Tuesday, February 26, 2013

எனக்கு பிடித்த பாடல் 1 :

பல பாடல்கள் நாம் கேட்கிறோம் ஆனால் சில பாடல்கள் மட்டும் நம் மனதோடு பசுமையாக ஒட்டிக்கொள்கின்றன. அதை போன்ற பாடல்களை இங்கு தொகுக்க போகிறேன்.

சில பாடல்கள் கேட்ட உடன் பிடித்து விடும் ஆனால் சில பாடல்கள் காட்சியினூடே பார்க்கும் போது பிடிக்கும், சில 'சிச்சுவேஷன்'களை பொருத்து பிடிக்கும். சில பாடல்கள் ஓரிரண்டு முறை கேட்ட பின்பு தான் பிடிக்கும், சிலவற்றின் கவித்துவமான வரிகள், சிலவற்றில் பின்னணி இசை, சிலவற்றில் பாடுபவரின் குரலினிமை, காட்சி அமைப்பு, நடிகர்களின் நடிப்புத் திறமை இப்படி பல factorகள் நமக்கு பாடல்களை பிடிக்க வைக்கின்றன.

இங்கு நாம் பார்க்க போகும் பாடல் அப்படி ஒன்று தான், முதலில் கேட்ட போது பெரிதாக கவரவில்லை ஆனால் படத்தினோடு பார்க்கும் போது அந்த சூழ்நிலையோடு பார்த்த போது இந்த பாடல் பிடித்துப் போனது.

படம்          : நீர்ப்பறவை
கவி            : வைரமுத்து
இசை        : ரஹ்னந்தன்
பாடியவர் : சின்மயி

பாடல் : 


பற பற பற பறவை ஒன்று 

கர கர கர கரையில் நின்று 
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே 

கட கட கட கடலுக்குள்ளே 
பட பட பட இதயம் தேடி 
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே 

என் தேவன் போன திசையிலே 
ஜீவன் சேர்த்து அனுப்பினேன் 
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா?
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா? ...பற பற...


தண்ணீரில் வலையும் நிற்கும்

தண்ணீரா வலையில் நிற்கும்
என் தேவன் எப்போதும் திரிகிறான் 

காற்றுக்கு தமிழும் தெரியும் 
கண்ணாளன் திசையும் தெரியும் 
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான் 


உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே 
ஈர வேர்வைகள் தீருமுன் 
எனது உயிர் பசை காய்வதா?
வானும் மண்ணும் கூடும் போது 
நானும் நீயும் கூடாமால் வாழ்வது கொடுமை ...பற பற...

ஊரெங்கும் மழையும் இல்லை 
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

கண்ணாளன் நிலைமை என்ன
கடலோடு பார்த்து சொல்ல
கோக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே 

நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான் 
என்னை மீண்டும் தீண்டும் போது 
காதல் தேவன் இரு முதல் இரவுகள் தருவான் ...பற பற...


இந்த பாடலில் ஒரு காதலி காதலனின் பிரிவால் மனதில் உள்ள துயரத்தை பாடுவதாக உள்ளது. கவிஞர் வைரமுத்து இது போன்ற பாடல்கள்  எழுதுவதில் வல்லவர், கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் கடலை வைத்தே இந்த பாடலும் எழுத பட்டிருக்கிறது.

காதலன் கடலுக்கு சென்று திரும்பவில்லை, அவவை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த சூழ்நிலையில் காதலி தன் மனதில் உள்ள வேதனையை அவன் சென்ற கடலிடமே கண்ணீரால் கூறுகிறாள். இதில் உவமைகளுக்கு பஞ்சமில்லை, எங்கும் மழை, புயல் இல்லாமல் அவளுக்கு மட்டும் நெஞ்சில் இடி இடிக்கிறது - அவளது மன போராட்டத்தை இதை விட என்ன சொல்ல முடியும்.

அவன் நிலைமை அறிய கொக்குகளையும் நாரைகளையும்  தேடி கண்டு வர சொல்கிறாள், அவன் கிடைத்து விட்டால், அலையில் சேர்ந்த கண்ணீர் அவனிடம் சென்று அவள் பெற்ற துன்பம் சொல்லும் என்று கதறுகிறாள்.

அவன் கிடைத்து விட்டால் காதல் தேவன் இரு "முதல் இரவுகள்" தருவான் என்கிறார் கவிஞர். ஒரு செயல் ஒரு முறை நிகழ்ந்து விட்ட பின் மறுபடியும் நிகழ்ந்தால் அது முதல் முறை ஆகாது, இது ஒரு முரண். காணாமல் போன காதலன் கிடைத்து விட்டால் அவளுக்கு மகிழ்ச்சியில் "எல்லாம்" மறக்கும் அதனால் அதை இரு "முதல் இரவுகள்" என்று அவள் நினைக்கலாம்.

