Tuesday, June 30, 2020

மகாபாரதம் பகுதி 1

கடவுள் வாழ்த்து


திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கர தாமரை நாயகன்
அகடச் சக்கர விண்மணி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

        பாரதம் போற்றும் இரு இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம், இன்னொன்று ராமாயணம் இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், உண்மையில் சிலர் இந்த இதிகாசங்களைக் கற்பனை கதை என்று நினைக்கின்றனர். ஆனால், அது தான் இல்லை. "இதி" என்றால் "இப்படி" என்று பொருள். "காசம்" என்றால் "நடந்தது" என்று பொருள். அதாவது "இதிகாசம்" என்றால் "இப்படி நடந்தது" என்று தான் பொருள். 

மொத்தத்தில் இந்த இதிகாசமும் ஒரு வரலாறு தான். முன்பு நடந்த ஒரு சம்பவம்  தானே வரலாறாக முடியும்? அப்போது இந்த மகாபாரதக் கதையும் ஒரு வரலாறு தானே!

பொதுவாக "இதிகாசங்களும்", "புராணங்களும்" தான் இந்து மதத்தின் முதுகெலும்பாக உள்ளது. இந்த இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது. உண்மையில் "புராணம்" என்பது, ஒரு சம்பவம் நடந்து முடிந்து பல யுகங்கள் கழித்து முனிவர்கள் தம் ஞானக் கண் கொண்டு அதனை ஓலைச்சுவடியில்  எழுதுவது ஆகும். 

ஆனால், இதிகாசம் என்பது அப்படி அல்ல, அந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் பொழுதே எழுதப்படுவது. உதாரணமாக இராமயணத்தை (இராம - இராமன் ; அயனம் - பாதை. இராமனின் பாதை) வால்மீகி மகரிஷி, ஸ்ரீ இராமர் வாழ்ந்த காலத்திலேயே எழுதினார். 

அதுபோல, மகாபாரதத்தை  வேதவியாசர், பாண்டவர்களின் மூத்த சகோதரனான யுதிஷ்டிரன் வாழ்ந்த காலத்திலேயே எழுதினார். ஆக, இதில் நீங்கள் காணப்போகும் அனைத்தும் இந்த பாரத கண்டத்தில் முன்னொரு காலத்தில் நடந்தவைகளே!

ஆக, இராமாயணமும், மகாபாரதமும் இரு வேறு யுகத்தில் நடந்த இதிகாச சம்பவங்கள் ஆகும். இதில் இராமாயணம் என்பது திரேதாயுகத்தில் நடந்தது, மகாபாரதம் என்பது துவாபரயுகத்தில் நடந்தது. இராமாயண காலத்தில் பாரதத்தை சூரிய வம்சம் ஆண்டது. 

மகாபாரத காலத்தில் இதே பாரதத்தை சந்திர வம்சம் ஆண்டது. அவ்விரு காலங்களிலும், உலகமே பாரதமாக இருந்தது என்பது அறிஞர்களின் கருத்து. இதற்கு, உதாரணமாக இன்று இருக்கும் நாடுகள் எல்லாம், சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னாள் கண்டுபிடிக்கப்பட்டவையே. இதுவும் கூட அனைவருக்கும் தெரிந்ததே!

சமஸ்கிருத மகாபாரதம், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்டது. இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். 

அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை இவர் அற்புதமாக எழுதி முடித்தார்.

குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியமான இந்த மகாபாரதத்தைப் படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை, படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது மிகக் கடினம். 

ஆனால், இந்த மகாபாரதமோ பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த ஐந்தாவது வேதமான மகாபாரதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம் 

அதிலும், உலகில் இருக்கும் மற்ற இதிகாசங்களுடன் ஒப்பிடும் போது இந்த மகாபாரதத்தைப் பொறுத்தவரையில் கிளைக் கதைகள் மிக அதிகம். காரணம், இது ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட பெரிய நூலாகும். இருந்தாலும், நமது தேசமான இந்தப் பாரதத்தில் எத்தனை மொழிகள் இருக்கிறதோ, அத்தனை மொழிகளிலும் மகாபாரதம் எழுதப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இன்றும் கூட தொலைகாட்சிகளில் உள்ள ஏதேனும் ஒரு அலைவரிசையில் இந்த மகாபாரதம் ஒளிபரப்பாகி தான் வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் காலங்கள் அல்ல யுகங்கள் கடந்தும் மகாபாரதம் இன்றளவும் நிலைத்து இருக்கிறது.

இதற்கு, என்ன காரணம் என்றால், மகாபாரதத்தின் உண்மையான கதை அமைப்பே.

 "அப்படி என்ன இந்தக் கதையில் உள்ளது?” என்று கேட்கின்றீர்களா? 

எனில், வாருங்களேன் நீங்களே இக்கதையை படித்து அறியுங்கள்.

- தொடரும்

Monday, June 29, 2020

மகாபாரதம் - அறிமுகம்

மகாபாரதம் அறிமுகம்


அன்பு நண்பர்களே,
        
    வேதங்கள் அறிவின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. ஆனால் வேதங்கள் அதன் அறிவார்ந்த விஷயங்கள் சாதாரண மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை. அதிலும் சில ஆழமான விஷயங்கள் பெரும் அறிஞர்களுக்கே விளங்குவது கடினம். மேலும், சில விஷயங்கள் நாம் அனுபவத்தால் மட்டுமே உணரத் தக்கவை ஆகும். இந்த காரணங்களால் வேத அறிவானது சாதாரண மக்களிடம் செல்லாமல் இருந்தது.

வியாசரும் விநாயகரும்
அந்த குறையைப் போக்க அந்த வேதங்களை தொகுத்த க்ருஷ்ண த்வைபாயண வியாசர் எளிய மக்களுக்கும் புரிய வைக்க ஐந்தாம் வேதமாக மகாபாரதத்தை அருளினார். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது இந்த மகாபாரதம் ஆகும். இந்த இதிகாசத்திற்கு வியாசர் இட்ட பெயர் "ஜய" ஆகும். ஜய என்றால் வெற்றி என்று பொருள். 

இதிகாசம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இப்படி நடந்தது என்று பொருள், அதாவது நடந்தவற்றைச் சொல்வது தான் இதிகாசம். மகாபாரதம், ராமாயணம் பாரத இதிகாசங்கள் ஆகும். 

உலகின் மிகப்பெரும் காவியமான இது பல்லாயிரம் மாந்தர்களையும், பல்வேறு கால நிலைகள், இடங்கள், நட்சத்திர நிலைகள் என இந்த உலகம் முழுவதும் இணைத்து எழுதப்பட்டதாகும்.

சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் ஆசை, பேராசை அதனால் வரும் சங்கடங்கள், நல்லவை-தீயவை என்று எல்லாவற்றையும் பேசும் ஒரு காவியமாகும். இதில் வரும் மாந்தர்களின் நிலையை எந்த மனிதரும் வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் தன்னை நிறுத்திப் பார்க்க முடியும்.

உங்களை இந்த மகாபாரத யாத்திரைக்கு அழைத்துச் செல்ல விழைகிறேன். தினசரி ஒரு ஐந்து நிமிடம், இந்த மகாபாரத வரலாறை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

நாளை முதல் தினசரி ஒரு பகுதி வெளிவரும்!!