்காக நான் என்  அஸ்த்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து நிற்பேன் என்றார். மகிழ்ச்சி அடைந்த அம்பா இனி ஒரு கணமும் நான் உயிர் வாழ விரும்பவில்லை உடனே நான் மறுபிறவி எடுப்பேன் உன்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறப்பேன் என கூறி தன் உயிர் நீத்தார்

- தொடரும்

Sunday, July 19, 2020

மகாபாரதம் பகுதி 20

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்ம - பரசுராம யுத்தம்


அம்பாவின் கண்ணீர் துளிகள் பரசுராமரின் மனதையே கரைத்தது. அப்போது பரசுராமர் அம்பாவிடம்,"மகளே! தவறு செய்தது யாராக இருந்தாலும் சரி, ஏன்? எனது தலை சிறந்த மாணவனான பீஷ்மனாகவே இருந்தாலும் சரி. நான் அவனை விடப் போவதில்லை. கண்டிப்பாக தண்டிப்பேன்" என்றார்.

உடனே அஸ்தினாபுரத்துக்கு ஒரு தூதுவனை அனுப்பினார் பரசுராமர். அவர் சென்று பரசுராமரின் செய்தியைத் தாங்கிய ஓலையுடன் பீஷ்மரை சந்தித்தார். தனது குருவான பரசுராமரிடம் இருந்து ஓலை வந்து உள்ளதாக கேள்விப்பட்டவுடன் பீஷ்மர் மிகவும் மகிழ்ந்தார். உடனே தூதுவனாக வந்த முனிவரை வணங்கி வரவேற்றார். பிறகு பரசுராமரின் செய்தி தாங்கிய ஓலையை வாங்கிப் படித்தார். 

அதில் பரசுராமர் " பீஷ்மா! நீ அம்பா என்னும் பெயர் கொண்ட அப்பாவிப்  பெண்ணின் வாழ்வை அழித்து விட்டதாக நான் கேள்விப்பட்டேன். அவள் இப்போது என்னிடம் நியாயம் கேட்டு வந்து இருக்கிறாள். எனக்கு வேறு வழி இல்லை. நான் அவளுக்கு அபயம் அளித்து விட்டேன். 

ஆதலால், வா என்னுடன் யுத்தம் செய்ய, ஒருவேளை நீ தோற்றாள் கண்டிப்பாக அம்பாவை நீ மணந்தே ஆக வேண்டும். அப்படி நான் தோற்றாள், எனது இந்த எண்ணத்தையே மாற்றிக் கொள்கிறேன், வா துவந்த யுத்தம் செய்ய. நானும் எனது சிஷ்யனான உனது வில் ஆற்றலை காண விரும்புகிறேன்" என்று எழுதி இருந்தார்.

பரசுராமர் எழுதிய செய்தியைப் படித்த பீஷ்மர். பரசுராமரின் சித்தப் படியே யுத்தம் செய்ய ஒரு களத்தை தேர்ந்தெடுத்து, அதற்கான நாளையும் குறித்து (பரசுராமருடன்) யுத்தம் செய்யப் புறப்பட்டார். ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவரான பரசுராமரும், அவ்வாறே தனது திவ்ய பாணங்களுடன், கையில் விஷ்ணு அவருக்கு அளித்த வில்லை ஏந்தியபடி கங்கை மைந்தன் பீஷ்மரை எதிர் கொண்டார்.

பரசுராமருடன் யுத்தம் புரிந்த பீஷ்மர்
அப்போது யுத்த களம் வந்த பீஷ்மர் தான் தேரில் நிற்பதையும், பரசுராமர் பூமியில் நிற்பதையும் கண்டார். அக்கணம், பீஷ்மர் பரசுராமரிடம், "குருவில் சிறந்தவரே! உம்மை வணங்குகிறேன், நான் ரதத்தில் நிற்கிறேன். நீரோ பூமியில் நிற்கின்றீர். இது சரியான யுத்தம் ஆகாது. நான் உடனே தங்களுக்கு ஒரு ரதத்தை ஆயத்தப்படுத்தித் தருகிறேன், அதில் தாங்கள் ஏறியபடி என்னுடன் யுத்தம் செய்யலாம்" என்றார்.

பீஷ்மரின் வார்த்தைகளைக் கேட்ட பரசுராமர் சிரித்தபடி, "அன்பு சிஷ்யனே! உன் போன்றவர்களுக்குத் தான் யுத்தம் செய்ய இது போன்ற அழியக் கூடிய ரதங்கள் தேவை. ஆனால், என்னைப் போன்றவர்களுக்கோ வானமே குடை, பூமியே ரதம், நான் கற்ற அழியாத நான்கு வேதங்களே, அந்த ரதத்தில் பூட்டிய குதிரைகள். நான் இதுவரையில் செய்த தவ பலன்களே எனது ரதத்தின் சாரதி" என்று கூறி ஆகாயத்தில் நின்றார். 

அது கண்ட பீஷ்மர் அக்கோலத்தில் தனது குருவான பரசுராமரை வணங்கி யுத்தம் செய்யத் தயார் என்று சொல்லும் படியாக தனது வில்லில் நாணொலி செய்தார். அக்கணமே பரசுராமரும் தனது நாராயண வில்லில் உலகம் நடுங்க நாணொலி செய்தார். பீஷ்ம பரசுராம யுத்தம் தொடங்கியது. அதைக் காண தேவர்கள் வானில் கூடினார்கள்.

சிறந்த வில்லாளிகளான பீஷ்மரும், பரசுராமரும் வாயுவை விட அதிவேகத்தில் ஒருவர் மேல் ஒருவர் பாணத்தை எய்தனர். அவைகள் ஆயிரக்கணக்கான பாணங்களாக மாறி ஒன்றுடன், ஒன்று மோதி ஆகாயத்தில் அம்பு மழையைப் பொழிந்தது. இப்படி அவர்கள் இரவு, பகலாக பாணங்களை தொடுத்த வண்ணம் இருந்தனர். 

- தொடரும்

Saturday, July 18, 2020

மகாபாரதம் பகுதி 19

பீஷ்மர் செய்த பாவம்

பீஷ்மர் பரசுராமர் யுத்தம்

அம்பா கோபம் தெறிக்க," பீஷ்மா! உன்னால் நான் அன்று அவையில் மானத்தை இழந்தேன், இப்போதோ வாழ்வை இழந்தேன். இனி நான் உன்னை விடப் போவதில்லை. உன்னை நிச்சயம் இதற்குப் பழி வாங்குவேன். ஒரு பெண், என்ன செய்ய முடியும்? என்று தானே நினைக்கிறாய். இந்த நாளை உனது வாழ்வில் குறித்துக் கொள். உனது சாவுக்கு நானே காரணம் ஆவேன்" என்று சபதம் செய்தாள்.

பீஷ்மரும் தான் செய்த காரியத்திற்காக அவளிடம் ஒரு வாக்கினை கொடுத்தார் அஸ்தினாபுரத்தில் பாதுகாக்கும் பணியை தான் மேற்கொண்டு இருப்பதால் என்னுடைய பணிகள் முடிவடைந்த நிலையில் உன்னுடைய அடுத்த பிறவியில் உன்னுடைய சபதத்தை நிறைவேற்றும் வகையில் என்னை கொல்ல போர்க்களத்தில் என் முன் எப்போது தோன்றுகிறாயோ அப்போது உனக்காக நான் என் அஸ்த்திரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து நிற்பேன் இது நான் உனக்கு தரும் வாக்காகும்.

அதனைக் கேட்ட அம்பை அப்படி என்றால் நான் மறு ஜென்மம் கண்டிப்பாக எடுப்பேன் என்று அஸ்தினாபுரத்தின் அவையை  விட்டு அடிபட்ட புலி  போல கண்ணீர் மல்க வெளியேறினாள்.
 
அவ்வாறு சென்றவள் ஒரு நதிக் கரையில் அமர்ந்து அழுதபடி இரவும் பகலுமாக இருந்தாள். ஆகாரத்தைக் கூடத் தவிர்த்தாள். அதனால் உடல் மெலிந்தாள். ஆனால், பீஷ்மனைப் பழி தீர்க்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை மட்டும் அவள் மாற்றிக் கொள்ளவே இல்லை. 

இப்படியே நாட்கள் நகர்ந்தன, அப்போது அங்கு வந்த முனிவர் கூட்டத்தினர் அம்பாவின் பரிதாப நிலையைக் கண்டார்கள். அவளை நெருங்கி விஷயத்தை அறிந்து கொண்டார்கள். அப்போது அங்கு உள்ள முனிவர்களில் மிகவும் வயதானவரான ஒருவர் அம்பாவிடம், "அருமை மகளே! நீ அழாதே அம்மா! உனது சோகம் மிகவும் பெரியது தான். அதற்கு ஆறுதல் கூற என்னாலும் இயலாது. ஆனால், உனது சோகம் தீர ஒரு வழி உள்ளது மகளே" என்றார்.

