Sunday, November 7, 2021

திருக்குறளும் சில அறிவிலிகளும்

திருக்குறள் ஒரு கிருத்துவ நூல் எனும் கருத்தாக்கம் 1980களின் இறுதியில் தமிழகத்தில் ஒருபெரும் விவாதப்பொருளாக இருந்தது. 

அதிலும் தெய்வநாயகம் என்பார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்ட முனைவர்பட்ட ஆய்வின் தலைப்பாக, 'விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு' என்று வைத்து, அந்நூலில் சைவ சித்தாந்தத்தினையே முழு மூச்சாக எதிர்த்து விவிலியத்தை கொண்டு திருக்குறளை கிருத்துவ நூலாக காட்டியிருந்தார்.

காரணம் அன்று திருக்குறள் ஒரு சமண நூல் எனும் கருத்தாக்கத்தில் பரவலாக்கப் படவில்லை. அதுவரையிலும் திருக்குறளை அதிகம் உரிமைக் கொண்டாடியவர்கள் சைவர்களே!

தெய்வநாயகம் விவிலியம் கொண்டு திருக்குறளை நிறுவ முயற்சித்து அவர் முன்வைத்த ஆய்வுகள் பலவீனமாக இருந்தன. இதனால் அன்று சைவ ஆதினங்கள் ஒன்று கூடி தருமபுரத்திலே ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சைவ சித்தாந்திகள் ஒருபக்கமும் தெய்வநாயகம் அவர்கள் சார்பாக முற்போக்காளர்கள் பலர் மற்றொரு புறமும் விவாதித்தனர். 

முடிவில் தெய்வநாயகம் அவர்களின் ஆய்வு முடிவினை பல கட்டமாக பிரித்து மறுத்தளித்ததால் கருத்தரங்கம் சைவர் சார்பில் முடிவுற்றது.

ஆனாலும் ஆதினத்திற்கு வருகை தந்து கருத்தரங்கினில் கலந்துக் கொண்டமைக்கு மரியாதை செய்யும் வகையில் ஆதின கர்த்தர் ஆசீர்வதித்த

படத்தினை வெளியே பகிர்ந்து ஆதினமே தெய்வநாயகம் அவர்களின் நூலின் முடிவினை ஏற்றுக்கொண்டதாக கருத்துக்களை பரப்பியதால் இந்த சிக்கல் நீதிமன்றத்தினை நாடியது.

வழக்கு சவ்வாக இழுத்துக் கொண்டு போனது. இது பயனளிக்காது என அறிந்த அன்றைய ஆதின கர்த்தர்,

அப்போதைய தருமையாதீன புலவரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியருமான மகாவித்துவான் திரு அருணை வடிவேலு அவர்களை அழைத்து மறுப்பு நூல் ஒன்றினை எழுதுமாறு கூறினார்.

அதன்படி ,'விவிலியம்-திருக்குறள்-சைவ சித்தாந்தம் ஓர் ஒப்பாய்வின் மறுப்பு நூல்' என்ற தலைப்பில் திரு அருணை வடிவேலு அவர்கள் எழுதிய அந்நூலினை திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம் வெளியிட்டது.

தெய்வநாயகத்தின் ஆய்வில் உள்ள இலக்கண பிழையில் தொடங்கி கருத்துப்பிழை, தத்துவ பிழை என அத்தனையையும் சுட்டிக்காட்டி ஒரு சிறப்பான நூலாக அந்நூல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அந்நூலினை தரவிறக்கம் செய்ய:

நூலைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment