Friday, November 19, 2021

சாபம்

 "எப்படி என் சந்ததிகள் முற்றிலும் அழிந்ததோ,அதேபோல் உன் வ்ருஷ்ணி குலமும் சர்வநாசம் அடையும்", கிருஷ்ணனை சபித்த காந்தாரி, தன் அந்தப்புரத்துக்குத் திரும்பினாள். தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்கு, தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

எனினும், அவள் கோபம் அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும்போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத்தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள். திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள். கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின.

கோபம் மீண்டும் கொப்பளிக்க, "எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?"

"காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்! பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது. அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. முதலில் என் கேள்விக்கு பதில்சொல்.

"ஏன் நீ உன் கணவனை சபிக்கவில்லை? அவர் நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது. பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப் பாசம் அல்லவா? நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு. ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை, நீ ஒரு கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா? பிறகு பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின் தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் எனும் போர்வையில், துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களை சபிக்க முடியாது என்ற எண்ணமோ? உன் மகன், தன் சகோதர்களையே அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே, 'மடியில் வந்து அமர்வாய்' என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும், 'ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:' என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன், தன் சுயநலத்திற்காக அவர்களை பலிகொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை? பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கேப் போனது? ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன் தான் உண்மையில் உடன் பிறந்தவள் குடும்பத்தை, கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்" எனக்கேட்டார் பகவான்.

"கிருஷ்ணா, சகுனி என் சகோதரன். நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?" என்றாள். "பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல, பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு சொந்தமில்லையா?"

"கபடனே! குந்தி உன் சொந்த அத்தை.அதனால்தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்"
"பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு. சரி அதைவிடு காந்தாரி. பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால், உனக்கு மகிழ்ச்சிதானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ, அதை துரியோதனாதிகளைச் செய்யவிட்டாயே?"

"கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்கவேண்டும் என நினைப்பது தவறா?""அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ. எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்", என்றார் பரமாத்மா.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏனென எண்ணிப்பார். நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன். கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள் பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன். இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை. மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து, வானரர் உதவியோடு இராவணனை அழிக்க, நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன்.

ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை. போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாகஅமைந்திருக்கும்? மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து, பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?"

"எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?" "அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. "உன் மகன் தான், நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன் திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை."

"கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?""காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்"

"பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?" "ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும், அது மிக மிகக் கொடுமையான பாவம்"."கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து, கானகம் நோக்கி செல்வேன்".

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது எழுந்து நடந்தாள்.

வெளியே! கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.

படித்ததில் பிடித்தது!!

No comments:

Post a Comment