அது கேட்ட அம்பா சற்றே மனதில் நம்பிக்கை பூத்தவளாக, மகிழ்ச்சியுடன் அந்த மாமுனிவரின் முகத்தை நோக்கி," ஐயனே! எனது துயர் தீர வழி உள்ளதா? அது என்ன வழி? உடனே கூறுங்கள். நான் எனது உயிரைக் கொடுத்தாவது இப்போதே அதனை செய்கிறேன்" என்றாள்.

பரசுராமர்
அப்போது முனிவர்களின் மூத்தவரான அந்தப் பெரியவர், "மகளே! நீ உனது உயிரைக் கொடுக்கத் தேவை இல்லை. பீஷ்மர் போன்ற கொடுமை புரியும் சத்திரியர்களை ஆதி காலம் முதல் எதிர்த்து அழித்தவர் பரசுராமர். அவர் இப்போது இமயமலையின் அடி வாரத்தில் வசித்து வருகிறார். நீ உடனே சென்று அவரைப் பார். அவரால் தான் பீஷ்மரை எதிர்க்க முடியும். காரணம், பீஷ்மருக்கு வில் வித்தையை கற்றுக் கொடுத்தவரே அவர் தான்" என்றார்.  

அதனைக் கேட்ட அம்பா, தனக்கு நல்வழி காட்டிய அந்த வயோதிக முனிவரை வணங்கி விட்டு, அவர் சொன்ன இமயமலையின் அடிவாரத்தை அடைந்து பரசுராமரை சந்தித்தாள். பிறகு அவரிடம் தனக்கு பீஷ்மரால் நேர்ந்த கொடுமைகளை எல்லாம் சொல்லி, உதவி கேட்டு அழுது நின்றாள்.

- தொடரும்

Friday, July 17, 2020

மகாபாரதம் பகுதி 18

பீஷ்மர் செய்த பாவம்

அம்பையின் சினம்


    சால்வனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அம்பா தரையில் விழுந்த மீன் போலத் துடி, துடித்துப் போனாள். கதறினாள். அழுதாள். பிறகு சால்வனிடம்," அரசே! நான் நீர் சொல்வது போல பொருள் அல்ல, ஒரு உயிர் உள்ள பெண். ஆக, நீர் என்னை போரில் வென்ற ஒரு பொருளாக பாவித்து புறக்கணிப்பது நியாயமா? உம்மையே நம்பி வந்தேனே!" என்றாள்.

சால்வனோ அம்பாவிடம், "நீ என்னிடம் நியாய, அநியாயத்தை பற்றிப் பேசாதே. நான் உன்னிடம் இருந்து எதையும் கேட்கவும் விரும்பவில்லை. உனக்கு நியாயம் கேட்க வேண்டும் என்றால் போய், உன்னை அன்று சபையில் கவர்ந்த பீஷ்மனிடத்தில் கேள். இனி நீ என்னைப் பார்க்க இங்கு வராதே! நீ விரும்பிய சால்வன் எப்போதோ செத்து விட்டான். போ!" என்றான்.

அம்பா அழுது கொண்டே சௌபல நாட்டை விட்டு மீண்டும் அஸ்தினாபுரத்தின் அரண்மனையை அடைந்தாள். அப்போது சத்தியவதி, விசித்திர வீரியனுக்கு அம்பிகாவையும், அம்பாலிகாவையும் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கொண்டு இருந்தாள். 

அவர்கள் அனைவரும் கோபத்துடனும், வருத்தத்துடனும் வந்து நின்ற அம்பாவை பார்த்தார்கள். அப்போது அம்பாவிடம், அவள் வந்த காரணத்தைக் கேட்டாள் சத்தியவதி.  அம்பா சால்வனால் தான் நிராகரிக்கப்பட்டதை கூறி சத்தியவதியிடம் முறையிட்டாள்

அம்பா உடனே நடந்த அனைத்து விஷயத்தையும் சத்தியவதியிடம் கூறி முடித்தாள். அது கேட்ட சத்தியவதி சற்று நேரம் யோசித்து பின் அம்பாவிடம், "இதை எல்லாம், இப்போது நீ எங்களிடத்தில் சொல்வதேன்? நாங்கள் உன் விவகாரத்தில் என்ன செய்ய முடியும்? உனக்காக நாங்கள் அனுதாபப் படுகிறோம். எங்களால் அவ்வளவு தான் முடியும்" என்றாள். 

அது கேட்ட அம்பா, இன்னும் உக்கிரம் அடைந்தாள். பிறகு சத்தியவதியைப் பார்த்து, "யாருக்கு வேண்டும் உங்கள் அனுதாபம்? உங்கள் மகன் பீஷ்மனால் இப்போது எனது வாழ்வு அழிந்து கேள்விக் குறியாகப் போய் விட்டதே! இதற்கு ஒரே பரிகாரம் என்னைக் கவர்ந்து வந்த பீஷ்மன் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றாள்.

எனது மகன் பீஷ்மன் வாழ்க்கையில் பிரம்மச்சார்ய விரதத்தை கடைபிடித்து வாழ்பவன். அவனால் உன்னை திருமணம் செய்து கொள்ள இயலாது, 

சினம் கொண்ட அம்பா எனக்கு இன்று இந்த அவையில் நியாயம் கிடைக்க வேண்டும். பீஷ்மா நீயே எனக்கு ஒரு நியாயத்தை சொல்!" என்றாள்

- தொடரும்

Thursday, July 16, 2020

மகாபாரதம் பகுதி 17

பீஷ்மர் செய்த பாவம்

அம்பையின் கையறு நிலை


    மறுபக்கம், சால்வனை வென்ற பீஷ்மர் மீண்டும் தனது ரதத்தை அஸ்தினாபுரம் நோக்கிச் செலுத்தச் செய்தார். சில நேரத்தில் தனது அரண்மனையை அடைந்தார். தாய் சத்தியவதியிடம் தான் இழுத்து வந்த மூன்று இளவரசிகளையும் ஒப்படைத்தார். 

சத்தியவதி அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்று, விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தாள். அப்போது அந்த மூன்று இராஜகுமாரிகளில் மூத்தவளான அம்பா சத்தியவதியை நெருங்கினாள். அவளது பாதத்தில் விழுந்து வணங்கி இராஜமாதா, "நான் சௌபல நாட்டு அரசன் சால்வனை காதலிக்கிறேன். இருவருமே திருமணம் செய்து கொள்ள எண்ணம் கொண்டு இருந்தோம். ஆனால், உங்கள் மகன் பீஷ்மர், என்னை வலுக்கட்டாயமாக கடத்தி வந்து விட்டார். இது நியாயமா?" என்றாள்.

அது கேட்ட பீஷ்மர்," அம்பா, நீ சால்வனை பார்த்தபோதே இதனை என்னிடம் சொல்லி இருக்கலாமே! இப்போது இதனை சொல்கிறாயே?" என்றார். 

அதற்கு அம்பா மீண்டும் சத்தியவதியிடம், "தாயே! நான் பீஷ்மர் மீது கொண்ட பயத்தால் தான் அப்போது நான் சால்வனை காதலித்த விஷயத்தை அவரிடம் கூறாமல் உங்களிடம் இப்போது வந்து கூறினேன்" என்றாள். 

அதைக் கேட்ட சத்தியவதி, "வேறு ஒரு ஆடவனை மனதார நினைத்த பெண், இந்த அஸ்தினாபுரத்தின் மருமகளாக ஆகத் தகுதி அற்றவள். அதனால், நீ இப்போது செல், நீ விரும்புகின்றவனையே திருமணம் செய்து கொள்" என்று அவளை அனுப்பி வைத்தாள்.

அம்பா சால்வனைத் தேடி சௌபல நாட்டின் அரண்மனையை அடைந்தாள். அப்போது தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு அவனிடம் கூறினாள். அதற்கு சால்வன் அமைதியுடன் அவளை நோக்கினான். 

பிறகு அவளிடம், "அன்று போரில் நான் பீஷ்மரிடம் தோற்று விட்டேன். சத்திரிய அரசர்களின் தர்மப்படி தோற்ற பொருளை மீண்டும் பெறுவது அழகல்ல. அது பிட்சையை விடக் கேவலம். அதனால், நான் உன்னை இனி எனது மனைவியாக ஏற்றுக் கொள்ள இயலாது. நீ போய் விடு" என்றான்.


- தொடரும்

Wednesday, July 15, 2020

மகாபாரதம் பகுதி 16

பீஷ்மர் செய்த பாவம்

சால்வனின் தோல்வி


    காசி ராஜனின் நிலை இப்படி இருக்க, அந்த மூன்று இராஜ குமாரிகளையும் தனது ரதத்தில் ஏற்றியபடி பீஷ்மர் காசியின் எல்லையைக் கடந்து கொண்டு இருந்தார். அப்போது எங்கிருந்தோ ஒரு பாணம், நெருப்பை கக்கிக் கொண்டு பீஷ்மரின் ரதத்திற்கு முன்னால் வந்து பூமியில் குத்தி நின்றது. 

அக்கணமே, பீஷ்மர் தனக்கு யாரோ ஒரு அரசன் அரை கூவல் விடுத்து உள்ளான் என்பதை உணர்ந்தவராக, அந்த அறைகூவலை நேருக்கு, நேராக சந்திக்கத் தனது ரதத்தை அவ்விடத்திலேயே நிறுத்தினார்.

அப்பொழுது சௌபல நாட்டின் அரசனான சால்வனை போர் கோலத்தில் கண்டார் பீஷ்மர். அவன் கைகளில் வில்லுடன் பீஷ்மனிடம்," ஏ பீஷ்மா! நீ என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாய்? உன்னை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாயோ? இல்லை, உனது தந்தையிடம் இச்சை மரணம் என்னும் கவசத்தை வரமாகப் பெற்றதன் திமிரா? மரியாதையாக காசியின் இராஜ குமாரிகளை விட்டு, விட்டுச் செல். இல்லை வா என்னுடன் துவந்த யுத்தம் செய்ய!" என்றான். 

சால்வன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் நகைத்தார், பிறகு சால்வனிடம் "சால்வனே! நான் உன்னைக் கண்டு பெருமை கொள்கிறேன். இந்த பாரத வர்ஷத்திலேயே, என்னை எதிர்க்க யாரும் இல்லை என்று நினைத்து இருந்தேன். அதுபோலவே, சுயம்வரத்தில் என்னைக் கண்டு பயந்து அனைத்து அரசர்களும் ஓடி விட்டனர். 

ஆனால், நீ ஒருவனாவது ஆண் மகனாய் என்னை எதிர்க்க வந்தாயே! நீ வீரன் தான். எடு உனது வில்லை. தொடு உனது பாணத்தை. இந்த பீஷ்மனிடம் நீ  எவ்வளவு நேரம் யுத்தத்தில் தாக்குப் பிடிக்கிறாய் என்று பார்க்கிறேன்" என்றார். 

அடுத்த கணம் சால்வனும், பீஷ்மரும் யுத்தம் செய்யத் தொடங்கினார்கள். சால்வனால், பீஷ்மனின் பாணங்களுக்கு முன்னாள் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெறும் ஐந்து பாணங்களைக் கொண்டு பீஷ்மர் சால்வனின் தேர் சாரதியைக் கொன்றார். அவனது இரதத்தையும் நாசம் செய்தார். அத்துடன் அவனையும் சிறை பிடித்து அவமானப் படுத்தினார். 

அம்பை
பிறகு சால்வனுக்கு உயிர் பிச்சை அளித்து, விரட்டி அடித்தார். அரச குமாரிகள் முன்னிலையில் தான் பட்ட அவமானத்தை எண்ணியபடி சால்வன் வருந்திச் சென்றான். அக்காட்சியை, அந்த மூன்று இராஜகுமாரிகளில் மூத்தவளான அம்பா தனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கப் பார்த்தாள். அந்தப் பார்வைக்கு ஒரு காரணமும் இருந்தது.

- தொடரும்

மகாபாரதம் பகுதி 15

பீஷ்மர் செய்த பாவம்


    தாய் சத்தியவதியின் ஆணையை ஏற்று தனது ரதத்தில் ஏறி தனி ஒரு ஆளாக காசியின் அரண்மனையை அடைந்தார் பீஷ்மர். அக்கணமே சுயம்வர மண்டபத்தை நோக்கி வில்லேந்திய கைகளுடன், போர்கோலம் பூண்டு கோபத்துடன் நுழைந்தார் அவர். அப்போது சுயம்வர மண்டபத்தில், அச்சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்து இருந்த பல நாட்டு அரசர்களும், பீஷ்மர் அங்கு வந்ததன் காரணத்தை அறியாமல்.

பீஷ்மரின் கோபத்தை தூண்டும் வகையில்," காசியின் இராஜ குமாரிகளைப் பார்த்து, பீஷ்மரே ஆசை கொண்டார் போலும். அதனால் தான் அழைப்பு இல்லாமலேயே, தனது சபதத்தையும் மறந்து காசிக்கு வந்து விட்டார் பாருங்கள்!" என்று கூறி கேலி செய்து சிரித்தார்கள். 

பீஷ்மரின் மனதளவில் ஏற்கனவே கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பிலே, எண்ணெய்யை ஊற்றியது போல இருந்தது அந்த அரசர்களின் ஏளனச் சிரிப்பு. அக்கணமே, உலகம் நடுங்க தனது வில்லில் நாணொலியை ஏற்படுத்தினார் பீஷ்மர். அதனால் அங்கு வந்து இருந்த அரசர்கள் அனைவரும் நடுங்கினர். 

அத்துடன் பீஷ்மர் அவையில் இருந்த அரசர்களைப் பார்த்து, "நான் இந்த மூன்று இராஜகுமாரிகளையும் அஸ்தினாபுரத்துக்கு கவர்ந்து செல்கிறேன். அத்துடன் இவர்கள் மூவரையுமே அஸ்த்தினாபுரத்து அரசனான விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்கப் போகிறேன். என்னைத் தடுப்பவர்கள் தடுத்துப் பாருங்கள்" என்று கூறியபடி மூன்று இராஜ குமாரிகளையும் கைது செய்து இழுத்து வந்து தனது இரத்தத்தில் ஏற்றினார். 

அப்போது பீஷ்மரைத் தடுக்க அவ்விடத்தில் எந்த ஒரு அரசனுக்கும் தைரியம் வர வில்லை.

மறுபுறம், பீஷ்மரின் ரதம் விரைவாக அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. காசி ராஜனோ, தனது ஆசையுடன், தனது மகள்களின் ஆசைகள், கனவுகள், எல்லாம் சிதைந்து போகிறதே என்று கலங்கித் தவித்தான். இருந்தாலும், அவனால் பீஷ்மரை எதிர்க்க இயலாததால் தலை குனிந்து நின்றான்.

-தொடரும்

Monday, July 13, 2020

மகாபாரதம் பகுதி 14

அம்பா-அம்பிகா-அம்பாலிகா


அப்போது  காசி நாட்டு அரசன் தனது மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவருக்கும் சுயம்வரம் செய்ய விருப்பம் கொண்டு அஸ்தினாபுரத்தை தவிர்த்து பல நாட்டு அரசர்களுக்கும் ஓலை அனுப்பினான். இந்தச் செய்தி ஒற்றர்கள் மூலம் பீஷ்மரின் காதுகளை சென்று அடைந்தது. 

பீஷ்மர் இதனை அஸ்தினாபுரத்துக்கு நேர்ந்த அவமானமாகக் கருதினார். அதனால், கோபம் கொண்டார். ராஜமாதா சத்தியவதியிடம் காசி இராஜனின் இச்செயலை எடுத்து உரைத்தார். அப்போது சத்யவதி, காசியின் அரசன் மீது பீஷ்மரைக் காட்டிலும் அதிக கோபம் கொண்டாள். 

சத்தியவதி பீஷ்மரிடம், "பீஷ்மா! காசி இராஜனின் மூன்று மகள்களையும் சிறை படுத்தி அழைத்து வா" என்றாள். ஆனால், பீஷ்மர் அதற்குத் தயங்கினார். அத்துடன் தாய் சத்தியவதியிடம், "தாயே! நானோ ஒரு பிரம்மச்சாரி, நீரோ பெண்களை கடத்தி வர சொல்கின்றீர். இது சரியா?" என்றார்.

ஆனால் இராஜ மாதா சத்தியவதி," பீஷ்மா! நான் உனது தாயின் ஸ்தானத்தில் இருப்பவள். அதனால் நான் சொன்னதை சரியா, தவறா என்று எல்லாம் ஆராயாமல் சொன்னதை மட்டும் செய். நமக்கு மட்டும் ஓலை அனுப்பாமல், பாரத கண்டத்தில் உள்ள அனைத்து அரசர்களுக்கும் ஓலை அனுப்பி இருக்கிறான் அந்தக் காசி ராஜன். இதனால் அவன் அஸ்தினாபுரத்தை அவமதித்து விட்டான். நாம் அவனை பதிலுக்கு அவமானப் படுத்த வேண்டும். அவமானத்துக்கு, அவமானமே வெகுமானம். அதனால், அவன் முன்பாகவே அவன் பெண்களை சிறை படுத்தி அழைத்து வா!" என்றாள்.

- தொடரும்

Sunday, July 12, 2020

மகாபாரதம் பகுதி 13

சித்திராங்கதனின் மரணம்


சித்திராங்கதன் நல்லவன், ஆனால் முன்கோபி. எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு சிறிய சிக்கலையும் பெரியதாக மாற்றும் இயல்பு கொண்டவன். மறுபுறம், விசித்திர வீரியன் ஒரு நோயாளி. அவனுக்கு எப்போதும் உடலில் ஏதேனும் உபாதை வந்து கொண்டே இருக்கும். தனது வாழ் நாளை பெரும்பாலும் மருத்துவக் கூடத்திலேயே அவன் கழித்தான். இந்தக் கவலை அரசர் சந்தனுவை வாட்டி வதைத்தது. 

