Sunday, March 24, 2019

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை!

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
 
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை! 
அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
 
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள்.
 
இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு நீராணிக்கர்கள் என பெயர்!
 
ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!
நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா?
 
அவர்களுக்கு நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்!
 
ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!
 
ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!
அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!
அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!
என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.
 
ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!
 
அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே குளத்துக்காப்பாளர்கள்!
இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.
ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!
 
அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!
 
ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நீர்வெட்டியார் அல்லது நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!
இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!
பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!
இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்!
 
ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
 
உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும்.
 
இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!
 
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள்.
 
மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!
 
சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது!
 
களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை!
இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது!
ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும்.
 
இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!
 
இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் குமிழி!
இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள்!
 
 
ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் குமிழி இருக்கும்.
இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப்பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும்!
 
ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள்.
சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும்!
 
வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்!
 
ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
 
அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின!
 
ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.
ஏரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம்.
 
இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்!
 
விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள்!
அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது!
 
ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள்!
 
இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள்!
 
இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை மடையர்கள் பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என கணக்கீடுகளை தெரிந்திருந்தார்கள்!
 
ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை ‘நீர் பாச்சி’ என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம்!
இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக குமுழிப்பள்ளர்கள் இருந்தார்கள்!
 
இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக ‘முறைப் பானை’ என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்!
இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள்.
 
இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள்!
 
அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள்...!
 
நீரைப்பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் குமுழிப்பள்ளர்களை அடித்துக் கொள்ள முடியாது!
நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!
 
அதனால் தான் மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு மடையர்கள் என்று பெயர் இருந்தது!
 
மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும்.
 
மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.
இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும்!
ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும்!
வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் தண்டோராமூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்!
அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும்.
 
அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். மடையன்என்று அழைக்கப்படுபவர்!
தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவ வீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இவர் செய்யும் தியாகமும்!
மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான்!
ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார்!
ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல!
ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை அன்று திணறடித்த செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம்.
இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம்!
 
எவ்வளவு மூச்சை தம் கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பது போல்!
மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்று விடுவதும் உண்டு!
இப்படி மடையை திறக்கப் போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக நடுகல் நட்டு வைப்பார்கள்!
 
50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார்!
மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு! "ஏரிகள் - குளங்கள் குடி மராமத்து" 
ஒரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன!எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம்!
 
அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது!
ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும்!
 
அப்படி ஒரு நீர் நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும், கல்வெட்டும்!
அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்!
 
சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்!
‘குளம் வெட்டுதல்’ என்பது முதல் அம்சம். அதில் ‘கலிங்கு அமைத்தல்’ 2வது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் ‘வரத்துக்கால்’, மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் ‘வாய்க்கால்’ அமைப்பு போன்ற அனைத்தும் 3வது அம்சம். ‘ஆயக்கட்டு’ பகுதிகளை உருவாக்குதல் 4வது அம்சம். ஊருக்கான ‘பொதுக்கிணறு’ அமைத்தல் 5வது அம்சம். 
பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும்!
 
 
ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்!
 
மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும்!
இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்!
சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்!
நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும்!
அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது.
 
அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது!
சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகிவிட்டது!
 
அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..?
விட்டுவிடுவார்களா..!?
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள் மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா..?!
 
பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள்!
இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் மாற்றிக் கொண்டார்கள்!
 
இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள்!
இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள்!
 
 
இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.
கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்!
 
இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு குடிமராமத்து எனப் பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக்கொள்ளும் முறை.
 
வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குளங்களை சுத்தப்படுத்துவார்கள்!
 
 
இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன...!
இப்படி ஊர் மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?
 
பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்!
“கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்.”
அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.
ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!
 
மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!
இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்...
அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது...!
 
 
இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!
இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு பொய்கை, ஊற்று என்று பெயர்.
தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு சுனை, கயம் என்று பெயர்!
 
ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு குட்டை என்று பெயர்!
இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!
மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு குளம் என்று பெயர்!
 
அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!
பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல்.
 
இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது. குளங்கள் மனிதர்களின் உடலை குளிர்வித்தன!
 
 
நன்றி : தஞ்சை ஆ மாதவன் அவர்களின் ட்விட்டர் தொடர்.
 

Thursday, January 11, 2018

அது என்னப்பா அது கர்ப்ப ஓட்டம்!!

தமிழர்களின் கண்டுபிடிப்புக்களை இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்.  தினசரி காலண்டரில் "இன்று" “கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?

