Showing posts with label திரைப்படங்கள். Show all posts
Showing posts with label திரைப்படங்கள். Show all posts

Saturday, November 6, 2021

என்னங்க சார் உங்க சட்டம் - என் பார்வை

என்னங்க சார் உங்க சட்டம். ஒரு சிறப்பான திரைப்படம். க்ரவுன்ட் ரியாலிட்டி என்ன என்பதை சினிமாத்தனமான சமரசங்களுடன் சொல்லியிருக்கிறார்.

முதல் பாதி சமரசம், பின்பாதி அட்டகாசம். சரியாக சொல்லப் போனால், பிற்பாதி கதையை மட்டும் எடுத்திருந்தால் மிகச்சிறந்த படமாக மாறியிருக்கும், ஆனால் படம் என்றாலே பாட்டு, ஃபைட்டு, டூயட்டு என்று வரையறுக்கப்பட்ட இலக்கணத்துக்காக தேவையற்ற முதல் பாதி. ஒரே நல்ல விஷயம் அதையும் போரடிக்காமல் சொல்லியிருப்பது ஒன்றே!! 

இரண்டாம் பாதி தான் இயக்குநரின் கனவாக இருந்திருக்க வேண்டும். கோட்டா முறையில் தற்போது உள்ள ஓட்டைகள், அதைச் சொன்னால் இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்பதை அறிந்தும் அதைச் சொன்னது. அரசு பணிக்கு பிராமண கேன்டிடேட், அர்ச்சகர் பணிக்கு பட்டியல் இன கேன்டிடேட். அவர்கள் நடத்தப்படும் விதம், சாதி வேறானாலும் வறுமை ஒன்றுதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.

எந்த சாதியிலும் வறுமையில் உள்ளோருக்கே கோட்டா முறை பயன்பட வேண்டும். கோட்டாவை பரம்பரை பரம்பரையாக சிலர் பயன்படுத்திக் கொண்டு தங்கள் சாதியினரை வளர விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் துணிவுடன் சொல்லியிருக்கிறார்.

"நீங்களும் சொல்லாதீங்க சார் அந்த பொய்ய, சென்னையில ஜாதி இல்லன்னு"

"தமிழ்நாட்டுல ரெண்டு விதமானகட்சி தான் இருக்கு, ஒண்ணு நாங்க ஜாதி கட்சினு சொல்லிக்கிட்டு அவங்க ஜாதி வேட்பாளர போடுற கட்சி, ரெண்டு நாங்க தமிழ்நாட்டுக்கான கட்சின்னு சொல்லிகிட்டு தொகுதியில எந்த ஜாதி அதிகமா இருக்கோ அவங்கள வேட்பாளரா போடுற கட்சி, ஆக மொத்தம் ரெண்டும் ஒண்ணு தான்"

"அழுக்கா இருக்கீங்க சுத்தம் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லாம நீங்க கோயிலுக்கே வரக் கூடாதுன்னு சொன்னது தவறு"

"எப்பவோ யாரோ செஞ்ச தவறுக்காக நா ஏன் இப்ப கஷ்டப்படனும், என்னை ஏன் தனியா பார்க்கணும் நானும் அவங்கள மாதிரி தான" போன்ற வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன.

சரி குறியீடு எதாச்சும் இருக்கா? ஏன் இல்லாமல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டியல் சமூக மக்களை அழைத்துச் சென்ற வைத்தியநாத அய்யர் பெயரை நந்தனுக்கு அர்ச்சகர் பணி கொடுக்கும் தேர்வராக வருபவருக்கு வைத்தது. 

டி.என்.பி.எஸ்.சி யில் தேர்வராக பத்ரகாளி என்று அவரின் கேரக்டருக்கு பெயர் வைத்தது. போகிற போக்கில் இயக்குநர் ரஞ்சித்தை ரஞ்சித் தாசன் மூலமாக நய்யாண்டி செய்தது (தவறாக எதுவும் சொல்லவில்லை) என்பதைச் சொல்லலாம்.

ஆக மொத்தம் ஓ.டி.டியில் வந்த ஒரு நல்ல படம் சோனி லைவில் காணலாம். இதே படம் திரையரங்கில் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

பிகு: இது போன்ற நல்ல படம் வந்தால் எல்லா யூட்யூப் சேனல்களும் கொண்டாடி தள்ளியிருக்குமே? சூர்யாவின் ஜெய் பீம் அதற்கு சாட்சி, அந்த படத்தின் எல்லா கேரக்டரும் பேட்டி கொடுத்து விட்டார்களா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு பெரும் அமைதி மட்டுமே இருந்தது, என்னவாயிருக்கும்!!

Sunday, January 26, 2014

சில திரை விமர்சனங்கள்

தூம் 3:
சமீபத்தில் பார்த்த படம். மூன்றே நாட்களில் 100 கோடி வசூல், அமீர் கான் வில்லத் தனமாக நடித்தது, அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது, தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த தரம் போன்ற பல காரணங்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். எதிர் பார்த்த படி நல்ல வசூலையும் தந்திருக்கிறது இந்த படம்.
தூம்3
தூம்3
ஆனால் படத்தில் பாதி நேரம் பைக் ஓட்டியே சாகடிக்கிறார்கள். பைக் சேசிங்குக்குத் தந்த முக்கியத்துவத்தை கொஞ்சம் அமீர்கான் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார் என்பதையும் காண்பித்திருக்கலாம். அந்த வங்கியில் செக்யூரிட்டி குறைவா, அல்லது இயக்குனரிடம் சரக்கு இல்லையோ?
அமிதாப் பச்சனும், தங்கர் பச்சனும் சொந்தமா? என்று கேட்கும் அளவிற்கு ஹிந்தி திரைப்பிரபலங்களைப் பற்றித் தெரிந்த ஒருவன் இந்த படத்தைப் பார்க்கும் போது ஹிந்தி படங்களில் வரும் எல்லா நடிகர்களும் ஒரு வீலில் பைக் ஓட்டுவார்களோ என்ற எண்ணம் மேலோங்கும்.
அபிஷேக் பச்சனுடன் வரும் அல்லக்கை காமெடி செய்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் மொக்கை மற்றும் பரவாயில்லை ரகம். கத்ரீனா கைஃப் வருகிறார், போகிறார் மற்றும் பாடல்களில் கொஞ்சூண்டு ஆடை கட்டி ஆடுகிறார் தமிழ் படங்களில் கூட இன்னும் கொஞ்சம் நடிக்க விடுவார்கள் போல!!
நோலனின் Prestige படத்தின் கருவை உருவி கொஞ்சமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இருந்து உருவியதைப் பற்றி தோலுரித்து தொங்கவிட வேறு பதிவர்கள் இருக்கின்றனர். நமக்கு தெரிந்த அளவில் இது மட்டும் கண்ணில் பட்டது.
சில ட்விஸ்டுகள் மற்றும் இறுதிக் காட்சியில் அமீர்கான்களின் முடிவு "நன்று". சராசரி ரசிகனுக்கு சூப்பர், மற்றபடி சாதாரண ஒரு மசாலாத் திரைப்படம்.
ஜில்லா மற்றும் வீரம் :
ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கலுக்கு வந்து தமிழ் ரசிகர்களின் ரசிகத் 'திறனுக்கு' விருந்து படைத்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. இரண்டும் குடும்பப் பிண்ணனியில் அமைந்த வெட்டுக் குத்துத் திரைப்படங்கள். ஒருவர் தன்னை எடுத்து வளர்த்த தந்தையை காப்பாற்றி திருத்துகிறார், மற்றவர் தன்னுடைய காதலியின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.
ஜில்லா- வீரம்
ஜில்லா- வீரம்
என்னை பொறுத்தவரையில் இரண்டு படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம். ஒப்பீட்டளவில் வீரம் பரவாயில்லை என்றேத் தோன்றுகிறது. ஓரே ஒரு வசனம் மனதில் நிற்கும்படி இருந்தது வீரத்தில்.
"நம்மள சுத்தி இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா, மேல இருக்கிறவன் நம்மள நல்லா பார்த்துப்பான்!!"
மத்தபடி இரண்டும் கதாநாயகர்கள் தொட்டா தொட்டபெட்டா உடையும், சிரிச்சா எரிமலை வெடிக்கும் என்பன போன்ற  காதில் பூ வைக்கும் ஆஆஆக்- ஷன் காட்சிகளை வைத்து "மிரட்டியிருக்கிறார்கள்". வேறு நல்லத் திரைப்படங்கள் இல்லாததாலும், இரண்டும் பரவாயில்லை ரகம் என்பதாலும் ஜில்லா கல்லா கட்டுது - வீரம் சோரம் போகாது.
நம்முடைய பெரிய ஹீரோக்கள் எப்போதுதான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்களோ.
- சரவணன்

