தேவவிரதன் பீஷ்மர் ஆகுதல்
சந்தனுவின் வாழ்கையில் தேவவிரதன் வந்த நாள் முதலாக எல்லாம் நல்லதாகவே நடந்து கொண்டு இருந்தது. அதனால், அவன் எப்பொழுதும் முகம் மலரக் காணப்பட்டான். அப்படி இருக்கும் பொழுது ஒரு நாள், அவன் அரச காரியமாக யமுனையின் ஆற்றங்கரைக்கு வந்தான்.
அங்கே படகோட்டிக் கொண்டு இருந்த சத்தியவதி என்ற பெண்ணைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் அவளது அழகில் மயங்கினான். அப்போது அவளது படகில் ஏறிச் சென்றவாறு, அவளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டான்.
சத்தியவதியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை அவனை அன்று இரவு தூங்கவிடாமல் ஆட்டிப் படைத்தது. அதனால் வந்த ஏக்கத்தில் அறுசுவை உணவும் அவனுக்கு கசந்தது, சந்திரனின் கிரணங்களும் அவனை சுட்டது. அதனால், அவன் உடல் வெம்மை அடைந்தது. அக்கணம் அவன் படுத்திருந்த மஞ்சத்தில் இருந்த மலர்களும் கூட அந்த வெம்மையால் தீய்ந்து போனது.
அடுத்த சூரியோதயம் எப்பொழுது வரும் என்று ஏங்கினான். சந்திர குலத்தில் பிறந்த அந்த அரசனின் நிலை கண்டு, சூரியன் பரிதாபம் கொள்ள, மெல்ல வானில் தோன்றத் தொடங்கினான். ஆம்! மெல்ல பொழுது விடிந்தது.
பொழுது விடிந்த மாத்திரத்தில் சந்தனு வெகுவாக எழுந்தான். விறுவிறுப்பாக தனது காலைக் கடமைகளை முடித்தான். உடனே, தனது தேர் சாரதியை அழைத்து, இரதத்தை யமுனையின் அக்கரையில் செலுத்துமாறு ஆணை பிறப்பித்து அதில் ஏறி அமர்ந்தான். ரதமும் வாயு வேகத்தில் புழுதியை வானில் கிளப்பியபடி யமுனையின் அக்கறை நோக்கிப் புறப்பட்டது.
சந்தனு யமுனையின் கரையை அடைந்த மாத்திரத்தில், சத்யவதியின் தந்தையான மீனவத் தலைவனை சந்தித்தான். அப்போது அவனிடம், "மீனவர் தலைவனே! எம்மைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன், அத்துடன் சுருக்கமாக நான் உம்மிடம் வந்த விஷயத்தையும் சொல்கிறேன். கேளும்! உமது மகளான சத்யவதியை நான் நேற்று கண்டேன். கண்ட மாத்திரத்தில் அவள் மேல் மையல் கொண்டேன். அவளை நான் மணக்க விரும்புகிறேன். உனக்குச் சம்மதமா?" என்றான்.
- தொடரும்


No comments:
Post a Comment