Monday, June 29, 2020

மகாபாரதம் - அறிமுகம்

மகாபாரதம் அறிமுகம்


அன்பு நண்பர்களே,
        
    வேதங்கள் அறிவின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. ஆனால் வேதங்கள் அதன் அறிவார்ந்த விஷயங்கள் சாதாரண மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை. அதிலும் சில ஆழமான விஷயங்கள் பெரும் அறிஞர்களுக்கே விளங்குவது கடினம். மேலும், சில விஷயங்கள் நாம் அனுபவத்தால் மட்டுமே உணரத் தக்கவை ஆகும். இந்த காரணங்களால் வேத அறிவானது சாதாரண மக்களிடம் செல்லாமல் இருந்தது.

வியாசரும் விநாயகரும்
அந்த குறையைப் போக்க அந்த வேதங்களை தொகுத்த க்ருஷ்ண த்வைபாயண வியாசர் எளிய மக்களுக்கும் புரிய வைக்க ஐந்தாம் வேதமாக மகாபாரதத்தை அருளினார். வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது இந்த மகாபாரதம் ஆகும். இந்த இதிகாசத்திற்கு வியாசர் இட்ட பெயர் "ஜய" ஆகும். ஜய என்றால் வெற்றி என்று பொருள். 

இதிகாசம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இப்படி நடந்தது என்று பொருள், அதாவது நடந்தவற்றைச் சொல்வது தான் இதிகாசம். மகாபாரதம், ராமாயணம் பாரத இதிகாசங்கள் ஆகும். 

உலகின் மிகப்பெரும் காவியமான இது பல்லாயிரம் மாந்தர்களையும், பல்வேறு கால நிலைகள், இடங்கள், நட்சத்திர நிலைகள் என இந்த உலகம் முழுவதும் இணைத்து எழுதப்பட்டதாகும்.

சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் ஆசை, பேராசை அதனால் வரும் சங்கடங்கள், நல்லவை-தீயவை என்று எல்லாவற்றையும் பேசும் ஒரு காவியமாகும். இதில் வரும் மாந்தர்களின் நிலையை எந்த மனிதரும் வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் தன்னை நிறுத்திப் பார்க்க முடியும்.

உங்களை இந்த மகாபாரத யாத்திரைக்கு அழைத்துச் செல்ல விழைகிறேன். தினசரி ஒரு ஐந்து நிமிடம், இந்த மகாபாரத வரலாறை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

நாளை முதல் தினசரி ஒரு பகுதி வெளிவரும்!!

No comments:

Post a Comment