அந்தக் கவலையிலேயே சந்தனு ஒரு நாள் மாண்டார். அப்போது இளவரசர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தனர். அதனால், ஆட்சிப் பொறுப்பை பீஷ்மரே கவனித்து வந்தார். 

நாளடைவில் சித்திராங்கதன் வளர்ந்தான். பீஷ்மர் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார். சத்தியவதியும் அதற்கு சம்மதித்தாள். ஒரு சுப வேளையில் சித்திராங்கதனை அஸ்தினாபுரத்தின் அரசனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்து மகிழ்ந்தார் பீஷ்மர். சித்திராங்கதன் கோபக்காரனாக இருந்தாலும் நல்ல குணவானாக இருந்தான். எண்ணற்ற தான தருமங்களை செய்தான். 

சத்திய வழியில் நடந்து மக்களின் நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றான். அவனது புகழ் சுவர்க்கம் வரையில் பரவியது. இப்படி இருக்க சித்திராங்கதன் என்ற அதே பெயரில் ஒரு கந்தர்வன் வானுலகத்தில் வாழ்ந்து வந்தான். தனது பெயரிலேயே பூவுலகத்தில் ஒருவன் புகழ் பெற்று வாழ்ந்து வருவதை அறிந்தான் அவன். அதனால் பொறமை கொண்டான். 

அந்தப் பொறாமை கோபமாக மாறியது. நாளடைவில் அந்தப் கோபம் அவனுக்குப் பழி உணர்ச்சியாக வளர்ந்தது. அதனால், அஸ்த்தினாபுரத்தின் அரசனான அந்தச் சித்திராங்கதனை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தான். அன்று முதல் சித்திராங்கதனை கண்காணிக்கத் தொடங்கினான் அந்த கந்தர்வன்.

அதற்குத் தகுந்தவாறே அஸ்த்தினாபுரத்து அரசனான சித்திராங்கதன் ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றான். இதுவே தான் எதிர்பார்த்த தக்க தருணம், என்று அப்போது அவனது வழியில் குறுக்கிட்ட அப்பொறாமை கொண்ட கந்தர்வன் அவனை வஞ்சகமாகக் கொன்றான். 

சித்திராங்கதனின் மரணத்தால் அஸ்த்தினாபுரமே சோகத்தில் ஆழ்ந்தது. மூத்தவன் இறந்து விட்டதால் இளையவனுக்கு முடி சூட்டலாம் என்று சிலர் கூறினர். ஆனால், விசித்திர வீரியன் சிறுவனாக இருந்ததால் அவன் வளரும் வரையில் மீண்டும் ஆட்சியை பீஷ்மர் கவனிக்கத் தொடங்கினார். 

காலங்கள் உருண்டோடியது. வசித்திர வீரியன் வளர்ந்தான். மீண்டும் தாய் சத்தியவதியின் ஆணைப் படி பீஷ்மர் விசித்திர வீரியனுக்கு அரச மகுடம் சூட்டி, அவனை அஸ்த்தினாபுரத்தின் அரசனாகப் பிரகடனம் செய்தார்.

ஆனால், அவனுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஒன்றன் பின், ஒன்றாக வந்ததால் பீஷ்மரே ஆட்சிப் பொறுப்பை அவனது பெயரில் நடத்தி வந்தார். இந்நிலையில், ராஜமாதா சத்தியவதி, விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்ய நினைத்தாள். அதன் பொருட்டு பெண் பிள்ளைகளை வைத்து இருக்கும் பல நாட்டு அரசர்களுக்கும் பெண் கேட்டு ஓலை அனுப்பினாள். 

ஆனால், விசித்திர வீரியனின் உடல் நிலையை அறிந்த அனைத்து அரசர்களும் தங்கள் பெண்களை அவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்து வேகமாக தங்கள், தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்யத் தொடங்கினார்கள். அதே சமயத்தில் அந்த அரசர்களுக்கு பீஷ்மர் மீது பயம் இருந்ததால் வெளிப்படையாக அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் தங்கள் கருத்தை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டனர்.

- தொடரும்

Saturday, July 11, 2020

மகாபாரதம் பகுதி 12

சந்தனுவின் திருமணம்


உடனே தேவவிரதனின் வார்த்தையை கேட்ட அந்த மீனவத் தலைவன், "இளவரசரே! தாங்கள் வேண்டும் என்றால் அரியணையை விட்டுத் தரலாம். ஆனால், உங்களுக்குப் பிறக்கும் மக்கள் விட்டுத் தருவார்களா?" என்றான்.

அதனைக் கேட்ட தேவவிரதன்," இவ்வளவு தானே உங்கள் பிரச்சனை. அப்போது எனில் கேளுங்கள். வானகமே! மண்ணகமே! கதிரவனே! காற்றே! மும்மூர்த்திகளே! முப்பது முக்கோடி தேவர்களே! கேளுங்கள். நான் கங்கா புத்திரன் தேவவிரதன் இன்று சபதம் மேற்கொள்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் நான் திருமணமே செய்து கொள்ளாமல், பிரம்மச்சாரியாகவே இருப்பேன். அத்துடன் அஸ்தினாபுரத்தை ஆளும் அரசனுக்குப் பாதுகாவலனாய் இருப்பேன். இது எனது தாய் கங்கா தேவியின் மீது ஆணை"  என்று உணர்ச்சி பொங்கச் சபதம் செய்தான் அவன்.

தேவவிரதன் அவ்வாறு சபதம் செய்த மாத்திரத்தில் வானத்தில் எட்டுத் திசைகளிலும் மேகங்களே இல்லாமல் மின்னலுடன் பலத்த இடி முழக்கம் ஏற்பட்டது. அக்கணம் வானவர்கள் தோன்றி தேவவிரதனின் மீது பூ மழையை பொழிந்தார்கள். அப்போது, வானத்தில் எல்லாத் திசைகளில் இருந்தும் பீஷ்மன் என்ற ஒலி எழுந்தது. "பீஷ்மன்" என்றால் "செயற்கரிய செயலைச் செய்தவன்" என்று பொருள். தனது தந்தைக்காக எந்த மகனும் செய்யத் தயங்கும் தியாகத்தை அன்று தேவவிரதன் தயங்காமல் செய்ததால், அந்த நாள் முதற்கொண்டு அவன் பீஷ்மன் என்று அழைக்கப்பட்டான்.

தனது மகன் செய்த சபதத்தை கேள்விப்பட்டு நெகிழ்ந்தான் சந்தனு. உடனே அவன் பீஷ்மனை அழைத்தான். தந்தையின் அழைப்பை ஏற்று பீஷ்மனும் விரைந்து வந்தான். 

அப்போது பீஷ்மனிடம் சந்தனு, "மகனே! நான் சந்திர குலத்தில் பிறந்தவன். இது வரையில் எத்தனையோ தவங்களை செய்து சித்தி பெற்றவன் நான். இன்று அந்த தவத்தின் பயனைக் கொண்டு உனக்கு ஒரு வரம் தருகிறேன். கேள்! நீ எப்பொழுது விரும்புகிறாயோ அப்பொழுது தான் உனது உயிர் நீங்கும்" என்றான். 

பிறகு ஒரு நல்ல முகூர்த்த நாளில் சந்தனுவுக்கும், சத்தியவதிக்கும் திருமணம் நடந்தது. அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகக் கழிந்தது. அதன் பயனாய் அவர்களுக்கு சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

- தொடரும்

Friday, July 10, 2020

மகாபாரதம் பகுதி 11

தேவவிரதன் பீஷ்மர் ஆகுதல்


சூழ்ச்சி மற்றும் பேராசையின் மொத்த உருவமான அந்த மீனவத் தலைவன் ராஜா சந்தனுவின் வார்த்தையை கேட்டு சற்றே யோசித்தான். பிறகு சந்தனுவிடம்," ஏ ராஜன்! தெய்வத்தின் அருளால் எனக்குக் கிடைத்த அருமை மகள் அவள். நான் அவளை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றான். 

"உனது நிபந்தனை என்ன?" என்றான் சந்தனு.

மீனவத் தலைவன் தனது நிபந்தனையை கூறத் தொடங்கினான்," அரசே! எனது மகளுக்கு உம்மூலமாக பிறக்கும் பிள்ளை தான் அரசனாக வேண்டுமே தவிர இப்போது இளவரசனாக இருக்கும் உமது மகன் தேவவிரதனை நீ எக்காலத்திலும் அரசன் ஆக்கக் கூடாது. இது தான் எனது சிறிய நிபந்தனை. இதற்கு நீர் ஒப்புக் கொண்டால், உடனே எனது மகளின் திருமணத்தை உம்முடன் நான் நடத்துகிறேன்" என்றான்.  

