Sunday, February 12, 2017

சிறு வயதில் என்னுடைய ஆசிரியர் மழையைப் பற்றிச் சொல்லி தரும்போது, எனக்கு மழையில் நனைகின்ற பரவசம் வந்ததுண்டு. அதே போல "Winter" பற்றி ரைம்ஸ் உண்டு என்று நினைக்கிறேன், இன்றும் சிறு வயது பள்ளி நினைவுகளை "ரெஃப்ரெஷ்" செய்து பார்க்கும் போது அந்த "ரைம்ஸ்" அருகில் போட்டிருக்கும் படம் தான் ஞாபகம் வரும். ஒரு சிறுவன் குளத்தில் நீச்சலடிப்பது போன்ற படம். அந்த படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மழை வந்தால் இப்படித் தான் நாமும் நீச்சலடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

மழைக் காலங்களில் தூரல் போடும் போது நனைவது ஒரு வேடிக்கையான அனுபவம். மாடிக்கு சென்று தூரலில் நனைய ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அம்மா பார்த்துவிட்டால் அவ்வளவு தான் அடி பின்னிவிடுவார். அப்படி ஒரு நாள் அம்மா அடியில் இருந்து தப்பிக்க ஓடி வந்த போது படியில் இருந்த பாசி தன்னுடைய ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு என்னை வழுக்கிவிட்டது, தாடை கிழிந்து பத்து தையல் போட்டது தான் மிச்சம். அதன் பின்பு மழையில் நனையும் ஆசையை விட்டுவிட்டேன்.

Thursday, February 9, 2017

விவேகானந்தரின் கலங்காத உள்ளம்!!

மே 31, 1893 பம்பாய் துறைமுகத்தில் இருந்து பல நாடுகள் வழியாக அமெரிக்காவின் வான்கூவர் துறைமுகம் சென்றடைய வேண்டிய அந்தக் கப்பல் தயாராக நின்றது.

அதில் பயணிப்பவர்களில் ஒருவராக முப்பதே வயதான காவி உடை அணிந்திருந்த அந்தத் துறவியும் இருந்தார்.

இது அவரின் முதல் கப்பல் பயணம். முதல் வெளிநாட்டுப் பயணமும் கூட. அப்போது அவரிடம் இருந்தவை அவரது காவி உடை, கப்பல் பயணச்சீட்டு, ரொக்கமாக ரூ.4000/-, சிகாகோ நகரில் அவர் சென்றடைய வேண்டிய இடத்தின் முகவரித் துண்டுச் சீட்டு. அவர் தான் சுவாமி விவேகானந்தர்.

46 நாட்கள் பயணம். வழியில் இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, ஜப்பான் துறைமுகங்களில் நின்று சென்றது. அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அவரும் சுற்றிப் பார்த்தார்.

விளைவு- கப்பலில் உணவு போன்ற செலவுகள், நாடுகளைச் சுற்றிப் பார்த்தில் செலவுகள் என கையிருப்பு ரொக்கப் பணம் குறைந்தது. கப்பல் வாங்கூவர் துறைமுகத்தை அடைந்த போது அவரிடம் மிகச் சொற்ப்பமான பணமே இருந்தது.

வான்கூவரில் இருந்து சிகாகோ செல்ல ரயிலில் பயணச் சீட்டு, ரயிலில் ஆறு நாள் பயணம், தற்போதைய செலவுகள் - எல்லாம் சேர்த்து அவர் சிகாகோ ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது ரொக்கப் பணம் சுத்தமாக "இல்லை" என்ற நிலை.

ரயில் பயணத்தின் போது கேட் சேன்பன் (Professor KATE SANBORN) என்ற செல்வந்தரான பெண்மனி, அந்தத் துறவியின் நடை, உடை, பாவணை, கண்ணியமான நடத்தை ஆகியவற்றால் கவரப்பட்டார். அவருக்குத் தேவையான சில சிறுசிறு உதவிகளைச் செய்தார்.

சிகாகோ அடைந்த போது அந்தப் பெண்மணி "தான் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர்" என்று தனது பாஸ்டன் நகர் முகவரியை அவரிடம் கொடுத்து, சிகாகோவில் இருந்து திரும்பும் போது தனது பாஸ்டன் இல்லத்துக்கு வந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அதுவரை பெருத்தக் கஷ்டங்கள் ஏதுமின்றி சென்று கொண்டிருந்த அந்தத் துறவியின் பயணம், திடீரென சில அதிர்ச்சிகளுக்கு உள்ளானது.

  • சிகாகோவை அடைந்த போது அவரது கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது.
  • சிகாகோவில் இவர் சென்றடைய வேண்டிய இடத்தின் முகவரிச் சீட்டு தொலைந்து போய் விட்டது.
  • இக்காலத்தைப் போல் "கைப்பேசி போன்ற" வசதிகள் இல்லாததால் பாரதத்தில் உள்ளவர்களுடன் அவரால் தொடர்பு கொள்ள இயலாத நிலை.
  • அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத நிலை.
  • சிகாகோ பணக்காரர்களின் நகரம். அங்கு பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அது தெரியாமல் சுவாமி விவேகானந்தர் உணவுக்கு பிச்சை எடுக்க முனைந்த போது பலரால் துரத்தப் பட்ட நிலை.
  • மேலும் அவர் கலந்து கொள்ள வந்த அந்த சர்வதேச சமய மாநாடு, ஏற்பாடுகள் முடியாதக் காரணத்தால் ஒரு மாதம் தாமதம் செய்யப்பட்டது. ஜூலை மாதம் மூன்றாம் வாரம் நடக்க வேண்டியது செப்டம்பர் மாதம் 11, 1893க்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • எனவே சுமார் 1.5 மாதத்துக்கும் மேலாக சிகாகோவில் தங்குவது இயலாதது என்பதும் ஒரு பிரச்சினை.
  • மாநாட்டின் தேதிதான் ஒத்திவைக்கப்பட்டிருந்ததே ஒழிய, மாநாட்டின் பேச்சாளர்கள் முன் பதிவு செய்து கொள்ளும் தேதி மாற்றப்படவில்லை.. முன்பதிவு தேதி முடிந்துவிட்டது.
  • சிகாகோ சர்வசமய மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ள, தான் சார்ந்த இயக்கத்தில் இருந்து சிபாரிசுக் கடிதம்/அத்தாட்சிக் கடிதம் தரவேண்டும். அதைப் போன்ற ஒன்றும் சுவாமி விவேகானந்தரிடம் இல்லை.
  • மேற்கூறிய இரு காரணங்களால் சுவாமி விவேகானந்தர் மாநாட்டில் பார்வையாளராக மட்டுமே கலந்துக் கொள்ள முடியும், பேச்சாளராக அல்ல.