நான் மட்டுமல்ல நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது எப்போதாவது எல்லோருமே தான் கண்டிருப்போம் கெர்போட்ட ஆரம்பம் என்றொரு அறிவிப்பை. சிலர் அரசு விடுமுறை தினங்களைத்தேடி நாட்காட்டியின் பின்புறம் தேடுகையில் கூட கெர்போட்ட நிவர்த்தி என்ற ஒரு அறிவிப்பு இருப்பதைக் கண்டிருக்கலாம்.

இது ஏதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாதக் கோவில் திருநாளோ அல்ல, உண்மையில் தமிழர்களின் அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்றே இதுவும்! அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி காலப்போக்கில் கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகின்றன.

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர் அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனூர் ராசி மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தைக் கடக்கப் பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள், இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருத்தி... ஒன்பது மாதம் கழித்துப் புரட்டாசிக்குப் பின் பிள்ளைப் பேறடைவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும் இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது  ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரமெல்லாம் தெரியாது இல்லையா??

எனவே, மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்துக் கொள்வார்கள் இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கருகட்டி இருக்கிறது என்று பொருள் எனவே அடுத்து வரும் ஆண்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள் கொள்வார்கள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம். இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் கருக்கொள்ளும் மேகத்தைக் கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இது தான் கர்ப்போட்டம் சங்கப்பாடல்களில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் எத்தனை மிமீ மழை எங்கே எவ்வளவு பதிவு ஆகிறதோ, அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180 = 900மிமீ சராசரியாகப் பெய்யும்.


அதற்கு தகுந்தாற் போல் நீர் மேலாண்மை செய்வார்கள். பயிரைத் தேர்வு செய்வார்கள். நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம் ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியைப் பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்  புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!

நன்றி : தினமணி

Wednesday, December 27, 2017

யார் இந்த குயிலி?


வீரப்பெண் குயிலி

குயிலி
வீரம் விளைந்த மண் நம் தமிழகம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்துத் தியாகம் செய்தனர். அதே போல் நமது பெண்களும் அவர்களுக்கும் மேலாகத் தியாகம் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்டப் பெண்களில் ஒருவர் தான் வீரப்பெண் குயிலி.

சிவகங்கை சமீபத்தில் உள்ள பாசங்கரை எனும் ஊரில் பெரியமுத்தன் -ராக்கு தம்பதியின் ஒரே மகளாக குயிலி பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்த பின் குயிலியும் அவர் தந்தையும் சிவகங்கை சமீபத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.

சிறு வயதிலிருந்தே குயிலி அவர்கள் ராணி வேலு நாச்சியாரின் வீரம் மற்றும் விவேகத்தால் பெரிதும் கவரப்பட்டார். ஒரு சமயம் தந்தையும் மகளும் ராணியை பார்க்க வேண்டும் என்று காவலரிடம் அனுமதி வேண்டினர். அப்போது அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ராணி, உடனடியாக அவர்களை அழைத்தார். மேலும் தந்தையையும் மகளையும் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கினார். காலப்போக்கில் தந்தையும் மகளும் வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமானார்கள்.

1773ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேயர்கள் நயவஞ்சமாக கொன்று, பின்னர் அரண்மனையையும் கைப்பற்றினார்கள். இதன் பின் ராணி வேலு நாச்சியார் சுமார் 8 ஆண்டு காலம் தலை மறைவாகவே இருந்து வந்தார்.

ஒரு சமயம் வேலு நாச்சியாரின் சிலம்பாசிரியர் வெற்றிவேல் என்பவர் ஒரு ஓலையைக் கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்குமாறு கூறி, கூடவே கூலியாக ஒரு பையையும் கொடுத்தார். அந்த ஓலையானது வேலு நாச்சியாரின் போர் நுட்பங்களைப் பற்றியது என்று அறிந்த குயிலி வெகுண்டெழுந்து வெற்றிவேலை வெட்டி வீழ்த்தினார்.

சம்பவ இடத்திற்கு வந்த வேலு நாச்சியார் ஓலையை படித்தப் பின் தன் சிலம்பாசிரியர் ஒரு ஆங்கிலேய ஒற்றன் என்பதை அறிந்தார். தன்னிடம் குயிலிக்கு இருந்த விசுவாசத்தை மெச்சி அவரை தன் அந்தரங்க காவலராக நியமித்தார்.

இன்னொரு சமயம் வேலு நாச்சியார் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது ஒரு குறு வாள் வீசப்பட்டது. அருகில் இருந்த குயிலி தன் வெறும் கையினால் அந்த வாளை தடுத்தார். தூக்கத்திலிருந்து எழுந்த வேலு நாச்சியார் குயிலி கையில் ரத்தம் பெருகுவதை கண்டார். நிலைமையை புரிந்து கொண்டு தானே குயிலிக்கு மருந்து கட்டு போட்டு விட்டார். குயிலியை தன் மகளாகவே வேலு நாச்சியார் பாவித்தார். குயிலியும் அவர் தந்தையும் வேலு நாச்சியாரின் அந்தரங்க ஒற்றர்கள் என்றறிந்த ஆங்கிலேயர்கள் எப்படியாவது குயிலியை கொலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.

1780ல் மருதுபாண்டியர் தலைமை மற்றும் ஹைதர் அலி படை உதவியுடன் சிவகங்கையை மீட்க வேலு நாச்சியார் படை எடுத்தார். இந்த முயற்சியில் பெண் படைக்கு குயிலி தலைமை வகித்தார். வேலு நாச்சியார், மல்லாரிராயன் என்பவரையும் மற்றும் தளபதி ஜோசப் ஸ்மித் என்பவரையும் வெட்டி வீழ்த்தினார்.

ஆங்கிலேயர்கள் சிவகங்கை அரண்மனையை தங்கள் ஆயுத கிடங்காக உபயோகித்து வந்தனர். கிடங்கையையும் அதன் சுற்றுப்புறத்தையும் நன்றாகவே பாதுகாத்து வந்தனர். ராணி வேலு நாச்சியார் அவர்களின் இறுதி போரில் தோற்றுவிடக்கூடாது என்பதில் குயிலி மிகவும் குறியாக இருந்தார். இது சம்பந்தமாக உளவு வேலையும் ஆரம்பித்தார்.

சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் விஜயதசமி அன்று தரிசனம் செய்ய எல்லா பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ராணி வேலு நாச்சியார், குயிலியுடன் பெண் படை அரண்மனைக்குள் புகுந்தது .கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறும் தருணம், “வெற்றிவேல்!! வீரவேல்!!!” என்று முழங்கியபடி அங்கிருந்த ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.
இதற்கிடையில் குயிலி தன் உடல் முழுவதும்,தீப நெய் ஊற்றிக்கொண்டு தனக்கு தீயூட்டிக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்தார் . ஆயுதக் கிடங்கில் இருந்த அனைத்து வெடி மருந்துகளும் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.


குயிலியின் தற்கொலை பற்றி அறிந்த ராணி மிகவும் மனவேதனை அடைந்தார். நாட்டின் விடுதலை போரில் தன்னையே ஈன்றவர் குயிலி. குயிலுக்கு பாசங்கரை கிராமத்தில் ஒரு நினைவு சின்னம் இருக்கிறது. அப்பகுதி மக்கள் அவரை தீப்பாஞ்ச அம்மன் என்று வழி படுகிறார்கள்.

Monday, December 11, 2017

எழுத்துச் சித்தன் பாரதியார்!!

மஹாகவி பாரதி ஒரு சகாப்தம். இதில் இருவேறு கருத்துகள் இல்லை முற்றிலும் உண்மை. பாரதி ஒரு மஹாகவி இதுவும் நூற்றுக்கு நூறு உண்மை தான்.

ஆனால் மஹாகவி என்றவுடன் கவிதைகள் பல புரிந்தவன் என்ற எண்ணம் மட்டுமே தொன்றுவது இயற்கை. பாரதி ஒரு கவி மட்டும் அல்ல. பற்பல கவிதைகளை எழுதியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. பல கட்டுரைகள், கவிதைகள், பல கதைகள், பல கேலிச்சித்திரங்கள், பல செய்தி தொகுப்புகள் என அவரது எழுத்துகள் பயணித்து உள்ளன.

சரியாகக் கூறபோனால் அவரது எழுத்துகளில் 30% மட்டுமே கவிதைகள் மீதி 70% கதைகள், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள், செய்தி குறிப்புகள்.
பாரதி தொடாத விஷயங்களே இல்லை எனலாம். அவரது எழுத்துக்களில் தேசம், தெய்வம், தர்மம் என்ற அனைத்துக் கூறுகளையும் காண முடியும்.
பாரதி வேதாந்தம், சித்தாந்தம், ஆன்மீகம் என பல துறைகளையும் பற்றி எழுதியுள்ளார்.