அதனைக் கேட்ட சந்தனு, "எனது ஆசைக்காக இளவரசன் தேவவிரதனின் உரிமையை மறுப்பதா? இது அநியாயம் அல்லவா?" என்று தனக்குள் சிந்தித்தவனாக அம் மீனவத் தலைவனிடம் எதுவும் பேச விரும்பாமல் தனது ரதத்தில் ஏறி அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பினான்.

அவ்வாறு அஸ்தினாபுரத்தின் அரண்மனைக்குத் திரும்பிய சந்தனு கவலை கொண்ட முகத்துடன் சத்தியவதியின் நினைவாகவே இருந்தான். தந்தை எப்போதும் போல இல்லாமல் கவலை கொண்ட முகத்துடன் இருப்பதைக் கண்டான் தேவவிரதன். உடனே தந்தையின் தேரோட்டியை அழைத்தான், அவன் மூலம் நடந்ததை அறிந்தான். மறுகணம், தனது தேர் சாரதியை அழைத்து உடனே யமுனையின் அக்கறைக்கு மீனவத் தலைவனை பார்க்கச் சென்றான்.  

பீஷ்ம சபதம்
அப்போது அந்த மீனவத் தலைவனை சந்தித்த தேவவிரதன் அவனிடம், "உங்கள் மகளை என் தந்தைக்குத் திருமணம் செய்து வையுங்கள். எனது தந்தையின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதற்காக நான் எதையும் செய்வேன். அரியணையில் என்றும் நான் அமர மாட்டேன், உங்கள் பேரனே அதில் அமர்வான். இது நான் உங்களுக்குத் தரும் வாக்குறுதி" என்றான்.

- தொடரும்

Thursday, July 9, 2020

மகாபாரதம் பகுதி 10

தேவவிரதன் பீஷ்மர் ஆகுதல் 

    சந்தனுவின் வாழ்கையில் தேவவிரதன் வந்த நாள் முதலாக எல்லாம் நல்லதாகவே நடந்து கொண்டு இருந்தது. அதனால், அவன் எப்பொழுதும் முகம் மலரக் காணப்பட்டான். அப்படி இருக்கும் பொழுது ஒரு நாள், அவன் அரச காரியமாக யமுனையின் ஆற்றங்கரைக்கு வந்தான். 

அங்கே படகோட்டிக் கொண்டு இருந்த சத்தியவதி என்ற பெண்ணைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் அவளது அழகில் மயங்கினான். அப்போது அவளது படகில் ஏறிச் சென்றவாறு, அவளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டான். 

சத்தியவதியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை அவனை அன்று இரவு தூங்கவிடாமல் ஆட்டிப் படைத்தது. அதனால் வந்த ஏக்கத்தில் அறுசுவை உணவும் அவனுக்கு கசந்தது, சந்திரனின் கிரணங்களும் அவனை சுட்டது. அதனால், அவன் உடல் வெம்மை அடைந்தது. அக்கணம் அவன் படுத்திருந்த மஞ்சத்தில் இருந்த மலர்களும் கூட அந்த வெம்மையால் தீய்ந்து போனது. 

அடுத்த சூரியோதயம் எப்பொழுது வரும் என்று ஏங்கினான். சந்திர குலத்தில் பிறந்த அந்த அரசனின் நிலை கண்டு, சூரியன் பரிதாபம் கொள்ள, மெல்ல வானில் தோன்றத் தொடங்கினான். ஆம்! மெல்ல பொழுது விடிந்தது. 

பொழுது விடிந்த மாத்திரத்தில் சந்தனு வெகுவாக எழுந்தான். விறுவிறுப்பாக
தனது காலைக் கடமைகளை முடித்தான். உடனே, தனது தேர் சாரதியை அழைத்து, இரதத்தை யமுனையின் அக்கரையில் செலுத்துமாறு ஆணை பிறப்பித்து அதில் ஏறி அமர்ந்தான். ரதமும் வாயு வேகத்தில் புழுதியை வானில் கிளப்பியபடி யமுனையின் அக்கறை நோக்கிப் புறப்பட்டது.

சந்தனு யமுனையின் கரையை அடைந்த மாத்திரத்தில், சத்யவதியின் தந்தையான மீனவத் தலைவனை சந்தித்தான். அப்போது அவனிடம், "மீனவர் தலைவனே! எம்மைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன், அத்துடன் சுருக்கமாக நான் உம்மிடம் வந்த விஷயத்தையும் சொல்கிறேன். கேளும்! உமது மகளான சத்யவதியை நான் நேற்று கண்டேன். கண்ட மாத்திரத்தில் அவள் மேல் மையல் கொண்டேன். அவளை நான் மணக்க விரும்புகிறேன். உனக்குச் சம்மதமா?" என்றான்.

- தொடரும்

Wednesday, July 8, 2020

மகாபாரதம் பகுதி 9

சந்தணுவின் மகன் தேவவிரதன்


கங்கை தேவவிரதனை சந்தனுவிடம் ஒப்படைத்தல்
மகாராஜா சந்தனு, கங்கையைக் கண்டவுடன் மகிழ்ந்தான். அக்கணம் அந்த இளைஞனும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க கங்கையை "தாயே!" என்று அழைத்த படி நெருங்கினான். 

அப்போது கங்கை சந்தனுவிடம், "அரசே ! இவன் உமது மகன் காங்கேயன். இவனை தேவவிரதன் என்றும் அழைப்பார்கள். அத்துடன், நான் தங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கின் படியே இவனை அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக வளர்த்து உள்ளேன். 

இவனை வெல்பவர் இந்தப் பாரத தேசத்திலேயே இது வரையில் யாரும் இல்லை. இனி யாரும் இருக்கப் போவதும் இல்லை. இவனுக்கு தனுர் வித்தையை சொல்லிக் கொடுத்தவர் பரசுராமர். அத்துடன் அரசியல், தர்மம், இராஜ நீதி போன்ற பல விஷயங்களையும் இவன் வஷிஸ்டர் பெருமானிடம் சீடனாக இருந்து கற்றுக் கொண்டான். 

இப்படிப் பட்ட ஒரு அறிஞனை இப்போது உங்களது மகனாக, உங்களிடமே ஒப்படைக்கிறேன். இத்துடன் எனது அனைத்துக் கடமைகளும் முடிந்துவிட்டது" என்று கூறினாள். 

பிறகு தனது மகனான காங்கேயன் எனப்படும் தேவவிரதனிடம், "மகனே! இவரே உனது தந்தையான மகாராஜா சாந்தனு. இனி உனக்கு எல்லாமே இவர் தான். ஆனால், அதே சமயத்தில் நீ எப்போதெல்லாம் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாயோ! அப்போதெல்லாம் நான் உன் முன்னாள் தோன்றுவேன்" என்று கூறிவிட்டு மறைந்தாள்.

கங்கை அவ்வாறு சொல்லி விட்டு சென்ற மாத்திரத்தில், சந்தனு தேவவிரதனை பாசத்துடன் " மகனே!" என்று கூறிய படி நெருங்கினான். தேவவிரதனும், சந்தனுவை, "தந்தையே!" என்று கூறியபடி அன்புடன் நெருங்கினான். இருவரும் கண்களில் கண்ணீர் பெருக ஒருவரை, ஒருவர் அணைத்துக் கொண்டனர். 

பிறகு, சந்தனு தனது மகன் தேவவிரதனுடன் அளவளாவி உரையாடிய படி அவனை அஸ்த்தினாபுரத்தின் மாளிகைக்கு அழைத்து வந்தான். அடுத்த நாளே அவன் சபையைக் கூட்டி, தனது மகன் சந்தனுவை அவையில் உள்ள அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான். 

அப்போது அறிஞர்கள் பலர் தேவவிரதனின் அறிவாற்றலை எண்ணற்ற கேள்விகள் மூலம் சோதித்து, அவன் கூறிய பதில்களால் அவனது அறிவின் திறனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அத்துடன் தேவவிரதனே நாட்டை ஆள சிறந்தவன் என்றார்கள். அதனால், சந்தனு பெருமை கொண்டான்.

அத்துடன் தேவவிரதன் தன்னுடைய ஈகை குணம், பெருந்தன்மை, பெரியோர்களை மதித்தல் போன்ற பல நல்ல பண்புகளால் அஸ்த்தினாபுரத்தின் பிரஜைகள் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தான். ஒரு நல்ல நாள் பார்த்து தேவவிரதனை இளவரசனாக முடி சூட்டினான் சந்தனு.

- தொடரும்

Tuesday, July 7, 2020

மகாபாரதம் பகுதி 8

சந்தணுவின் மகன் தேவவிரதன்


        தனது மனைவியான கங்கை, தனது குழந்தையை எடுத்துச் சென்ற நாள் முதல் சந்தனு மிகவும் சோகத்தில் வாழ்ந்தான். எனினும் தனது சோகத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நல்ல முறையில் ஆட்சி நடத்தி வந்தான். கங்கை தான் சொல்லியபடி தனது மகனுடன் எப்போது வருவாள் என்ற ஏக்கத்தில் தினமும் கங்கையின் கரையில் சென்று பல மணி நேரங்கள் பித்துப் பிடித்தவன் போல அமர்ந்து இருப்பான். 

