Sunday, November 21, 2021

முட்டாள்களிடம் எப்படி பேசுவது?

முன்னொரு காலத்தில் ஒரு ராஜா தன் மந்திரியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் மனதில் ஒரு புதுமையான கேள்வி தோன்றியது. ராஜா உடனே மந்திரியிடம், "மந்திரியாரே! முட்டாள்களிடம் எப்படி பேசுவது?" என்று கேட்டார். திடீரென ராஜா இப்படி ஒரு கேள்வி கேட்பார் என்று எதிர்பாராத மந்திரி, "மன்னர் பெருமானே! இதற்கான பதிலை நாளை சொல்கிறேனே?" என்று முறையிட்டார்.

மறுநாள் காலை அந்த மந்திரி தன்னிடம் வேலை செய்யும் ஒருவனைக் கூப்பிட்டு, "நான் சொல்வது போல செய்தால் உனக்கு நூறு வெள்ளிக் காசுகள் தருகிறேன்" என்றார். அந்த வேலைக்காரனும் அமைச்சர் சொல்வது போல் செய்வதாக உறுதி கூறினான். உடனே மந்திரி அவனிடம், "உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்து சென்று உன்னை மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். அச்சமயம் மன்னர் உன்னிடம் சிலபல கேள்விகள் கேட்பார். நீ வாய் திறந்து பதில் எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். சரியா? "மந்திரி வேலைக்காரனை அரசவைக்கு அழைத்து சென்றார்.

"மன்னர் மன்னா! இதோ இருக்கிறானே இவன் எனது உறவினன். மெத்தப் படித்தவன். தாங்கள் என்ன கேள்வி கேட்டாலும் இவனால் உடனடியாக பதில் கூற முடியும்" என்று அவனை மன்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் மன்னர் அவனை நோக்கி முந்தைய நாள் அமைச்சரிடம் கேட்ட அதே கேள்வியை, "முட்டாள்களிடம் சில நேரங்களில் பேச நேரிட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" மறுபடி கேட்டார்.

அந்த வேலைக்காரன் அமைச்சர் சொன்னபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். மன்னர் பலமுறை பல்வேறு விதத்தில் இதே கேள்வியை கேட்ட போதும் அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. மன்னர் அமைச்சரை நோக்கி, "என்ன? உங்கள் உறவினன் பலமுறை கேட்டும் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறானே!!?? நீங்கள் சொன்னது போல் இவன் அறிவாளியாக இருப்பான் என்று தோன்றவில்லையே?" என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

அதற்கு அமைச்சர், "மன்னரே! தாங்கள் கேட்ட கேள்விக்கு தான் பதில் கூறிவிட்டானே!!" என்றார். "நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் சொன்னான். வாய் மூடி மௌனியாக அல்லவோ இருக்கிறான்?" என்றார் மன்னர். "அரசே! முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தானே உங்கள் கேள்வி? அதற்கான விடையைத் தான் தன்னுடைய மௌனத்தின் மூலம் விடை கூறியுள்ளான்.

அதாவது, முட்டாள்களிடம் சில சமயங்களில் பேச நேரிட்டால், மௌனமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பேசாது வாய் மூடி மௌனமாக இருந்தான்" என்றார் அமைச்சர். முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னை குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றி பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற இயலாது. ஆகையால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சாலச்சிறந்தது என்பதை உணர்த்திய அமைச்சரை பாராட்டினார் மன்னர். யோசித்து செயலாற்றினால் செயல்களில் வெற்றி காணலாம்.

முட்டாள்களிடம் வாதிடாதீர்கள், அவர்கள் உங்களை அவர்கள் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

No comments:

Post a Comment