பாரதி ஒரு சித்தன். ஆம்! அவனது சுயசரிதையின் இரண்டாம் பகுதியான பாரதி அறுபத்தாறு என்ற பாடல்களில் துவக்கத்திலேயே அவன் இவ்வாறு கூறுகிறான் எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தார் அப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்நாட்டில்”

மகாகவி, கட்டுரையாளன், கதைகள் புனைந்தவன், கேலிச்சித்திரக்காரன், யோகி, சித்தன், தேச பக்தன், சக்திதாசன் என பன்முகத்தன்மை படைத்த பாரதி பிறந்தது திருநெல்வேலிச் சீமையில் எட்டையபுரத்தில் சித்திரபானு ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் நாளன்று, அதாவது 11 டிசம்பர் 1882.
தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயர் தாய் ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள் பிறந்தபோது இடப்பட்ட பெயர் சுப்ரமணியன்”, செல்லப் பெயர் சுப்பையா.

சுப்பையா சிறு வயதிலேயே கவிபாடும் தன்மை பெற்றிருந்தான். நாடி எடுத்துக் கொடுத்தால் அதன் அடிப்படையில் கவி புனைந்து விடுவான்.
இவன் பிறந்த ஊரான எட்டையபுரம் ஒரு ஜமீன். அதன் அரசரின் அவையில் தமிழ் புலவர்கள் கூடுவது வழக்கம். இந்தப் புலவர்கள் கூடும் அவையில் சுப்பையா சிறுவனாக இருந்த போதிலும் கலந்து கொள்வான். எட்டையபுரம் சமஸ்தான அரசரின் செல்லப்பிள்ளையாகவும் கருதப்பட்டான்.

சுப்பையாவின் வயது 11 அப்போதே ஸ்ரீ குருகுஹ தாமப் பிள்ளை என்பவரால் எட்டயபுரம் அரசரின் தமிழ் புலவர்கள் கூடுதலில் பங்கு கொள்ளும் ஸ்ரீ சிவ ஞான யோகி என்பவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். சுப்பையாவின் கவிபாடும் திறனைச் சோதித்த ஸ்ரீ சிவ ஞானயோகியார் எட்டையபுர அரசவையில், அரசர் முன்னிலையில் சுப்பையாவுக்கு “பாரதிஎன்ற பட்டத்தை முன்மொழிய, அரசரும், அவைப் புலவர்களும் இதனை வழிமொழிந்தார்கள். இது நிகழ்ந்தது 1893ம் ஆண்டு, அன்று முதல் சுப்பையா ஸ்ரீ சுப்ரமணிய பாரதி என அழைக்கப்பட்டான்.

பாரதி பட்டம் பெற்ற சுப்பிரமணியன் தனது இளமைக் காலத்தைப் பற்றி தனது சுயசரிதையில் கூறும்போது ஆங்கில கல்வியால் தமக்கு எந்தப் பெரும் நன்மையும் உண்டாகவில்லை என தெரிவித்துள்ளான். தான் கற்ற ஆங்கில கல்வி, “புல்லை உண்க என வாளறிச் சேயினை பணித்தது போல இருந்தது என்றும் ஊன் விலை வாணிபம் நல்லது என்று ஒரு பார்ப்பனப் பிள்ளையை ஈடுபடுத்துவது போல் இருந்தது என்றும் செலவு தந்தைக்கு ஓராயிரம் தீது எனக்கு பல்லாயிரம் வந்தன என்றும் கூறியுள்ளான்.

சுப்பையாவின் பள்ளிப் பருவத்தில் இவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ்ப் புலவர் ஸ்ரீ காந்திமதி நாதப் பிள்ளை பாரதியிடம் “பாரதி ஒரு சின்னப்பயல்” என்று ஈற்றடி அமைத்து ஒரு வெண்பா பாட சொன்னார். பாரதி பாடினார் “நான் வயதில் இளையவன், தான் பெரியவன் என்ற அகந்தை கொண்டவன் என்னை இகழ்ந்து ஏளனம் செய்கிறார்” என்று உணர்ந்த பாரதி – “மாண்பற்ற காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல் என காந்திமதி நாதனைப் பற்றி (பார்+அதி = பாரதி), அதி சின்னப் பயல் என பொருள்படும்படி பாடினார்.

பாரதி வயது 15, 1897ஆம் ஆண்டு பாரதிக்கும் ஏழு வயதான செல்லம்மாவும் திருமணம். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த உடன் பாரதி – கவித்திறன் படைத்த பாரதி - தனது மனைவியை பார்த்து “ஒரு காதல் பாட்டு பாடு செல்லம்மா” என்றதும் வெட்கத்தால் மனம் குன்றிவிட்டாள்.

பிரிதொரு நாளில் பாரதியின் மறைவுக்குப் பிறகு ஆல் இந்திய ரேடியோவில் என் கணவர் என்ற தலைப்பில் பாரதியின் மனைவி செல்லம்மாள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது எனக்கு ஒரு சாதாரண கணவர் எல்லோருக்கும் கிடைத்தது போன்ற ஒரு கணவர் கிடைக்கவில்லை, என்ற ஏக்கம் கொண்டேன்! ஆனால் அவருடன் வாழத் தொடங்கிய சில ஆண்டுகளில், யாருக்கும் கிடைக்கப்பெறாத ஒரு மஹா புருஷர் எனது கணவராக கிடைத்தது புரிந்துக்கொண்டேன் என்றார்.