Saturday, February 2, 2013

நீர்ப்பறவை விமர்சனம்

நீர்ப்பறவை திரை படத்தை சமீபத்தில் தான் காண நேர்ந்தது. மிக சிறப்பான ஒரு காதல் கதை என்று சொல்லலாம். மீனவ கிராமத்தின் சூழலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்ட படம்.

மிகவும் இயல்பான சினிமாத்தனம் இல்லாமல் கதை சொல்லிய இயக்குனருக்கு பாராட்டுகள். ஒரு சமூக பிரச்சினையை எடுத்து கொண்டு அதை மையமாக வைத்து திரைக்கதை அமைத்த விதம் அருமை, ஆனால் காதல் சொல்லப்பட்ட அளவுக்கு மீனவ கொலை பற்றிய விஷயங்கள் அழுத்தம்  குறைவாக இருப்பது நெருடல்.

என்னளவில் இதை ஒரு சிறந்த காதல் படமாக கொள்ளவே மனம் ஒப்புகிறது. அருளப்ப சாமி (விஷ்ணு)  மற்றும் எஸ்தர் (சுனைனா) காதல் காட்சிகள் அருமை. விஷ்ணு நடிப்பில் முன்னேறியுள்ளார், அவரின் உழைப்பு இந்த படத்தில் நன்றாக தெரிகிறது. சுனைனா தமிழுக்கு நல்ல கதாநாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் பிரகாசம்.

இவ்விருவரை தவிர்த்து நம் மனதில் நிற்க கூடியவர்கள், விஷ்ணுவின் அப்பாவாக வரும் 'பூ' ராம், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் இருவரின் நடிப்பும் எதார்த்தம். மகன் மேல் பாசம் வைக்கும் பெற்றோராக இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

மகன் தவறு செய்யும் போது திருத்த முயல்வதும், திருந்தி வரும் போது அவன் உழைக்க படகு செய்ய சொல்லி உதவும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார் ராம். சரண்யா வழக்கம் போல ஒரு நல்ல அம்மாவாக நடித்திருக்கிறார்.

குடிகார நண்பர்களாக ப்ளாக் பாண்டி மற்றும் தமிழ் வாத்தியாராக வரும் தம்பி ராமையா கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். ஒன்லைனர்களில் சிரிப்பு சிறப்பாகவே உள்ளது.

வசனங்களில் "ஜே.மோ" நறுக்கு தெறிக்கிறது, ஒரு இடத்தில் நமது பத்திரிக்கைகள் தமிழ் மீனவர் பலி என்று எழுதும் தவறான போக்கை கண்டித்து ஒரு வசனம் வருகிறது, இந்திய மீனவர் பலி என்று தான் கூறவேண்டும். தமிழ் மீனவர் பலி என்பது மாநில பிரச்சினையாக பார்க்கப்படும், இது மாநில பிரச்சினை அல்ல நாட்டின் பிரச்சினை என்பது தான் சரியான கண்ணோட்டம் ஆகும்.

பாடல்கள், இசை திரை கதையோடு ஒத்து நெருடாமல் வருகிறது. பல திரைப்படங்கள் இசை கதையோடு ஒன்றாமல் தனித்து நிற்கும், அப்படியல்லாமல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. இளையராஜாவின் பல பாடல்கள் சிறப்பாக இருந்தும் கதையோடு ஒன்றாமல் இருந்ததால் அவரின் ஆற்றல் சரியாக வெளிப்படவில்லை என்பது என்னுடைய மனக்குறை.

கடலிலேயே பிறந்து, வாழ்ந்து, இறந்து போகும் மீனவர்களின் போராட்டம் தான இந்த நீர்ப்பறவை.

நீர்ப்பறவை - இன்னும் இறகை விரித்திருக்கலாம் (3.5/5)