என்னங்க சார் உங்க சட்டம். ஒரு சிறப்பான திரைப்படம். க்ரவுன்ட் ரியாலிட்டி என்ன என்பதை சினிமாத்தனமான சமரசங்களுடன் சொல்லியிருக்கிறார்.
முதல் பாதி சமரசம், பின்பாதி அட்டகாசம். சரியாக சொல்லப் போனால், பிற்பாதி கதையை மட்டும் எடுத்திருந்தால் மிகச்சிறந்த படமாக மாறியிருக்கும், ஆனால் படம் என்றாலே பாட்டு, ஃபைட்டு, டூயட்டு என்று வரையறுக்கப்பட்ட இலக்கணத்துக்காக தேவையற்ற முதல் பாதி. ஒரே நல்ல விஷயம் அதையும் போரடிக்காமல் சொல்லியிருப்பது ஒன்றே!!
இரண்டாம் பாதி தான் இயக்குநரின் கனவாக இருந்திருக்க வேண்டும். கோட்டா முறையில் தற்போது உள்ள ஓட்டைகள், அதைச் சொன்னால் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்பதை அறிந்தும் அதைச் சொன்னது. அரசு பணிக்கு பிராமண கேன்டிடேட், அர்ச்சகர் பணிக்கு பட்டியல் இன கேன்டிடேட். அவர்கள் நடத்தப்படும் விதம், சாதி வேறானாலும் வறுமை ஒன்றுதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.
எந்த சாதியிலும் வறுமையில் உள்ளோருக்கே கோட்டா முறை பயன்பட வேண்டும். கோட்டாவை பரம்பரை பரம்பரையாக சிலர் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சாதியினரை வளர விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் துணிவுடன் சொல்லியிருக்கிறார்.
"நீங்களும் சொல்லாதீங்க சார் அந்த பொய்ய, சென்னையில ஜாதி இல்லன்னு"
"தமிழ்நாட்டுல ரெண்டு விதமானகட்சி தான் இருக்கு, ஒண்ணு நாங்க ஜாதி கட்சினு சொல்லிக்கிட்டு அவங்க ஜாதி வேட்பாளர போடுற கட்சி, ரெண்டு நாங்க தமிழ்நாட்டுக்கான கட்சின்னு சொல்லிகிட்டு தொகுதியில எந்த ஜாதி அதிகமா இருக்கோ அவங்கள வேட்பாளரா போடுற கட்சி, ஆக மொத்தம் ரெண்டும் ஒண்ணு தான்"
"அழுக்கா இருக்கீங்க சுத்தம் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லாம நீங்க கோயிலுக்கே வரக் கூடாதுன்னு சொன்னது தவறு"
"எப்பவோ யாரோ செஞ்ச தவறுக்காக நா ஏன் இப்ப கஷ்டப்படனும், என்னை ஏன் தனியா பார்க்கணும் நானும் அவங்கள மாதிரி தான" போன்ற வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன.
சரி குறியீடு எதாச்சும் இருக்கா? ஏன் இல்லாமல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டியல் சமூக மக்களை அழைத்துச் சென்ற வைத்தியநாத அய்யர் பெயரை நந்தனுக்கு அர்ச்சகர் பணி கொடுக்கும் தேர்வராக வருபவருக்கு வைத்தது.
டி.என்.பி.எஸ்.சி யில் தேர்வராக பத்ரகாளி என்று அவரின் கேரக்டருக்கு பெயர் வைத்தது. போகிற போக்கில் இயக்குநர் ரஞ்சித்தை ரஞ்சித் தாசன் மூலமாக நய்யாண்டி செய்தது (தவறாக எதுவும் சொல்லவில்லை) என்பதைச் சொல்லலாம்.
ஆக மொத்தம் ஓ.டி.டியில் வந்த ஒரு நல்ல படம் சோனி லைவில் காணலாம். இதே படம் திரையரங்கில் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
பிகு: இது போன்ற நல்ல படம் வந்தால் எல்லா யூட்யூப் சேனல்களும் கொண்டாடி தள்ளியிருக்குமே? சூர்யாவின் ஜெய் பீம் அதற்கு சாட்சி, அந்த படத்தின் எல்லா கேரக்டரும் பேட்டி கொடுத்து விட்டார்களா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு பெரும் அமைதி மட்டுமே இருந்தது, என்னவாயிருக்கும்!!

No comments:
Post a Comment