திருமணத்திற்குப் பின் தன் தந்தையை 16 வயதில் இழந்த பாரதி, மேற்படிப்புக்காக காசி சென்று, அங்கு தன் அத்தையின் வீட்டில் தங்கி படித்தார். அப்போது அவருக்கு அன்னிபெசன்ட் அம்மையார், பண்டிட் எஸ் நாராயண அய்யங்கார் ஆகியவர்களுடன் ஏற்பட்டத் தொடர்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பாரதியின் மனதில் பல மாற்றங்கள், தேசிய உணர்வுகள் ஏற்பட வழிவகுத்தது.

காசியிலிருந்து எட்டயபுரம் திரும்பி பாரதியை எட்டையபுரம் சமஸ்தானத்தில் சிலகாலம் பணி புரிந்தார். பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தாற்காலிக உதவித் தமிழ் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து சுதேசமித்திரன் தினசரியின் துணை ஆசிரியராக சென்னையில் ஒரு பொறுப்பேற்றுக்கொண்டார். 1906 இல் தொடங்கப்பட்ட (வங்கப் பிரிவினைக்குப் பிறகு) சுதேசி இயக்கத்தில் பாரதி தன்னை இணைத்துக் கொண்டதும், ஆங்கிலேயர்களின் கழுகு பார்வை பாரதி மீது விழுந்தது. ஆங்கிலேயர்கள் பாரதிக்குப் பல இடர்களையும், கொடுமைகளையும் இழைக்கத் தொடங்கினர்.

பாரதியின் வாழ்வில் பாரத விடுதலை மோகம் கொழுந்து விட்டு எரிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பட்டணம் ஸ்ரீ ஜி.சுப்ரமணிய அய்யர் இவர் ஒரு சுதேசி அபிமானி, தேசியவாதி, இவர் துவங்கியது தான் தி இந்து ஆங்கில நாளேடு. தமிழில் சுதேசமித்திரனையும் இவர்தான் துவக்கினார். இவரது நட்பில் வளர்ந்த பாதி மிகச் சிறந்த தேசபக்தராக, சுதேசி அபிமானியாக மாறியதில் வியப்பொன்றுமில்லை.

பாரத நாட்டின் வரலாறு, பெருமை இவை அழிந்து விடக்கூடாது. “பொய்யாய், பழங்கதையாய்,வாய் ஆகிவிட பாதி விடவில்லை. எனது தாய்நாட்டின் முன்னாள் பெருமையும் இந்நாள் சிறுமையும் போன்ற பாடல்களை எழுதி இந்த நாடு பழம்பெரும் நாடு! பாருக்கெல்லாம் திலகம் என்பதனை உணர்த்தினார் பாரதி.

இந்த நாட்டின் இளைஞர்கள் துடித்தெழ வேண்டும் என்ற ஆசையில், “சிவாஜி தனது சைனியத்தாருக்கு கூறியது போன்ற பாடல்களை எழுதி எழுச்சி ஊட்டினார் பாரதி. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் எழுச்சி கொண்டவை,
பாரத பூமி பழம்பெரும் பூமி
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம்
எனத் தாய் நாட்டுப்பற்றை ஊட்டும் பாரதி கூறுகிறான், “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்தது இந்நாடு என இடித்துரைக்கிறார் இந்த மஹாகவி.

கொல்கத்தாவில் ஒரு காங்கிரஸ் தொண்டரின் பண்ணை வீட்டில் நடந்த விருந்து பச்சாரத்தில் கலந்துகொண்ட பாரதிக்கு அறிமுகம் ஆனார் விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதை. (முன்னாளில் இவர் மார்கரெட் எலிசபெத் நோபல் என்ற பெயர் பெற்றவர்). இவர் மூலம் பெண் உரிமைகள் பற்றிய அறிந்து, பின்னர் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் பாரதி. விவேகானந்தரின் சிஷ்ய ரத்தினங்களில் ஒருவர் என்றும், தனது குருமணி என்றும் சகோதரி நிவேதிதாவை வர்ணித்தார் பாரதி.

“கற்பு நிலை என்று சொல்லுவார்கள் இரு சமூகத்திற்கும் பொதுவில் வைப்போம்”, “ஆணுக்குப் பெண் தாழ்வே ஆமென்பார் சொல்லுக்கு நாணி உறங்கு நீ நகைத்து நீ கண்ணுறங்கு”, “கண்கள் இரண்டிலனில் ஒன்றைக் குத்திக் காட்சிக்கெடுத்திடலாமா” என்றெல்லாம் பாரதி பெண் சக்தியின் அவசியத்தைக் கூறிச் சென்றுள்ளார்.