அக்கணம் சோகத்தில் அவனையும் அறியாமல் தனது மனைவியையும், குழந்தையையும் நினைத்துத் தாரை, தாரையாகக் கண்ணீர் வடிப்பான். இப்படியே பதினாறு ஆண்டுகள் சந்தனு தனது அன்பு மகனின் வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள் காலையில் சந்தனு சந்தியா வந்தனம் செய்வதற்காக கங்கைக் கரையை அடைந்தான். அப்போது கங்கையில் தண்ணீர் வற்றியது போல இருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான். 

"கங்கை எக்காலத்திலும் வற்றாதவள் ஆயிற்றே! இது நடக்குமா?" என்று தன்னையே அவன் கேட்டுக் கொண்டான். அப்போது இடியைப் போன்ற ஒரு பேரொலியைத் தனது காதுகள் கொண்டு கேட்டான். சற்றே சுதாரித்துக் கொண்ட சந்தனு, பிறகே அது இடியின் ஓசை அல்ல, வில்லின் நாணொலி என்பதைப் புரிந்து கொண்டான். அவ்வாறு ஒலி கேட்ட திசையை நோக்கி விரைந்தான். 

அங்கு ஒரு இளைஞன், தனது பாணங்களைக் கொண்டே ஒரு அணையை உருவாக்கி கங்கையின் பிரவாகத்தை தடுத்துக் கொண்டு இருந்தான். பிறகு சற்று நேரம் கழித்து, ஒரே ஒரு பாணம் கொண்டே, மிக எளிதாகத் தான் கட்டிய அந்த பலம் கொண்ட அணையை, பெரும் ஓசை ஏற்பட உடைத்து எறிந்தான். இப்படிப் பல முறை அந்த இளைஞன் விளையாட்டாக செய்து கொண்டு இருப்பதைக் கண்டான் சந்தனு.

அப்போது அந்த இளைஞனின் வில் ஆற்றலைக் கண்டு மிகவும் வியந்தான் சந்தனு. எனினும், ஒரு இளைஞன் தனது மனைவியான கங்கையின் பிரவாகத்தை தடுத்து விளையாடுவதை சந்தனுவால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. உடனே அந்த இளைஞன் மீது கோபம் கொண்டு, அவனைத் தடுக்க அரண்மனைக்கு விரைந்து சென்று தனது பாணங்களையும், வில்லையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். 

அவ்வாறே, கண்களில் கோபம் வெளிப்பட அந்த இளைஞன் இருக்கும் இடத்தை அடைந்து, அவனுடன் போர் செய்ய அறைகூவல் விடுத்தான்.

அந்த இளைஞனும், சந்தனுவின் அறைகூவலால் மகிழ்ந்து யுத்தம் செய்யத் தொடங்கினான். அக்கணமே, இருவரது பாணங்களும் காற்றை கிழித்துக் கொண்டு ஆகாயத்தில் மோதிக் கொண்டது. அப்போது, இருவரது வில்லின் நாண் ஒலியும் விண்ணை முட்டியது. அதனால், கங்கைக் கரையின் வனங்களில் இருக்கும் பிராணிகள் எல்லாம், பிரளயம் தான் வந்து விட்டதோ! என நினைத்து கதறிய படி ஓடவும் தொடங்கின. அப்போது அந்தப் பெரும் ஓசையைக் கேட்ட கங்கை அங்கே தோன்றினாள். 

"தயை கூர்ந்து  இருவரும் யுத்தத்தை நிறுத்துங்கள்" என்றாள்.

- தொடரும்

Monday, July 6, 2020

மகாபாரதம் பகுதி 7

சந்தனுக்கு வந்த சங்கடம்


கங்கையின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனு வியப்பும், அதிர்ச்சியும் ஒருங்கே சேரப் பெற்றான். அந்த உணர்வுடனே அவன் கங்கைப் பார்த்து, "நீ கங்கா தேவியா? தேவர்களின் வேண்டுகோளா? ஒன்றும் எனக்குப் புரிய வில்லையே" என்றான். அக்கணம் கங்கை இன்றும் விரிவாக சந்தனுவிடம் விளக்கத்தை அளிக்கத் தொடங்கினான்,  

"அரசே! முன்னொரு காலத்தில் பிரமன், இந்திரனுக்கு உதவுவதற்காக எட்டு வசுக்களைப் படைத்தார். அவர்கள் எட்டு பேரும் ஒரு முறை, வான் வழியாகச் சென்று கொண்டு இருக்கும் பொழுது வஷிஸ்டரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கே கேட்டதை எல்லாம் தரும் நந்தினிப் பசுவைக் கண்டார்கள். அந்த நந்தினி வேறு யாரும் அல்ல, அவள் காமதேனுவின் மகள் ஆவாள். 

வசுக்களின் தலைவனான தியூ நந்தினியின் தெய்வத் தன்மையால் கவரப்பட்டு, அதனை அபகரிக்க நினைத்தான். அதன் படியே தன்னுடன் வந்த தனது   சகாக்களிடம்  'துறவிக்கு எதற்கு இந்தப் பசு? நாம் இதனை அபகரித்துச் செல்வோம். இது நம்மைப் போன்ற தேவர்களிடம் தான் இருக்க வேண்டும். அதுவே முறை!' என்றான். அது கேட்டு, அவனுடன் இருந்த மற்றவர்களும், தங்கள் தலைவனானான தியூ வின் எண்ணத்தை ஆமோதித்தார்கள். அந்த திட்டத்தை உடனே செயல் படுத்தி மீண்டும் நந்தினியை தேவலோகத்துக்கு இழுத்து வந்தார்கள்.

ஆசிரமம் திரும்பிய வசிஷ்ட மாமுனிவர் தனது ஞானக் கண் கொண்டு நடந்ததை அறிந்தார். அக்கணமே தனது நந்தினிப் பசுவை திருடிய வசுக்களை சபிக்கத் தொடங்கினார். அப்போது வசுக்கள் இருக்கும் திசை நோக்கி அவர் ,"வசுக்களே! நான் உங்கள் எண்மருக்கும் சாபம் தருகிறேன், நீங்கள் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறக்கக் கடவீர்கள்!" என்றார்.

வசிஷ்டர் தங்களுக்கு சாபம் கொடுத்ததை அறிந்த அந்த எட்டு வசுக்களும் கலங்கித் தவித்தார்கள். அக்கணமே, தங்கள் தவறை உணர்ந்தவர்களாக, வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு விரைந்தார்கள். அவரைக் கண்ட மாத்திரத்தில் அவரது பாதங்களில் விழுந்தார்கள், கதறி அழுதார்கள். 

அப்போது வசிஷ்டரிடம் அவர்கள்," ஐயனே! ரிஷிகளில் சிறந்தவரே! சத்தியத்தின் ஸ்வரூபமே! அறியாமல் நாங்கள் பிழை செய்து விட்டோம். தந்தையைப் போன்றவரே, எங்களை மன்னித்து சாபத்தை நீக்கி அருளக் கூடாதா? சிறியவர்கள் தவறு செய்தால், உம்மைப் போன்ற பெரியவர்கள் அதனை பொறுத்துக் கொள்ளுதல் இயல்புதானே! அப்படி இருக்கத் தாங்கள் எங்களைப் போன்ற சிறியவர்களை சபிப்பது தகுமோ? எங்கள் மீது இரக்கம் கொள்ளுங்கள் ஐயனே!" என்று கண்கலங்க வேண்டினார்கள். கண்ணீரால் அப்பெரும் முனிவரின் பாதத்தைக் கழுவினார்கள்.

அக்கணம் வசிஷ்டரின் உள்ளம் மனம் உருகியது. அப்போது அவர்களைப் பார்த்து, 'இந்தக் குற்றத்துக்கு தியூவே பொறுப்பு. மற்றவர்கள் அவனுக்குத் துணையாக இருந்தீர்கள். அதனால் தியூ மட்டும் நீண்ட காலம் மனிதனாக வாழ்வான். அங்கே அவன் உலகம் போற்ற வாழ்வான். ஆனால், விதியின் காரணமாக தர்மத்தை அறிந்தும் கூட எப்போதும் அதர்மத்தின் நிழலில் நின்று, இறுதியில் வேதனையான மரணத்தை தழுவுவான். அவன் சாவுக்கு ஒரு திருநங்கை காரணமாக இருப்பாள். தியூவைத் தவிர மற்றவர்களுக்கோ பூவுலகில் பிறந்தவுடன் சாபம் நீங்கும்" என்றார். 

அவ்வாறு சாபம் பெற்ற எட்டு வசுக்களும் தேவர்களின் ஆணைப்படி என்னிடம் வந்தார்கள்.' பூவுலகில் நானே அவர்களுக்குத் தாயாக இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். சாபத்தை நீக்கவே அவர்கள் பிறந்தவுடன் ஆற்றில் வீசிக் கொன்றேன். 

