Monday, November 29, 2021

குந்தவை நாச்சியார் இஸ்லாத்து மாறினாரா?

இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை நாச்சியார் பொ. ஆ 980 ல் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் வெகு காலமாக உருட்டப்படுகிறது. இதற்கு ஆதாரமாக பேராசிரியர் அகத்தியதாசன் எழுதிய குந்தவை நாச்சியார் எனும் நூலை மேற்கோள் காட்டி இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் வலம் வருகின்றன.

நாம் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்காத போதே மதவாதி என்ற பட்டத்தை சூட்டும் சில தமிழறிஞர்கள் இதற்கெல்லாம் மறுப்பு பதிவு எழுதினால் நேரடியாக மதவாதியாக மாற்றி விடுவர் என்ற ஐயம் இருந்தாலும் இதற்கு எதாவது ஒரு வகையில் மறுப்பு எழுத வேண்டும் என்று நண்பர்கள் பலர் வலியுறித்தியதன் விளைவாக இப்பதிவு..!

முதலில் இது பற்றிய தகவல்கள் கிடைக்கும் நூல் அகத்தியதாசன் அவர்கள் எழுதிய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை சுருக்கமாக பார்த்துவிட்டு இதற்கு மறுப்பு எழுதுவோம்.

1. இராஜராஜ சோழன் பொ.ஆ 962 ல் பிறந்தார்.

2. குந்தவை நாச்சியார் பொ.ஆ 953ஆம் ஆண்டு பிறந்தார்.

3. குந்தவை நாச்சியார் பொ.ஆ 1026 ல் இயற்கை எய்தினார்.

4. இந்த தரவுகளுக்கு ஆதாரங்கள் அரேபியாவில் இருந்து வந்ததாம்.

5. வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின்தான் பரவியது அரச குடும்பத்தினரை கொலை செய்வதன் மூலமும் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதன் மூலமும் வைணவம் பரப்பப்பட்டதால் தனது தன்மானத்தை காக்க குந்தவை நாச்சியார் மதம் மாறினார்.

7. தஞ்சை பெரிய கோவிலில் குந்தவை நாச்சியார் தனக்கு தானே திருமேனி ஒன்று எடுத்தார்.

இப்படியாக ஏகப்பட்ட தகவல்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி கொட்டி கிடக்கின்றன அந்நூலில். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு அரேபியாவில் உள்ளது என்று எளிதாக கடந்து சென்றுள்ளார் ஆசிரியர்.

சரி இவற்றிற்கு நாம் பதில் சொல்வதானால் சில வரலாற்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன் அவர்களிடம் வினவியபோது ஒருசில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன…!

இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 962 என்பதே தவறான தகவல் எனவும், இராஜராஜ சோழன் பிறந்தது பொ.ஆ 947 என்பதே பெருவாரியான தொல்லியல் ஆய்வாளர்களின் முடிவு என்பது அந்நூலின் கூற்றுகளுக்கு பெருத்த அடியாகும்.

குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் மூத்த சகோதரி என்பதால் தோராயமாக பொ.ஆ 945 ல்தான் குந்தவை நாச்சியார் பிறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் குந்தவை நாச்சியாரை மதமாற்றம் செய்தவர்கள் பொ.ஆ 953 வரை எடுத்துச்செல்வது விந்தையிலும் விந்தை…!

பொ.ஆ 1004 வரை தான் குந்தவை நாச்சியார் வைதீக முறையை பின்பற்றி வந்தார் எனவும், அதுவும் 9 வயதில் பாபா நந்தர் எனும் இஸ்லாமிய போதனையாளரை சந்தித்ததில் இருந்து வைதீக முறைகளில் நாட்டமில்லாமல் தான் இருந்தார் எனவும் எழுதிய ஆசிரியர் பொ.ஆ 1004 க்கு பின் இஸ்லாம் மதத்தை நேரடியாக தழுவினார் என்று எழுதுகிறார்.