பாரதி வேதங்கள் குறித்து, வேதாந்தங்கள் – சித்தாந்தங்கள் குறித்து, ஹிந்தி மத சாரங்கள் குறித்து, தேசிய தன்மைகள் குறித்து, சங்கமாக (கூட்டாக) செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து, எல்லாவற்றையும் அவரது கட்டுரைகளில் விளக்கமாக கூறியுள்ளார்.

உபநிடதங்கள் குறித்து எழுதியுள்ள பாரதி, பகவத் கீதையை மொழிப்பெயர்த்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஸ்ரீ பக்கிம் சந்திரர் இயற்றியுள்ள “சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்” எனத் தொடங்கும் “வந்தே மாதர” கீதத்திற்கு இரு மொழிப்பெயர்ப்புகளை பாரதி அளித்துள்ளார்.

மேற்குலத்தவர் எவர்? நல்ல பெருந்தவம் எது? புண்ணிய மூர்த்தி என்பவன் யார்? யோகி என்பவன் யார்? எது யோகம்? எது யாகம்? எது மெய்ஞ்ஞானம்? முக்தி என்பது என்ன? என்று இப்படிப் பல வினாக்களுக்கு பாரதி தனது பாடல்களில், கட்டுரைகளில் விளக்கம் அளித்துள்ளார்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் “தெய்வம் நீ என்று உணர்”, “போர்த் தொழில் பழகு”, “ரௌத்திரம் பழகு”, “வேதம் புதுமை செய்”. “வையத் தலைமை கொள்”, முழுமையும் படித்துணர்வது அவசியம்.

இவரது “பாஞ்சாலி சபதம்” அடிமையுற்றிருந்த பாரத தேவியின் சபதம் என்ற உணர்வை ஊட்டுகிறது. இவரது ஆழ் சிந்தனைகளுக்கு அணை ஏது? தடை ஏது?


பாரதியை – நம் பன்முக பாரதியை – புரிந்துகொள்ள ஒரு ஆயுள் போதாது என்பதை உணர்வோம். அவர் வழி பயணிப்போம்.

Sunday, February 12, 2017

சிறு வயதில் என்னுடைய ஆசிரியர் மழையைப் பற்றிச் சொல்லி தரும்போது, எனக்கு மழையில் நனைகின்ற பரவசம் வந்ததுண்டு. அதே போல "Winter" பற்றி ரைம்ஸ் உண்டு என்று நினைக்கிறேன், இன்றும் சிறு வயது பள்ளி நினைவுகளை "ரெஃப்ரெஷ்" செய்து பார்க்கும் போது அந்த "ரைம்ஸ்" அருகில் போட்டிருக்கும் படம் தான் ஞாபகம் வரும். ஒரு சிறுவன் குளத்தில் நீச்சலடிப்பது போன்ற படம். அந்த படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மழை வந்தால் இப்படித் தான் நாமும் நீச்சலடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

மழைக் காலங்களில் தூரல் போடும் போது நனைவது ஒரு வேடிக்கையான அனுபவம். மாடிக்கு சென்று தூரலில் நனைய ஆரம்பித்துவிடுவேன். ஆனால் அம்மா பார்த்துவிட்டால் அவ்வளவு தான் அடி பின்னிவிடுவார். அப்படி ஒரு நாள் அம்மா அடியில் இருந்து தப்பிக்க ஓடி வந்த போது படியில் இருந்த பாசி தன்னுடைய ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு என்னை வழுக்கிவிட்டது, தாடை கிழிந்து பத்து தையல் போட்டது தான் மிச்சம். அதன் பின்பு மழையில் நனையும் ஆசையை விட்டுவிட்டேன்.

Thursday, February 9, 2017

விவேகானந்தரின் கலங்காத உள்ளம்!!

மே 31, 1893 பம்பாய் துறைமுகத்தில் இருந்து பல நாடுகள் வழியாக அமெரிக்காவின் வான்கூவர் துறைமுகம் சென்றடைய வேண்டிய அந்தக் கப்பல் தயாராக நின்றது.

அதில் பயணிப்பவர்களில் ஒருவராக முப்பதே வயதான காவி உடை அணிந்திருந்த அந்தத் துறவியும் இருந்தார்.

இது அவரின் முதல் கப்பல் பயணம். முதல் வெளிநாட்டுப் பயணமும் கூட. அப்போது அவரிடம் இருந்தவை அவரது காவி உடை, கப்பல் பயணச்சீட்டு, ரொக்கமாக ரூ.4000/-, சிகாகோ நகரில் அவர் சென்றடைய வேண்டிய இடத்தின் முகவரித் துண்டுச் சீட்டு. அவர் தான் சுவாமி விவேகானந்தர்.