இக்காரணங்களால் சுவாமி விவேகானந்தர் உடனடியாக பாரதம் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அவர் ஒரு திடமான மன சங்கல்பம் எடுத்துக் கொண்டார்... "சிகாகோ சர்வதேச சமய மாநாட்டில் பேசாமல் நாடு திரும்புவதில்லை".. முடியும் என்று நம்பினார் உளப்பூர்வமாக.  "நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு"

அதனால் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்து பாஸ்டன் நகருக்கு வந்தார். முன்னமே ரயிலில் அறிமுகமான திருமதி சேன்பன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்.

திருமதி சேன்பன்  மூலம் ஹார்வார்டு பல்கலைக் கழக பேராசிரியரும், "அமெரிக்காவின் கலைக் களஞ்சியம்" எனப் புகழப்பட்டவருமான பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் (John Henry Wright) என்பவரைச் சந்தித்தார்.

அமெரிக்காவில் மிகச் செல்வாக்கு உடையவரான பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் சுவாமி விவேகானந்தரின் சொல்லாற்றல்,  பணிவு, அறிவுக் கூர்மையால் கவரப்பட்டு, விவேகானந்தருக்கு உதவ முன்வந்தார்.

சிகாகோ சர்வசமய மாநாட்டின் தலைவருக்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகப் படுத்தி, ஒரு சிபாரிசுக் கடிதத்தை பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் கொடுத்தார்.

"அமெரிக்காவின் மெத்தப் படித்த அனைத்து பேராசிரியர்களையும் ஒன்று சேர்த்தால் கூட ஈடாக முடியாத அறிவாளியை அனுப்புகிறேன். இவரிடம் (சுவாமி விவேகானந்தரிடம்) மாநாட்டில் பேச்சாளராக அறிமுகக் கடிதம்/அத்தாட்சிக் கடிதம் கேட்பது - 'சூரியனிடம் பூமிக்கு ஒளிதர அத்தாட்சிப் பத்திரம் கேட்பது போலாகும்'.."  என அந்தக் கடிதத்தில் பேராசிரியர் ஜே.ஹெச் ரைட் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்துடன் மீண்டும் சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்தர், சிகாகோ வீதியில் திருமதி ஜார்ஜ் W ஹாலே என்ற பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜீயின் கம்பீரமான தோற்றம், கணிவான பேச்சு, கண்ணியமான நடத்தையால் கவரப்பட்ட திருமது ஜார்ஜ் W ஹாலே சுவாமி விவேகானந்தரை சர்வசமய மாநாட்டின் தலைவருக்கு  அறிமுகப்படுத்தினார்.

பேராசிரியர் ஜே.ஹெச் ரைட் ன் சிபாரிசுக் கடிதம் சுவாமி விவேகானந்தரை சர்வ சமய மாநாட்டின் பேச்சாளராக ஆக்கியது.

1893 செப்டம்பர் 11 - திங்கள் கிழமை - காலை மாநாடு துவங்கியது. மாநாட்டின் கடைசிப் பேச்சாளராக சுவாமி விவேகானந்தர் பேசினார்.

தமது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரையும், கலைமகள் சரஸ்வதி தேவியையும் வணங்கி சுவாமி விவேனானந்தர் பேச துவங்கினார். அவரது இதயத்தில் இருந்து ஆத்மார்த்தமாக வார்த்தைகள் வெளிவந்தன.

"அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!!..."

இந்த இதய பூர்வ வார்த்தைகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விளைவு, அனைவரும் எழுந்து நின்று 60 வினாடிகள் கரகோஷம் எழுப்பினர்.

சுவாமி விவேகானந்தர் பேசியது வெறும் 3.5 நிமிடங்களே. ஆனால் பற்பல ஆண்டுகளாக அமெரிக்கர்கள் மனதில் நமது பாரத நாட்டைப் பற்றி நிறைந்திருந்த பல தவறான கருத்துகள் தவிடு பொடியாகின. பாரதத்துக்கு ஒரு புது 'முகவரி' கிடைத்தது.

பாரதம் 'மிக உயர்வான நாடு' என்ற புது முகவரி கிடைக்க சுவாமிஜி ஏற்றுக் கொண்ட பணியில் தான் எத்துனைத் தடைகள், இடர்பாடுகள்?

என்னால் முடியும் என்று நம்பினார் சுவாமி விவேகானந்தர், திட சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இந்தத் தன்னம்பிக்கையும், திட சித்தமுமே தான் அவரது வெற்றியின் ரகசியம்.

நன்றி - திரு ல நடராஜன் அவர்களுக்கு. 
ல நடராஜன் அவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியாற்றி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தேசப் பற்று போன்ற எண்ணங்களை விதைக்கும் பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.