இங்கே மிகப்பெரிய சந்தேகம் ஒன்று எழுகிறது. அது என்ன?

பொ.ஆ 1004 ல் இஸ்லாம் மதத்தை ஏற்ற குந்தவை நாச்சியார் 14 ஆண்டுகள் கழித்து எப்படி பழயாறை அரண்மனையில் தங்கி அரசு பணிகள் மேற்கொண்டார்?அதாவது பொ.ஆ 1018 ல் குந்தவை நாச்சியார், பழயாறை அரண்மனையில் தங்கி அரசுப் பணிகள் மேற்கொண்டார் என்றும் கோவிலுக்கு நிவந்தமும் அளித்தார் என்பதும் கல்வெட்டு கூறும் செய்தி. அதாவது தனது 73 வயதிலும் ( 1018 - 945) கோவில் பணிகள் ஆற்றுகிறார்.

இக்காலம் இன்னும் கூட அதிகமாகலாம். ஆக குந்தவை நாச்சியார் தனது இறுதிக் காலம் வரை கோவில் பணிகளை மேற்கொண்டவர் தனது மதத்தை விட்டு இஸ்லாம் மதம் மாறினார் என்பது மதவெறியின் உச்சமே!

வைணவ சமயம் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் தான் பரவியது என்று கூறும் ஆசிரியர் வைணவ மத மாற்றத்திற்கு அஞ்சியே குந்தவை நாச்சியார் மதமாறியதாக தனது பிராமண வெறுப்பை வைதீக பிராமணர்கள் மீது காட்டியுள்ளார்.

ஒருவேளை 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தான் வைணவம் வளர்ந்தது என்றால் 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் வைணவர்களுக்கென தனியாக சித்தாந்தங்களை வகுத்தார்?

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே

-திருமந்திரம்.

12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில்தான் வைணவம் வளர்ந்தது என்றால் ஐந்தாம் நூற்றாண்டில் வைணவம் என்றொரு சமயம் இருந்ததைத் திருமூலர் குறிப்பிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இது கொடு மணல் அகழாய்வில் வெளிப்பட்ட பானையோடுகளில் பழந்தமிழ் எழுத்தான தமிழியில் காணப்படும் பெயர்களில் ஒன்றுதான்,

"கண்ணன் ஆதன்"

இது திருமால் வழிபாட்டின் எச்சமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை தொல்காப்பியத்தின் மாயோன் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அறியலாம். இதன் அடிப்படையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாம் கண்ணன் எனும் திருமால் வழிபாட்டை கொண்டுள்ளோம் என்பதில் ஐயமேதும் இருக்க இயலாது.

அதுபோல சங்க இலக்கியங்களில் பெருமளவில் புகழப்படும் தெய்வம் திருமால்தான் என்பதை அந்நூலின் ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் வைணவம் வளர்ந்தது என்பதுபோன்ற கற்பனைக் கதைகளை எழுதியுள்ளார்…!

அடுத்ததாக தஞ்சை பெரிய கோவிலில் தனக்குத்தானே திருமேனி ஒன்றை குந்தவை நாச்சியார் எடுத்ததாக அந்நூலில் பதிவு செய்துள்ள ஆசிரியர், தன் தந்தைக்கும், தாய்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்துள்ளார் என்பதைத் தான் "தம்மை" என்ற சொல்லால் குறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்பிடுகிறதே அன்றி "தம்மை" என்றால் தனக்குத்தானே என்று பொருள் அல்ல.

இதை "தம் அம்மை" அதாவது தனது தாய் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோன்ற பல வரலாற்றுத் திரிபுகள் தான் அந்நூலில் இடம் பெற்றுள்ளதே அன்றி குந்தவை நாச்சியார் மதம் மாறினார் என்பதற்கு யாதொரு சான்றுகளும் இல்லை!

-பா இந்துவன்

படித்ததில் பிடித்தது!!

No comments:

Post a Comment