ஆனால், இப்போதோ வஷிஸ்டரின் சாபம் நிறைவேறும் படியாக, முன்ஜென்மத்தில் வசுக்களின் தலைவனாக இருந்து, இப்போது எனது பிள்ளையாகப் பிறந்து இருக்கும் இக் குழந்தையை தாங்கள் காப்பாற்றி விட்டீர்கள். எனினும், இப்போது இந்தக் குழந்தையை நான் எடுத்துச் செல்கிறேன். 

சந்தனுவை விட்டு சென்ற கங்கை
நானே, சிறந்த குருவைக் கொண்டு இவனக்கு கல்வியை ஊட்டுவேன். அத்துடன், தகுந்த வயதில் நான் இவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். ஆனால், நான் இனி உங்களுடன் எப்பொழுதும் வாழப்போவதில்லை" என்றாள் கங்கை. பிறகு சந்தனுவின் குழந்தையுடன் கங்கை மறைந்தாள்.

- தொடரும்

Sunday, July 5, 2020

மகாபாரதம் பகுதி 6

சந்தனுவின் சங்கடம்


சந்தனு கங்கையை மணந்து கொண்டு இனிதாக வாழ்க்கையை நடத்தினான். அவன் உண்மையில் கங்கையை பற்றிய ரகசியத்தை அறியாமல், அவளை ஒரு சாமான்யப் பெண் என்றே நினைத்து அவளுடன் வாழ்ந்தான். அவளும் கணவனுக்கு ஏற்ற நல்ல மனைவியாகத் தான் நடந்து கொண்டாள். இப்படியே காலங்கள் கடந்தன, அவ்விருவரது இல்லறத்தின் பயனாக கங்கைக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

அக்குழந்தை பிறந்த மாத்திரத்தில், அஸ்தினாபுரமே விழாக் கோலம் கொண்டது. அனைத்து கோயில்களிலும் அன்ன தானங்கள் நடந்தன. சந்தனு மிகவும் மகிழ்ந்தான். அதனால், அரண்மனையே குதுகலத்துடன் காணப்பட்டது. ஆனால், உண்மையில் சந்தனுவின் அந்த மகிழ்ச்சி கண நேரம் கூட நீடிக்க வில்லை.

ஆம்! கங்கை தனக்குப் பிறந்த குழந்தையை அரண்மனையில் உள்ள தாதியர்கள் உட்பட அனைவரும் பார்க்க தூக்கிச் சென்றாள். அப்படித் தூக்கிச் சென்றவள், அந்தப் பச்சிளம் குழந்தையை கங்கா நதியில் தூக்கி வீசிக் கொன்றாள். அதனைக் கேள்விப்பட்டு சந்தனு துடித்துப் போனான். கோபத்தால் அப்போது அவனது  கண்கள் சிவந்தன. தனது மனைவியான கங்கையை கடிந்து கொள்ளத் துடித்தான். ஆனால், முன்பு திருமணத்திற்கு முன்னாள் அவளுக்குத் தான் கொடுத்த அந்த வாக்கை சற்றே நினைத்துப் பார்த்து, அந்த வாக்கிற்கு கட்டுப் பட்டு அவனக்கு அப்போது இருந்த கோபத்திலும், துக்கத்திலும் கூட அமைதி காத்தான்.

இப்படி சோகத்தில் இருந்த சந்தனுவுக்கு, சில மாதங்களில் மீண்டும் கங்கை தாய்மை அடைந்து விட்டாள் என்ற நற்செய்தி வந்து சேர்ந்தது. அதனால் முதல் குழந்தை கொல்லப்பட்ட துக்கத்தை சற்றே மறந்து ஆனந்தம் கொண்டான். சில காலங்களில் கங்கை இன்னொரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். மீண்டும் அஸ்தினாபுரம் மகிழ்ச்சியால் கலை கட்டியது. ஆனால், இந்த முறையும் கங்கை அக்குழந்தையை, கங்கை நதியிலே வீசிக் கொன்றாள். அது கேள்விப்பட்டு, மீண்டும் சந்தனு கொதித்துப் போனான். ஆனாலும், முன்பு அவளுக்கு அவன் கொடுத்த வாக்கினால் கட்டுப் பட்டு செய்வதறியாமல் அமைதியாக இருந்தான். இப்படியே கங்கை தனக்கு வரிசையாகப் பிறந்த ஏழு குழந்தைகளையும், தனது இருப்பிடமான கங்கா நதியில் வீசிக் கொன்றாள்.

கங்கையைத் தடுக்கும் சந்தனு
ஒவ்வொன்றையும் கங்கை தூக்கிச் செல்லும் பொழுதும் சந்தனு துடித்துப் போவான். ஆனால், அமைதியாக அவன் முன்பு கொடுத்த வாக்கினால் கட்டுண்டு கிடப்பான். இப்படியே சந்தனு அமைதி காத்து இருந்த நிலையில் கங்கைக்கு எட்டாவது குழந்தையும் பிறந்தது. அதையும் கங்கை கொல்லத் தீர்மானித்து தனது இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டாள். இம்முறை பொறுமை இழந்தான் சந்தனு. அவளைத் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினான். கோபத் தீ, தனது கண்களில் வெளிப்பட கங்கையை நோக்கிப், "பெற்ற குழந்தைகளை இரக்கமே இல்லாமல் கொல்கிறாயே! நீயும் ஒரு தாயா? என்ன நடந்தாலும் சரி. இனி நான் இந்தக் குழந்தையை கொல்ல விட மாட்டேன்" என்று உறுதியுடன் சொன்னான்.

சந்தனுவின் அந்த வார்த்தைகளைக் கேட்ட கங்கை விதியை நினைத்தவளாக சிரித்தாள். பிறகு சந்தனுவிடம்,"எனக்குத் தந்த வாக்குறுதியை தாங்கள்  மீறி விட்டீர்கள். என்ன செய்ய? விதியை வெல்வதற்கு யாரால் தான் முடியும்? நீங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?" என்றாள்.

பிறகு மீண்டும் கங்கை சந்தனுவிடம்," அரசே! உம்மிடம் சத்தியத்தை சொல்லும் நேரம் வந்து விட்டது. உண்மையில் நான் யார் என்ற உண்மையைச் சொல்கிறேன். கேளுங்கள், எல்லோராலும் போற்றி வணங்கப்படும் கங்கா தேவி நான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே உங்களுடன் வாழ்ந்தேன்" என்றாள் அவள்.

- தொடரும்

Saturday, July 4, 2020

மகாபாரதம் பகுதி 5

கங்கையின் நிபந்தனை


அப்போது ஒரு நாள் கங்கையும், சந்தனுவும் சந்தித்தனர். கங்கை, தன்னை யார் என்று சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டாள். அத்துடன் அவள் பிரதீபனை முன்பு சந்தித்த விவரத்தையும் சந்தனுவிடம் எடுத்துக் கூறினாள். 

கங்கையை, பார்த்த மாத்திரத்திலேயே அவளது அழகில் மயங்கினான் சந்தனு. அத்துடன் அவனாகவே வாய் மலர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கங்கையிடம் வேண்டினான். 

சந்தனுவின் விருப்பத்தை அறிந்த கங்கை," ஐயனே! நான் தங்களை திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை" என்றாள். 

அப்போது சந்தனு அவள் மீது கொண்ட அதீத மோகத்தால், "பெண்ணே! உன் நிபந்தனையை முதலில் சொல்!" என்றான் .

கங்கையின் கரம்பற்றும் சந்தனு
உடனே கங்கை சந்தனுவிடம், "ஆரிய புத்திரரே! நமக்குத் திருமணம் ஆன பிறகு, நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் தாங்கள் கேட்கக் கூடாது, அப்படித் தாங்கள் கேட்டால் உடனே நான் போய்விடுவேன். நமது திருமண வாழ்க்கையும் அத்துடனே முடிந்து விடும். இதுவே எனது நிபந்தனை" என்றாள். 

கங்கை மீது காம வயப்பட்டிருந்த சந்தனு மறுமொழி ஏதும் சொல்லாமல், ”இவள் பெரிதாக என்ன செய்து விடப் போகிறாள்?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அவளது  நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். உடனே கங்கையும் திருமணத்துக்கு சம்மதிக்க, சந்தனு அவளது கரத்தை ஒரு அற்புதமான முகூர்த்த வேளையில் பற்றினான். 

அவ்விருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் காலடி எடுத்து வைத்தனர். அதனால், அஸ்த்தினாபுரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

- தொடரும்

Friday, July 3, 2020

மகாபாரதம் பகுதி 4

கங்கையின் விருப்பம்


    சந்தனுவின் தந்தையான பிரதீபன் துறவு மேற்கொண்டு ஒரு நாள் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டு இருந்தான். அக்கணம், கங்கை பெண் உருவம் கொண்டு அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள். அதனால், திடுக்கிட்ட பிரதிபன் கண்களைத் திறந்தான். அப்போது ஒரு பெண் தனது வலது தொடையில் அமர்ந்து இருப்பதைக் கண்டான். உடனே அவளைப் பற்றி விசாரித்தான். அப்போது அந்தப் பெண் தன்னை "கங்கை” என்று அறிமுகம் செய்து கொண்டாள். 

