சுதந்திரம் கிடைத்த அன்று முதல் இன்று வரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிற ஒரு கானல் தகவல் - "காந்தியும் நேருவும் சுதந்திரம் வாங்கித் தந்தனர்". சுதந்திரம் என்ன கடைச் சரக்கா? வாங்கித் தருவதற்கு?
ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான தேசபக்தத் தியாகிகளின் ரத்தத்தைக் கொடுத்து அதன் இறுதியாக கிடைத்தது தான் நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். ஆயிரமாண்டுகள் வாராது வந்த மாமணியைத் தோற்போமோ என்றான் பாரதி. ஆம்! நாம் ஆயிரம் ஆண்டுகளாய் தொலைத்திருந்த அரிய மணி தான் நம்முடைய சுதந்திரம்.
மாபாரத யுத்தம் முடிந்தவுடன் பீஷ்மரிடம் ஞானம் வேண்டி நிற்கிறார் தருமர். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு தெளிவு பெறுகிறார். அவற்றில் ஒரு கேள்வியின் பதில் நமக்கு உபயோகமானது.
தருமர் - "ஒரு நாட்டை அழிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?"
பீஷ்மர் - "ஒரு நாட்டை அழிக்க நமக்கு படை பலம், ஆயுத பலம் மட்டும் போதாது. அவற்றுக்கு முன்னால் இந்த விஷயங்களைச் செய்தால், படை ஆயுதம் இல்லாமலே நாம் ஒரு நாட்டை அழிக்க முடியும்"
- முன்னோர்களின் தியாகத்தை மறக்கின்ற எந்த ஒரு தேசமும் அழியும்.
- நமது முன்னோர்களின் மீது நம்பிக்கையும், பெருமையும், பற்றும் இல்லாத சமுதாயம் அழியும்.
இது யாருக்குப் புரிந்ததோ இல்லையோ நம்மை ஆள நினைத்த பரங்கிகளுக்கு (பிரிட்டீஷ்காரர்களுக்கு) புரிந்திருந்தது. நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் தியாகங்களை மறந்து, நமது முன்னோர்களின் பெருமைகளை குறைத்துப் பேசி நம்மை நாமே இழிவாக நினைத்துக் கொள்ளும்படியான தலைமுறையை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்.
வாஞ்சிநாதன் என்றொரு சுதந்திர போராளி இருந்தார், மணமாகி ஒரே வாரத்தில் தன் மனைவியை விட்டு விட்டு வந்தார். நம்முடைய மக்களைக் கொன்றொழித்துக் கொடுமைகள் செய்த கலெக்டர் ஆஷ் என்ற பரங்கியனைச் சுட்டுக் கொன்று தன் உயிரையும் தியாகம் செய்தார்.
அவர் தன்னுடைய வாழ்வை, குடும்பத்தைப் பற்றி சிந்திக்கவில்லை நாடும், நாட்டின் விடுதலையும் தான் முதன்மை என்று யோசித்தார்.
ஆனால், இன்று அவரை ஒரு ஜாதியின் பெயரைச் சொல்லி நிராகரிக்கும் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அவரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல்களும் அதற்கு ஆரவாரிக்கும் கூட்டமும் இங்கு உண்டு. என்ன ஒரு கேவலம்!!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாபெரும் சுதந்திர போராட்டத் தலைவர், சிறந்த தேசபக்தர். தன்னுடைய சொத்து முழுவதும் பட்டியல் சமுதாய மக்களுக்குக்காகத் தந்தார். ஆனால் அவரையும் ஒரு ஜாதித் தலைவராக மாற்றி சிறுமைப் படுத்திவிட்டோம்.
காமராஜர், அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன் இப்படி பல்வேறு தலைவர்கள், சுதந்திர போராளிகளை நாம் அவர்கள் செய்த தியாகங்கள், வீரச் செயல்களை மறந்து ஜாதி என்னும் குடுவைக்குள் அடைத்து விட்டோம். அவர்கள் அந்தந்த சமுதாயத்திற்கு எவ்வளவு சொந்தமோ அதே அளவுக்கு நம் பாரத நாட்டிற்கும் சொந்தமானவர்கள்.
அன்று பரங்கியர் விதைத்த விஷ விதை, இன்று ஆலமரமாகி நம்முடைய நாட்டை பிரிக்க - மொழி, இனம், ஜாதி ரீதியாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. மதத்தால் நாம் 1947ல் ஒரு முறை பிரிந்து விட்டோம், அதுவே நமக்கு ஆறாத ரணத்தைத் தந்திருக்கிறது. அதிலிருந்தும் நாம் இன்னும் பாடம் கற்க வில்லை என்பதே நம் இன்றைய நிலை.
நாம் அனைவரும் சோதரர்கள், அனைவருமே பாரத அன்னையின் புதல்வர்கள். நம்மில் பேதம் கிடையாது. இதை உரக்கச் சொல்வோம் உலகினுக்கு. சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டில் நாம் இன்று இருக்கிறோம். இந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர போராடி தம் வாழ்விழந்து, சொத்திழந்து, அனைத்தையும் இழந்து தியாகம் செய்த தியாகிகளின் தியாகத்தை எண்ணிப் பார்ப்போம், போற்றுவோம்.
கத்தியின்றி, ரத்தமின்றி வந்ததல்ல சுதந்திரம். பலருன் உதிர அருவியால் பெறப்பட்டது நமது சுதந்திரம். இதனை உரிய முறையில் பேணிக் காப்பது நம் கடமை.
வந்தே மாதரம்!! வாழ்க பாரதம்!!!



No comments:
Post a Comment