அவன் திரும்பி வரபோவது இல்லை என்று தெரிந்ததால் அப்படி நடக்க சாத்தியமில்லாத ஒன்றை கூறுகிறார் என்றும் நாம் கொள்ளலாம். கவிதைக்கு பொய் தானே அழகு.

இந்த பாடல் என் மனதை கவர காரணம்,

1. சூழ்நிலை
2. பாடல் வரிகள்
3. இசை
4. நடிப்பு

முதலில் சொன்னது போல கேட்டவுடன் இந்த பாடல் அழுத்தமாக பதியவில்லை. ஆனால் படத்தில் பார்த்த போது மனதை மிகவும் சஞ்சல படுத்தியது. காரணம் இந்த கதாநாயகி போல் நம் மீனவ சகோதரிகள் பலர் இலங்கை கடற்படையின் பயங்கரவாதத்தால் தங்கள் கணவனை இழந்து வேதனை படுவது சுட்டது. இது வெறும் கற்பனை அல்ல, தினமும் நிகழும் ஒரு கையாலாகாத அரசின் தவறு. 

கொத்துமல்லி :
இந்த பாடலை ஸ்ரேயாகோஷலும் பாடியிருக்கிறார், ஆனால் எனக்கு சின்மயி பாடியது தான் எதார்த்தமாக வலியுணர்ந்து பாடியதாக தோன்றியது.

Saturday, February 2, 2013

நீர்ப்பறவை விமர்சனம்

நீர்ப்பறவை திரை படத்தை சமீபத்தில் தான் காண நேர்ந்தது. மிக சிறப்பான ஒரு காதல் கதை என்று சொல்லலாம். மீனவ கிராமத்தின் சூழலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்ட படம்.

மிகவும் இயல்பான சினிமாத்தனம் இல்லாமல் கதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ஒரு சமூக பிரச்சினையை எடுத்து கொண்டு அதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்த விதம் அருமை, ஆனால் காதல் சொல்லப்பட்ட அளவுக்கு மீனவ கொலை பற்றிய விஷயங்கள் அழுத்தம்  குறைவாக இருப்பது நெருடல்.

என்னளவில் இதை ஒரு சிறந்த காதல் படமாக கொள்ளவே மனம் ஒப்புகிறது. அருளப்ப சாமி (விஷ்ணு)  மற்றும் எஸ்தர் (சுனைனா) காதல் காட்சிகள் அருமை. விஷ்ணு நடிப்பில் முன்னேறியுள்ளார், அவரின் உழைப்பு இந்த படத்தில் நன்றாக தெரிகிறது. சுனைனா தமிழுக்கு நல்ல கதாநாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசம்.

இவ்விருவரை தவிர்த்து நம் மனதில் நிற்க கூடியவர்கள், விஷ்ணுவின் அப்பாவாக வரும் 'பூ' ராம், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் இருவரின் நடிப்பும் எதார்த்தம். மகன் மேல் பாசம் வைக்கும் பெற்றோராக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

மகன் தவறு செய்யும் போது திருத்த முயல்வதும், திருந்தி வரும் போது அவன் உழைக்க படகு செய்ய சொல்லி உதவும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் ராம். சரண்யா வழக்கம் போல ஒரு நல்ல அம்மாவாக நடித்திருக்கிறார்.

குடிகார நண்பர்களாக ப்ளாக் பாண்டி மற்றும் தமிழ் வாத்தியாராக வரும் தம்பி ராமையா கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ஒன்லைனர்களில் சிரிப்பு சிறப்பாகவே உள்ளது.

வசனங்களில் "ஜே.மோ" நறுக்கு தெறிக்கிறது, ஒரு இடத்தில் நமது பத்திரிக்கைகள் தமிழ் மீனவர் பலி என்று எழுதும் தவறான போக்கை கண்டித்து ஒரு வசனம் வருகிறது, இந்திய மீனவர் பலி என்று தான் கூறவேண்டும். தமிழ் மீனவர் பலி என்பது மாநில பிரச்சினையாக பார்க்கப்படும், இது மாநில பிரச்சினை அல்ல நாட்டின் பிரச்சினை என்பது தான் சரியான கண்ணோட்டம் ஆகும்.

பாடல்கள், இசை திரை கதையோடு ஒத்து நெருடாமல் வருகிறது. பல திரைப்படங்கள் இசை கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்கும், அப்படியல்லாமல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. இளையராஜாவின் பல பாடல்கள் சிறப்பாக இருந்தும் கதையோடு ஒன்றாமல் இருந்ததால் அவரின் ஆற்றல் சரியாக வெளிப்படவில்லை என்பது என்னுடைய மனக்குறை.

கடலிலேயே பிறந்து, வாழ்ந்து, இறந்து போகும் மீனவர்களின் போராட்டம் தான இந்த நீர்ப்பறவை.

நீர்ப்பறவை - இன்னும் இறகை விரித்திருக்கலாம் (3.5/5)