46 நாட்கள் பயணம். வழியில் இலங்கை, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, ஜப்பான் துறைமுகங்களில் நின்று சென்றது. அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அவரும் சுற்றிப் பார்த்தார்.

விளைவு- கப்பலில் உணவு போன்ற செலவுகள், நாடுகளைச் சுற்றிப் பார்த்தில் செலவுகள் என கையிருப்பு ரொக்கப் பணம் குறைந்தது. கப்பல் வாங்கூவர் துறைமுகத்தை அடைந்த போது அவரிடம் மிகச் சொற்ப்பமான பணமே இருந்தது.

வான்கூவரில் இருந்து சிகாகோ செல்ல ரயிலில் பயணச் சீட்டு, ரயிலில் ஆறு நாள் பயணம், தற்போதைய செலவுகள் - எல்லாம் சேர்த்து அவர் சிகாகோ ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது ரொக்கப் பணம் சுத்தமாக "இல்லை" என்ற நிலை.

ரயில் பயணத்தின் போது கேட் சேன்பன் (Professor KATE SANBORN) என்ற செல்வந்தரான பெண்மனி, அந்தத் துறவியின் நடை, உடை, பாவணை, கண்ணியமான நடத்தை ஆகியவற்றால் கவரப்பட்டார். அவருக்குத் தேவையான சில சிறுசிறு உதவிகளைச் செய்தார்.

சிகாகோ அடைந்த போது அந்தப் பெண்மணி "தான் பாஸ்டன் நகரைச் சேர்ந்தவர்" என்று தனது பாஸ்டன் நகர் முகவரியை அவரிடம் கொடுத்து, சிகாகோவில் இருந்து திரும்பும் போது தனது பாஸ்டன் இல்லத்துக்கு வந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

அதுவரை பெருத்தக் கஷ்டங்கள் ஏதுமின்றி சென்று கொண்டிருந்த அந்தத் துறவியின் பயணம், திடீரென சில அதிர்ச்சிகளுக்கு உள்ளானது.

  • சிகாகோவை அடைந்த போது அவரது கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது.
  • சிகாகோவில் இவர் சென்றடைய வேண்டிய இடத்தின் முகவரிச் சீட்டு தொலைந்து போய் விட்டது.
  • இக்காலத்தைப் போல் "கைப்பேசி போன்ற" வசதிகள் இல்லாததால் பாரதத்தில் உள்ளவர்களுடன் அவரால் தொடர்பு கொள்ள இயலாத நிலை.
  • அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத நிலை.
  • சிகாகோ பணக்காரர்களின் நகரம். அங்கு பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அது தெரியாமல் சுவாமி விவேகானந்தர் உணவுக்கு பிச்சை எடுக்க முனைந்த போது பலரால் துரத்தப் பட்ட நிலை.
  • மேலும் அவர் கலந்து கொள்ள வந்த அந்த சர்வதேச சமய மாநாடு, ஏற்பாடுகள் முடியாதக் காரணத்தால் ஒரு மாதம் தாமதம் செய்யப்பட்டது. ஜூலை மாதம் மூன்றாம் வாரம் நடக்க வேண்டியது செப்டம்பர் மாதம் 11, 1893க்கு ஒத்திவைக்கப்பட்டது.
  • எனவே சுமார் 1.5 மாதத்துக்கும் மேலாக சிகாகோவில் தங்குவது இயலாதது என்பதும் ஒரு பிரச்சினை.
  • மாநாட்டின் தேதிதான் ஒத்திவைக்கப்பட்டிருந்ததே ஒழிய, மாநாட்டின் பேச்சாளர்கள் முன் பதிவு செய்து கொள்ளும் தேதி மாற்றப்படவில்லை.. முன்பதிவு தேதி முடிந்துவிட்டது.
  • சிகாகோ சர்வசமய மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ள, தான் சார்ந்த இயக்கத்தில் இருந்து சிபாரிசுக் கடிதம்/அத்தாட்சிக் கடிதம் தரவேண்டும். அதைப் போன்ற ஒன்றும் சுவாமி விவேகானந்தரிடம் இல்லை.
  • மேற்கூறிய இரு காரணங்களால் சுவாமி விவேகானந்தர் மாநாட்டில் பார்வையாளராக மட்டுமே கலந்துக் கொள்ள முடியும், பேச்சாளராக அல்ல.