சந்தனுவும் கங்கையும்
ஆம்! முன்பு பிரமனின் கமண்டலத்தில் இருந்து விஷ்ணுவின் பாதத்தை அடைந்து, பின் சிவனின் ஜாடாமுடியில் பகீரதன் தவத்தால் தஞ்சம் அடைந்த அதே கங்கை தான் இப்போது பிரதீபனின் மடியில் அமர்ந்து இருந்தாள். அப்போது பிரதிபன் சிறிது நேரம் தனது மடியில் அமர்ந்து இருந்த கங்கையை அமைதியாக கூர்ந்து நோக்கினான். 

பிறகு அவளிடம், "கங்கை என்னும் பெயர் கொண்ட பெண்ணே! நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சமமாக ஆகிறாய். ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன மகளே? எதுவாகிலும் சொல் நான் நிறைவேற்றுகிறேன்" என்று கேட்டான். 

அதற்கு கங்கை," அரசர்களுள் சிறந்தவரே! நான் உங்கள் மகன் சந்தனுவை மணம் முடிக்க விரும்புகிறேன்" என்றாள் . 

கங்கையின் விருப்பத்தைக் கேட்ட பிரதீபன் முன்பு தான் அவளுக்குக் கொடுத்த வாக்கின் படி, ”அப்படியே நடக்கும்!” என்று கூறி ஆசி வழங்கினான். கங்கையும், அக்கணம் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றாள்.

இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு தந்தையைக் காண வனத்திற்கு வந்தான் சந்தனு. அப்போது தன்னை நாடி வந்த சந்தனுவை கண்டு மகிழ்ந்தான் பிரதீபன். சந்தனு பிரதீபனின் கால்களில் விழுந்து வணங்கினான். பிறகு தனது தந்தையான பிரதீபனிடத்தில், ”தந்தையே! நான் ஒரு நல்ல அரசனாக வாழ்ந்து வருகிறேன். ஆனால், ஒரு நல்ல மகனாக இருக்கிறேனா! என்ற ஐயப்பாடு பல நாட்களாக எனக்கு உண்டு. அதனால், தான் அதைத் தீர்த்துக் கொள்ள நான் உங்களை இன்று  அணுகினேன். தங்களுக்கு நான் செய்ய வேண்டியது ஏதேனும் உள்ளதா? இல்லை, உங்கள் விருப்பத்தை ஏதேனும் நான் புறக்கணித்தது உண்டா? எனில் அதனை நான் நிறைவேற்றத் தயாராக உள்ளேன்” என்றான்.

அப்போது அவனுக்கு ஆசி வழங்கிய பிரதீபன் அவனிடம், ”மகனே சந்தனு! எனக்கு ஒரு விருப்பம் உண்டு அது யாதெனில், கங்கை என்ற அழகான பெண் உன்னை அணுகி திருமணம் செய்துகொள்ள விரும்புவாள், அவளது ஆசையை நீ நிறைவேற்ற வேண்டும்” என்றார். 

அக்கணமே, சந்தனுவும், தனது தந்தையின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற சித்தம் கொண்டான்.

- தொடரும்

Thursday, July 2, 2020

மகாபாரதம் பகுதி 3

சந்தனுவின் கதை


    குரு அரசனுக்கு பிரதீபனும், பிரதீபனிடம் இருந்து பிறந்த தேவாபி, பால்ஹிகர், சந்தனு என்ற மூன்று மக்களில் மூத்தவனான தேவாபி தோல் நோயின் காரணமாக ஆட்சி உரிமை மறுக்கப்பட்டு காட்டில் தவம் செய்யச் சென்றான். தன் மூத்தோனுக்கு இல்லாத உரிமை தனக்கும் வேண்டாமெனக் கூறி பால்ஹிகரும் அவர் கூடவே சென்றார். 

(பால்ஹிகர் குருக்ஷெத்ர போரில் துரியோதனனுக்காக போரிட்டார் என்பதை நாம் பின்னாளில் பார்க்கப் போகிறோம்)

அதன் காரணமாக இளையவன் சந்தனு அரசாளும் உரிமையைப் பெற்றான்.  

தேவாபி வானப்ரஸ்தம் சென்றார்
(ஒரு அரசனுக்கு வெளியில் தெரியும் படியாக எந்த விதக் குறையும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் எவ்வளவு திறமை வாய்ந்தவனாக இருந்தாலும் சிம்மாசனத்தில் அமரும் தகுதியை இழப்பான். இது மனு தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் தான் தேவாபிக்கு வர வேண்டிய அரசாட்சி அவனுக்கு ஏற்பட்ட தோல் நோயின் காரணமாக, [அவன் மூத்தவனாக இருந்தும் கூட] மறுக்கப்பட்டது. அதே வகையில் தான் பிற்காலத்தில் திருதராஷ்ட்ரனுக்கும் கண் பார்வை குறைபாடு காரணமாக ஆட்சி பெரும் உரிமை மறுக்கப்படுகிறது)

இப்படியாக அரசாட்சியைப் பெற்ற அந்தச் சந்தனு ஒரு நகரத்தை ஆளுதல் போல பெரும்பாலான பாரத தேசம் முழுவதையும் குறை இல்லாமல் கட்டி ஆண்டான். அவன் கைகளில் வில் ஏந்தினால் பகை அரசர்கள் அவனது காலில் வந்து விழுவார்கள். யுத்தகளத்தில் என்றுமே வெற்றியை மட்டுமே பெற்றவன் அவன். 


சந்தனு
அத்தனை சிறந்த ஒரு வீரனாகத் திகழ்ந்தான். அவன் வீரனாக மட்டும் அல்ல, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நல்ல அரசனாகவும் திகழ்ந்தான். கவிஞர்கள் போற்றிப் பாடும் முழு மதியிடமும் குறை உண்டு. ஆனால், சந்தனுவிடம் எக்குறையும் இல்லை. அவன் நேர்மையாகவும், சத்திய வழியிலும் எப்போதும் நடந்தான். அதனால், அனைவராலும் அவன் புகழப் பெற்றான். 

உலகம் முழுவதற்கும் சூரியன் ஒருவன் தான். அதே போல் பாரத தேசத்தில் அப்போது சந்தனு ஒருவன் தான் பேரரசனாகத் திகழ்ந்தான். எண்ணற்ற தேசங்களை எல்லாம் வெற்றி கொண்டான். வாழ்க்கையின் பெரும் பகுதியை யுத்த களத்திலேயே கழித்தவன் அவன். எனினும் தனது நாட்டு மக்களை குறை இல்லாமல் பார்த்துக் கொண்ட அவனுக்கு உள்ளே ஒரு பெரும் குறை இருந்தது. 

அது யாதெனில், வாழ்வின் பெரும் பகுதியை சந்தனு யுத்த களத்திலேயே கழித்ததால், அவன் திருமண வயதைக் கடந்தும், திருமணம் செய்யாமல் இருந்தான். அதனால், வாரிசு இன்றித் தவித்தான். "தான் கட்டிக் காத்த பாரத தேசத்தை இனி யார் தனக்குப் பின் ஆளப்போகிறான்?" என்ற கேள்வி அவன் முன் நின்று அவனை தினமும் துளைத்தது. 

அதனால், நிம்மதி இழந்தான். அவன், அந்நிலையிலேயே வருத்தத்துடன் இருக்க நாட்கள் மெல்ல நகர்ந்தன.

- தொடரும்

Wednesday, July 1, 2020

மகாபாரதம் பகுதி 2

சந்திர வம்சம்

        ஸ்ரீ இராமரது சூரிய குலம் திரேதா யுகத்துடன் முடிந்ததாகக் கொண்டால், துவாபர யுகத்தை நெருங்கும் காலம், இந்த ஒட்டு மொத்த பாரத தேசத்தையும் சந்திர வம்சத்தினர் ஆண்டார்கள். இவர்களைத் தான் பிற்காலத்தில் பரத வம்சம் என்றும் குரு வம்சம் என்றும் அழைத்தனர். 

இந்தச் சந்திர வம்சத்தின் பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் சுருக்கமான வரலாறு பின்வருமாறு:

"முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வனின் பெயர் யயாதி. மூத்தவனாகப் பிறந்ததால் அவனே ஆட்சி உரிமையை பெற்றான். மேற்கொண்டு இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறைகள் கீழ்க்கண்டவாறு முறையே விவரிக்கப்படுகின்றன :

யயாதி – புரூருவன் – ஜனமேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன் ஆவார்கள்.

இதில் துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். 

இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் "கெளரவர்” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.



- தொடரும்