இக்காரணங்களால் சுவாமி விவேகானந்தர் உடனடியாக பாரதம் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அவர் ஒரு திடமான மன சங்கல்பம் எடுத்துக் கொண்டார்... "சிகாகோ சர்வதேச சமய மாநாட்டில் பேசாமல் நாடு திரும்புவதில்லை".. முடியும் என்று நம்பினார் உளப்பூர்வமாக.  "நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு"

அதனால் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்து பாஸ்டன் நகருக்கு வந்தார். முன்னமே ரயிலில் அறிமுகமான திருமதி சேன்பன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்.

திருமதி சேன்பன்  மூலம் ஹார்வார்டு பல்கலைக் கழக பேராசிரியரும், "அமெரிக்காவின் கலைக் களஞ்சியம்" எனப் புகழப்பட்டவருமான பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் (John Henry Wright) என்பவரைச் சந்தித்தார்.

அமெரிக்காவில் மிகச் செல்வாக்கு உடையவரான பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் சுவாமி விவேகானந்தரின் சொல்லாற்றல்,  பணிவு, அறிவுக் கூர்மையால் கவரப்பட்டு, விவேகானந்தருக்கு உதவ முன்வந்தார்.

சிகாகோ சர்வசமய மாநாட்டின் தலைவருக்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகப் படுத்தி, ஒரு சிபாரிசுக் கடிதத்தை பேராசிரியர் திரு ஜே.ஹெச் ரைட் கொடுத்தார்.

"அமெரிக்காவின் மெத்தப் படித்த அனைத்து பேராசிரியர்களையும் ஒன்று சேர்த்தால் கூட ஈடாக முடியாத அறிவாளியை அனுப்புகிறேன். இவரிடம் (சுவாமி விவேகானந்தரிடம்) மாநாட்டில் பேச்சாளராக அறிமுகக் கடிதம்/அத்தாட்சிக் கடிதம் கேட்பது - 'சூரியனிடம் பூமிக்கு ஒளிதர அத்தாட்சிப் பத்திரம் கேட்பது போலாகும்'.."  என அந்தக் கடிதத்தில் பேராசிரியர் ஜே.ஹெச் ரைட் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்துடன் மீண்டும் சிகாகோ சென்ற சுவாமி விவேகானந்தர், சிகாகோ வீதியில் திருமதி ஜார்ஜ் W ஹாலே என்ற பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. சுவாமிஜீயின் கம்பீரமான தோற்றம், கணிவான பேச்சு, கண்ணியமான நடத்தையால் கவரப்பட்ட திருமது ஜார்ஜ் W ஹாலே சுவாமி விவேகானந்தரை சர்வசமய மாநாட்டின் தலைவருக்கு  அறிமுகப்படுத்தினார்.

பேராசிரியர் ஜே.ஹெச் ரைட் ன் சிபாரிசுக் கடிதம் சுவாமி விவேகானந்தரை சர்வ சமய மாநாட்டின் பேச்சாளராக ஆக்கியது.

1893 செப்டம்பர் 11 - திங்கள் கிழமை - காலை மாநாடு துவங்கியது. மாநாட்டின் கடைசிப் பேச்சாளராக சுவாமி விவேகானந்தர் பேசினார்.

தமது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரையும், கலைமகள் சரஸ்வதி தேவியையும் வணங்கி சுவாமி விவேனானந்தர் பேச துவங்கினார். அவரது இதயத்தில் இருந்து ஆத்மார்த்தமாக வார்த்தைகள் வெளிவந்தன.

"அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!!..."

இந்த இதய பூர்வ வார்த்தைகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விளைவு, அனைவரும் எழுந்து நின்று 60 வினாடிகள் கரகோஷம் எழுப்பினர்.

சுவாமி விவேகானந்தர் பேசியது வெறும் 3.5 நிமிடங்களே. ஆனால் பற்பல ஆண்டுகளாக அமெரிக்கர்கள் மனதில் நமது பாரத நாட்டைப் பற்றி நிறைந்திருந்த பல தவறான கருத்துகள் தவிடு பொடியாகின. பாரதத்துக்கு ஒரு புது 'முகவரி' கிடைத்தது.

பாரதம் 'மிக உயர்வான நாடு' என்ற புது முகவரி கிடைக்க சுவாமிஜி ஏற்றுக் கொண்ட பணியில் தான் எத்துனைத் தடைகள், இடர்பாடுகள்?

என்னால் முடியும் என்று நம்பினார் சுவாமி விவேகானந்தர், திட சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இந்தத் தன்னம்பிக்கையும், திட சித்தமுமே தான் அவரது வெற்றியின் ரகசியம்.

நன்றி - திரு ல நடராஜன் அவர்களுக்கு. 
ல நடராஜன் அவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பணியாற்றி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தேசப் பற்று போன்ற எண்ணங்களை விதைக்கும் பணியில் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.